கொஞ்சம் கனவு கொஞ்சம் நிஜம்

நண்பர் ராகவன் கன்னத்திலே கன்னமிட்ட ஒரு பதிவில் பூஞ்சிட்டு கன்னங்கள் என்ற பாடலை குறிப்பிட்டிருந்தார். அற்புதமான பாடல். இளவயதில் கேட்டபோது என்னை குழப்பிய பாடல் வரிகள் அமைப்பு. பின்னர் கண்ணதாசனை கூர்ந்து ரசிக்க ஆரம்பித்தவுடன் சட்டென்று புரிந்த மயக்கும் வரிகள். (பரவாயில்லை. பள்ளியில் மனப்பாடம் செய்த Wordsworth ன் Daffodils ல் வந்த pensive mood அப்போது புரியவில்லை. பின்னர் புரிந்து வியந்த வரிகள்.)

எனக்கு இந்த பாடலை கேட்கும்போது ஏனோ Corporate பட்ஜெட் மீட்டிங் நினைவுக்கு வருகிறது. Reality Check (தமிழில் எப்படி சொல்ல வேண்டும்?) என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லுவார்கள். உயரே கனவுடன் பறக்கும் ஒருவரை தரைக்கு கொண்டு வரும் செயல். கனவுகளை முடிந்தவரை நிஜத்துக்கு பக்கத்தில் வைக்கும் முயற்சி. கண்ணதாசன் அதை துலாபாரம் பாடலில் கொண்டுவந்திருக்கிறார். http://www.youtube.com/watch?v=zsBG59Y0k04

பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

என்று தாய் சொன்னவுடன் தந்தை ‘செல்லக்குழந்தையே இது கனவு நிஜம் வேறு’ என்று சொல்லும்

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

வரிகள். தாய் மனம் தளராமல் குழந்தைக்கு சோறுடன் கனவை ஊட்டுகிறாள். அவள் திருமணத்திற்கு முன் செல்வங்களுடன் வாழ்ந்தவள்

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி

என்று இல்லாத பொன் கிண்ணத்து உணவை பாட தகப்பன் விடாமல் உண்மை விளம்பியாய் தன் ஏழ்மை நிலையை

கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

என்று வலியுடன் சொல்வான். தாயும் உண்மை நிலை அறியாதவள் இல்லை

கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு

என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் சொல்கிறாள். தொடர்ந்து மாணிக்க தேர் போல மயிட்டு பொட்டிட்டு விளையாடும் செல்வங்களை பாடும் தாயும் கண்ணாடி வளையலும் காகித பூக்களும் தான் நிரந்தரம் என்று வாதிடும் தகப்பனும் என்று விளையாடும் வரிகள் திரைக்கதையும் காட்சியமைப்பும் சொல்ல முடியாத உணர்வுகளை பதிவு செய்யும் வித்தை.

இன்னொரு பாடலிலும் இந்த ரியாலிட்டி செக் மாயம் செய்கிறார். தரிசனம் படத்தில் ஒரு பாடலில் காதலுடன் பாடும் பெண்ணை தடுத்து ஆண் பாடும் பாடல் http://www.youtube.com/watch?v=8d_xbq3xFtE

இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்

இதழ் மேலே இதழ் மோதும் அந்த இன்பம் தோன்றுது எனக்கும்

என்று காதல் பற்றி அவள் சொன்னவுடன் அவளை யதார்த்த உலகுக்கு கொண்டு வர ஆண்

இது காலதேவனின் கலக்கம் இதைக் காதல் என்பது பழக்கம்

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்

என்கிறான். காதலி ரொமான்டிக்காக ‘பனியும் நிலவும் பொழியும் நேரம் மடியில் சாய்ந்தாலென்ன’ என்று கேட்டால் இவன் இதையெல்லாம் உலகம் மறந்து உண்மை உணர வேண்டும் என்று பாடுகிறான். இது ஓட்டை வீடு இதற்குள்ளே ஆசையென்ன என்று கேட்கிறான். பெண் சலிப்புடன்

முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே

தினம் மூடி மூடிஒடினாலும் தேடும் வாசல்தானே

என்றால் இவன் பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கானல் நீரே என்று துறவறம் பேசுகிறான். மாறி மாறி வெவ்வேறு உணர்வுகளை பதிவு செய்யும் இந்த இரு பாடல்களும் சரியான ரியாலிட்டி check.

மோகன கிருஷ்ணன்

063/365