ஜில்லுன்னு ஒரு காதல்

  • படம்: நளனும் நந்தினியும்
  • பாடல்: தூங்காம உன்னை சுத்திச் சுத்தித் திரியுறேன்
  • எழுதியவர்: நிரஞ்சன் பாரதி
  • இசை: அஷ்வத்
  • பாடியவர்கள்: பலராம், சின்மயி

வெயிலும்தான் சுடுமா? அருகில் நீ உள்ளபோது!

பிரிவுதான் சுடுதே! சொல்ல வார்த்தைகள் ஏது!

கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராமன் காட்டுக்குச் செல்லத் தயாராகிறான். சீதையிடம், ‘நான் ஜஸ்ட் பதினாலு வருஷத்துல திரும்பி வந்துடுவேன், நீ சமர்த்தா வீட்டைப் பார்த்துகிட்டுச் சௌக்கியமா இரு’ என்கிறான்.

சீதை மறுக்கிறாள், ‘நானும் உம்மோட வருவேன்!’ என்கிறாள்.

ராமன் சிரிக்கிறான், ‘கண்ணும்மா, காடுன்னா என்ன பிளாஸ்டிக் கூடை, ஜமுக்காளத்தோட பிக்னிக் போற எடம்ன்னு நினைச்சியா? ரொம்ப ஆபத்தான ஏரியா, எப்பப்பார் வெய்யில் கொளுத்தும், சிங்கம், புலி, மிருகங்கள்லாம் வரும், பூச்சிங்க கடிக்கும், திருடங்க, அரக்கர்ங்க தொல்லைவேற, நீ மென்மையா வளர்ந்தவ, அதெல்லாம் உனக்குச் சரிப்படாதும்மா!’

அதற்கு சீதை சொல்லும் பதிலாகக் கம்பன் எழுதியுள்ள பாடலில் ஒரு பகுதி:

’அருக்கனும்

எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்

பிரிவினும் சுடுமோ பெரும் காடு?’

’மிஸ்டர் ராமன், என்னவோ அந்தக் காட்டுல சூரியன் சுடும்ன்னு பெருசாப் பயமுறுத்தறீங்களே, உம்மைப் பிரிஞ்சு தனியா வாழற வேதனையைவிடவா அது என்னைச் சுட்டுடும்?’

கம்பனின் அற்புதமான இந்தக் கேள்வியை, இந்தக் காதல் பாடலில் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் நிரஞ்சன் பாரதி. இதைக் கேட்டதுமுதல், ‘நின் பிரிவினும் சுடுமோ பெரும் காடு’ என்ற வரியைமட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி ரசித்துக்கொண்டிருக்கிறேன். எத்துணை அழகு!!

***

என். சொக்கன் …

11 06 2013

192/365

பின்குறிப்பு:

சில தினங்களுக்குமுன்பாக வைத்த ‘திரைப்பாடல்களில் இல்பொருள் அணி’ போட்டிக்குப் பிரமாதமான வரவேற்பு. பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!

ஒரே குறை, வந்தவற்றில் பெரும்பாலானவை இல்பொருள் அணியே அல்ல, அநேகமாக 70%க்குமேல் உயர்வு நவிற்சியும் தற்குறிப்பேற்றமும்தான் இருந்தது. அவற்றை நீக்கி, மீதமுள்ளவற்றில், என் கணிப்பில் அழகானதாக இந்த வரியைத் தேர்வு செய்கிறேன்: ’இருட்டில்கூட இருக்கும் நிழல் நான்’ (எழுதியவர் வாலி, தேர்வு செய்தவர் இன்பா)

வாழ்த்துகள் இன்பா, nchokkan@gmail.comல் உங்கள் இந்திய முகவரியைத் தந்தால், பரிசை அனுப்பிவைக்கிறேன்!

By the way, இந்த வரி இல்பொருள் உவமை அல்ல, உருவகம் 🙂