கல்லிலே கலைவண்ணம் கண்டோர்

சென்னையில் எங்கள் அலுவலகம் வரும் அமெரிக்கர்களும்  ஐரோப்பியர்களும் மற்ற நாட்டினரும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம் பிடிப்பது இரண்டு இடங்கள் – ஒன்று பனகல் பார்க் புடவை கடைகள் இன்னொன்று மாமல்லபுரம். ஒருமுறை ஜப்பானிலிருந்து வந்தவர்களுடன் மாமல்லபுரம் செல்ல வேண்டியிருந்தது. பார்த்த இடம்தான். ஆனால் உடன் வந்தவர்களின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொள்ள, எல்லா இடங்களையும் ஆர்வத்துடன் பார்த்தோம்.

அதில் ஒருவர் கையில் இருந்த Lonely Planetல் இந்த இடம் பற்றி நிறைய விவரங்கள் படித்திருந்தார். அங்கே அவர் பார்த்த சிற்பங்களை Poetry in Stone என்று குறிப்பிட்டார். அட இது கல்லிலே கலை வண்ணம் தானே? குமுதம் படத்தில் கவி கா மு ஷெரிப் எழுதிய கல்லிலே கலை வண்ணம் என்ற பாடல் வரிகள்  (இசை கே வி மகாதேவன் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் )

http://www.youtube.com/watch?v=g-HUpdB_OeI

கல்லிலே கலைவண்ணம் கண்டான் – இரு

கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

பல்லவர் கோன் கண்ட மல்லை போலப்

பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை

சொல்வதும் இதைத்தானே?

வா ராஜா வா படத்தில் மாமல்லபுரத்தின் சிறப்பு பற்றி அழ வள்ளியப்பா எழுதிய பாடல் (இசை குன்னக்குடி வைத்யநாதன் பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி).  http://www.youtube.com/watch?v=TlR7UH3D-J8

கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா

அந்த கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா

ஓட்டுக்கல்ல சேர்க்காம ஒரே கல்ல குடைஞ்செடுத்து

கட்டிவெச்சான் மண்டபத்தை பல்லவ ராஜா அதை

கச்சிதமா சொல்ல வந்தேனே சின்ன ராஜா

கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்

எப்படித்தான் செஞ்சானோ பல்லவ ராஜா

அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா

சர்வர் சுந்தரம் படத்திலும் மகாபலிபுரம் பற்றி கண்ணதாசன் எழுதிய ஒரு அருமையான பாடல் உண்டு.(இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா & குழுவினர்)

http://www.youtube.com/watch?v=Uz_OGjZoPro

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

ஆட விட்டான் இந்த கடலினிலே

படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்

பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்

கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்

காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்…

அன்னமிவள் வயதோ பதினாரு

ஆண்டுகள் போயின ஆறுநூறு

இன்னும் இவள் முதுமை எய்தவில்லை

என்னதான் ரகசியம் தெரியவில்லை

கல்கி சிவகாமியின் சபதத்தின் முன்னுரையில் “கையிலே பிடித்த கல்லுளிகளையே மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இந்த மகேந்திர ஜாலங்களைச் செய்தார்களோ என்று நினைக்கும்போது அந்தச் சிற்பிகளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது” என்று எழுதியிருந்தார். எனக்கும்தான்.

மோகனகிருஷ்ணன்

259/365