வெண்ணிலவே வெண்ணிலவே

‘தமிழ்நாட்டில் கண்ணை மூடிக்கொண்டு கல்லெறிந்தால் அது ஒரு கலைமாமணி மேல் விழும் சாத்தியம் மிக அதிகம்’ என்று ஒரு விழாவில் சோ அவர்கள் சொன்னார். .அதே போல திரைப்பாடல்களில் நிலா பாடல்கள் மேல் தான் விழும். . நிலவும் மலரும் அவளும் தான் கவிஞனுக்கு inspiration. காதல் , திருமணம், காதல் தோல்வி, என்று பல நிலைகளில் காதலனோ காதலியோ நிலவை சாட்சிக்கு அழைக்கும் பல பாடல்கள். நடைபாதை CD / MP3 கடைகளில் நிலா பாடல்கள் என்று ஆல்பம் வந்துவிட்டது.

நிலவு பற்றி கவிஞர்களின் கற்பனை எப்படி இருக்கிறது? நிலவின் அழகு மட்டும்தான் அவன் கண்ணுக்கு தெரிகிறதா? நிலவின் மற்ற அம்சங்கள் பற்றி ஏதேனும் சொன்னதுண்டா? முத்துக்குளிக்க வாரீகளா ?

திரைப்பாடல் வரிகளை கொஞ்சம் உரசிப்பார்த்தால் வள்ளுவனும் கம்பனும் அகநானூறு புறநானூறு மற்ற இலக்கியங்கள் என்று ஏராளமான ஆச்சரியங்கள். பாரி மகளிர் பாடிய அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் என்ற வரிகளை அழகாக / எளிமையாக மாற்றி ‘

அன்றொரு நாள் இதே நிலவில்

அவள் இருந்தாள் என் அருகில்’

என்று சொன்ன கண்ணதாசன் வரிகள் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. திருநீலகண்டரின் மனைவி சொன்ன ‘என்னை தொடாதே’ என்பதை கண்ணதாசன் எப்படி சொல்கிறார் பாருங்கள்?

நிலவைப்பார்த்து வானம் சொன்னது

என்னைத் தொடாதே

நிலவு தேய்கிறது என்பதையும் கவிதையாக சொன்னார் சூரியகாந்தி படத்தில் தாழ்வுணர்ச்சியில் வாடும் கணவன் மனைவியைப்பார்த்து பாடும்

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

வரிகளில் தேயாமலே தேய்வதை புரியவைக்கிறார்.

வள்ளுவன் ‘மதியும் மடந்தை முகனும் அறியா ‘ என்ற குறளில் மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன என்று சொன்ன கருத்து கவி கா மு ஷெரிப் அவர்களுக்கு ஒரு தூண்டுதலாகி

வானில் முழு மதியை கண்டேன்

வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்

வானமுழு மதியை போலே

மங்கை அவள் வதனம் கண்டேன்…!

என்ற சிவகாமி படத்தில் TMS பாடிய பாடல் வரிகளாகிறது. 

http://www.youtube.com/watch?v=U4cmuER-PxI.

வாலி இந்தக்கருத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார் . தெய்வத்தாய் படத்தில்

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்

பார்த்தேன் நிலவில் குளிரில்லை

ஒரு நிலவு ஒரு பெண் இதில் யார் அழகு? வாலிக்கு இதில் குழப்பமில்லை. காதல் தரும் மயக்கம் – நிலவும் மலரும் ஈர்க்கவில்லை என்கிறார். உயர்ந்த மனிதன் படத்தில் வரும் வாலியின் இன்னொரு பாடல் http://www.youtube.com/watch?v=l_SpGUaXUqs 

நாளை இந்த வேளை

பார்த்து ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை

சென்று வா நிலா

இந்த பாடல் ஒரு நர்சரி Rhyme போல் இருக்கிறது.

Rain Rain Go away

Come again another day

Little Johny wants to play

என்ற மழலை மொழியை வைத்து காதலியின் சோகம் சொல்லி அசத்தும் வரிகள். வாலியின் இன்னொரு கற்பனையும் அபாரம். மகாநதி படத்தில் ‘பேய்கள நம்பாதே’ பாடலில் http://www.youtube.com/watch?v=465RsI5PNOo

வீராதி வீரன் நீ என்று உலவு

ஓர் நாளும் திசையை மாற்றாது நிலவு

என்று அறிவுரை. வாவ் வாலி!

வைரமுத்துவும் முகிலெடுத்து முகம் துடைத்த நிலவின் கதை சொன்னவர்தான். நிலாவை ‘ராசாவுக்காக’ கையில புடிச்சவர்தான் . அவர் முதல் மரியாதையில் ராசாவே உன்ன நம்பி பாடலில் எழுதிய அழகான வரிகள்

களங்கம் வந்தாலென்ன பாரு

அதுக்கும் நிலான்னு தான் பேரு

நிலவே நெருங்காதே என்று செல்லமாக சொன்னாலும் வானமுழு மதியைப் பற்றி பாடாமல் இருக்க முடியுமா?

மோகனகிருஷ்ணன்

141/365