பாட்டானவன்

நேற்றோடு (25-மே-2013) ஒரு வீணையின் நரம்பு அறுந்தது!
ஒரு புல்லாங்குழலின் இசைத்துளைகள் மூச்சு விட மறந்தன!
மேளம் ஒன்று தாளங்களை எல்லாம் மறந்து பாளமானது!
தமிழ்நாட்டின் பிதாமக இசைக்குயில் ஒன்றின் குரல் நின்று போனது!

ம்ம்ம். ஆர்மோனியத்தின் காற்றுப் பைகளுக்கும் மூச்சுத்திணறல் வருமென்று யாருக்குத் தெரியும்!

ஆம். ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன் இன்று நம்மோடு இல்லை. அவர் வணங்கிப் பாடிய தமிழ்க்கடவுள் முருகப் பெருமான் திருவடியில் அவர் ஆன்மா அமைதியை அடைந்திருக்கும்.

ஆனால் அவர் குரலால் உயிர் பெற்ற பாடல்கள் நம்மோடு இன்றும் ஊடாடிக் கொண்டு இருக்கின்றன.

அவர் பாடிய சில பாடல்களைக் கொஞ்சமேனும் நினைத்துப் பார்ப்பதே நாம் அவருக்குச் செய்யும் சிறப்பான அஞ்சலியாகும்.

எத்தனையோ கவிஞர்கள் எழுதிய பாடல்களை அவர் உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளார். அவையெல்லாம் திரைப்படப் பாத்திரங்களுக்குப் பொருத்தமான பாடல்கள். ஆனாலும் சில கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகள் அவருக்குப் பொருத்தமாக இருக்கும். அப்படியான சில பாடல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாட்டும் நானே பாவமும் நானே” என்ற கா.மு.ஷெரீப்பின் வரிகளைப் பாடச் சிறந்த பாடகர் வேறு யாராக இருக்க முடியும்?! திருவிளையாடல் திரைப்படத்தில் மதுரையின் தலைவன் சொக்கநாதனுக்கு மதுரை தந்த சௌந்தரராஜன் பாடியது மிகப் பொருத்தம்.

அந்தப் பாடலின் அடுத்தடுத்து வரும் இன்னொரு வரியும் மிகப் பொருத்தம். “அசையும் பொருளில் இசையும் நானே”. உண்மைதான். திரையில் அசையும் பொருளில் (நடிகர்களின் பிம்பம்) இசையாக இருந்தது அவர் குரல்தான். முப்பதாண்டுகள் திரையில் ஒலித்த குரலல்லவா!

கா.மு.ஷெரீப் மட்டும் தானா? இல்லை. வாலியும் இந்தப் பட்டியலில் உண்டு. ஒரு மிக அருமையான பாடலை எழுதினார். அந்தப் பாடலைப் பாடியவரும் நடித்தவரும் ஒருவரே. ஆம். கல்லும் கனியாகும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் டி.எம்.சௌந்தரராஜன். அந்தப் படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.

ஒரு இசைக்கலைஞனின் கதை. ஏழை. ஆனால் உடம்பெல்லாம் இசை ஆர்வம். உணர்வெல்லாம் இசை வேகம். தன்னுடைய குரலின் திறமையைக் காட்ட ஏதேனும் ஒரு வழி வேண்டுமல்லவா! ஒரு சிறிய இசைக்கருவி ஒன்றைச் செய்கிறான். அதை வாசிக்க வாசிக்க இசையூற்று பொங்கிப் பெருகுகிறது. அந்த மகிழ்ச்சியில் பாடுகிறான்.

கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
இசையின் மழையில் நனைந்து
இதயம் முழுதும் குளிர்ந்து

வாலி எழுதியது அந்தப் பாத்திரத்தை விடவும் டி.எம்.எஸ் அவர்களுக்கு மிகவும் பொருந்தும். டி.எம்.எஸ் குரலில்தான் பலப்பல தமிழ் கீதங்கள் வளர்ந்தன என்றால் மிகையாகாது. அவருடைய உச்ச காலகட்டத்தில் அவர் பாடாத நடிகர் யார்! அவருடைய குரலிசை மழையில் உலகத் தமிழர்கள் நனைந்தார்கள்… இன்னும் நனைந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

அடுத்து வைரமுத்து எழுதினார். இசைஞானி இளையராஜாவின் இசையில் எழுதிய அவருடைய வரிகள் இன்று பழைய பாடல்களை ரசித்து ருசித்த மக்களின் ரசனையை பிரதிபலிப்பதாக உள்ளது.

தாய்க்கு ஒரு தாலாட்டு திரைப்படத்தில் இடம் பெற்ற “இளமைக்காலம் இங்கு என்று திரும்பும்” என்ற பாடலில் “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று டி.எம்.எஸ் குரலாலே ஆதங்கத்தைப் பதிவு செய்தார். அதை உண்மை என்றுதான் என் மனம் நம்புகிறது. பழைய பாடல்களில் இருந்த குரல் வித்தைகளும் உச்சரிப்புச் சிறப்புகள் இன்றைய பாடல்களில் இல்லாமலே போனது சோகம் தான்.

அடிப்படையில் டி.எம்.சௌந்தரராஜன் வைணவக்குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அவர் விரும்பி உருகி வணங்கியது என்னவோ தமிழ்க்கடவுள் முருகனைத்தான். அதனால்தானோ என்னவோ அவர் பாடிய முருகன் பாடல்கள் காலத்தையும் தாண்டி நிற்கின்றன.

அவருடைய முருகன் மீதான அன்பையும் ஊர் ஊராகச் சென்று முருகன் பாடல்களைப் பாடும் பண்பையும் கவிஞர் குழந்தைவேலன் எழுதிய ஒரு முருகன் பாட்டில் உணரலாம்.

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே
அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே
கன்னித்தமிழ் பாடுவது புது சுகமே அதில்
காண்பதெல்லாம் கந்தன் கவிநயமே

கவிஞர் குழந்தைவேலன் வரிகளுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.சௌந்தரராஜன் அவர்களே. ஒவ்வொரு வரியும் டி.எம்.எஸ் அவர்களுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. அவ்வளவும் முருகனருள்.

கவியரசர் கண்ணதாசன் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற பாடலில் சொன்ன ”இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு” என்ற வரிகளை டி.எம்.எஸ் பாடுவது மிகப் பொருத்தம்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் ஒரு பாடல் எழுதினார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் அகத்தியர் படத்தில் டி.எம்.எஸ் பாடிய அந்தப் பாடல் வரி டி.எம்.எஸ் அவர்களுக்கு மிகமிகப் பொருத்தம்.

நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்

உண்மைதான். டி.எம்.எஸ் குரலில் கிளம்பிய நாதம் தமிழ் நாட்டை வென்றது உண்மைதான்.

தமிழ்த்திரையிசையிலும் முருகனருள் பாடிய பக்தியிசையிலாகட்டும் அவருடைய சாதனைகள் இன்னும் வேறு யாராலும் முறியடிக்கப்படாதவை. முறியடிக்கப்பட முடியாதவை.

அவருடைய பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் டி.எம்.எஸ் என்ற மகாகலைஞன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற எண்ணம் பெருமிதத்தைக் கொடுக்கும்.

பதிவில் இடம் பெற்ற பாடலின் சுட்டிகள்
பாட்டும் நானே பாவமும் நானே (கே.வி.மகாதேவன்/கா. மு. ஷெரீஃப்) – http://youtu.be/BAVFuEqqV-k
கை விரலில் பிறந்தது நாதம் (எம்.எஸ்.விசுவநாதன்/வாலி) – http://youtu.be/Bp8kuO1Dq-o
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் (டி.எம்.எஸ்/குழந்தைவேலன்) – http://youtu.be/2lOr4vZVueY
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு (கே.வி.மகாதேவன்/கண்ணதாசன்) – http://youtu.be/ICSeUl6j66E

அன்புடன்,
ஜிரா

176/365