எல்லார்க்கும் சொந்த மொழி

நீண்ட நாட்களாகவே விடை தெரியாத கேள்வி ஒன்று என்னிடம் உண்டு. இன்று அந்தக் கேள்வியை எடுத்து வைத்து யோசிக்க முடிவு செய்தேன். கேள்வி என்ன தெரியுமா?

இந்தியாவில் இருக்கும் நாயை பிரான்சில் விட்டால் அங்கிருக்கும் நாயோடு குலைத்துப் பேச முடியும். அதே போல எந்தவொரு விலங்கும் உலகில் அதன் வகையைச் சார்ந்த இன்னொரு விலங்கோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

ஆனால் மனிதன்?

நாடு விட்டு நாடு என்ன… மாநிலம் விட்டு மாநிலம் போனாலே ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு புரிவதில்லை. அதை விடுங்கள். ஒரே மாநிலத்துக்குள்ளேயே ஒரே மொழி பேசுகின்றவர்களுக்கு வட்டார வழக்குகள் எளிதில் புரிந்து விடுவதில்லை.

தெக்கத்திப் பக்கம் பிள்ளை என்பது பெண்பிள்ளையைக் குறிக்கும். “அந்தப் பிள்ளையோட பேசுனியா?” என்றால் “அந்தப் பெண்ணோடு பேசினாயா?” என்று பொருள். வடதமிழ் மக்களுக்கு இது வித்தியாசமாகத்தான் இருக்கும். அதே போல தென் தமிழ்நாட்டின் அழுத்தமான சகர(cha) உச்சரிப்பு வடதமிழ் மக்களுக்கு நகைச்சுவையாகத் தெரியும்.

நண்பனிடம் பேசும் போது “அந்த எடம் கிட்டக்கதான் இருக்குது” என்று சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை. “அந்த எடம் பக்கத்துலதான் இருக்குது” என்று சொன்னதும் எளிதாகப் புரிந்துவிட்டது.

உலகில் எந்த உயிரினத்துக்குமே மொழி தேவைப்படாத போது…. மனிதனுக்கு மட்டும் ஏன் மொழி தேவைப்படுகிறது?

இதுதான் என்னுடைய கேள்வி.

மொழி என்பது தகவல் பரிமாறிக் கொள்ள உதவும் கருவி என்று எளிதாக விடை சொல்லி விடலாம்.

ஆனால் மனிதன் மட்டுமே தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறானா?

வண்ண மலர்களும் விண்ணின் மேகங்களும் மண்ணின் மரங்களும் மலையின் காற்றும் இரவின் நிலவும் நீரின் அலையும் இன்னபிறவும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்லையா!

பேசாத மலர்தான் வண்டுகளை அழைத்து தேனைக் கொடுத்து மகரந்தச் சேர்க்கை நடத்துகிறது.

உடம்பே இல்லாத காற்றுதான் மூங்கிலின் ஒவ்வொரு துளையிலும் பயணம் செய்து இசையை உண்டாக்குகிறது.

உயிரே இல்லாத மேகம்தான் கடலில் இருக்கும் உப்புநீரிலிருந்து நல்ல நீரை மட்டும் எடுத்து வந்து மழையாகப் பெய்கிறது.

எப்போதும் நிரம்பித் தளும்பும் கடல்தான் அலைகளைக் கொண்டு நிலமகளை திரும்பத் திரும்ப தழுவி மகிழ்கின்றது.

அப்படியென்றால் அவைகளின் மொழி எது?

உடனே எனக்கு நினைவுக்கு வந்தது கவிஞர் வைரமுத்து எழுதி வித்யாசாகர் இசையில் வெளிவந்த மொழி திரைப்படப் பாடல்தான்.

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதலின் மொழி விழியா இதழா

காதலனைப் பார்த்ததும் “மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ” என்றுதான் திரிகூட ராசப்பரும் எழுதியிருக்கிறார். இதில் மொழியைப் பேசும் இதழே வரவில்லை. ஆக காதலுக்கு மொழி தேவையில்லை.

காதலுக்கு மட்டுமல்ல… எதற்குமே மொழி தேவையில்லை. இயற்கையோடு இயற்கையாய் வாழும் போது பேசுகின்ற மொழிகள் எதுவும் தேவையில்லை.

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

பாட்டில் கவிஞர் வைரமுத்து சொல்லியிருப்பது மிக நியாயமான கருத்து.

ஒரு மழை நேரத்தில் சன்னலோரத்தில் தேநீர்க் கோப்பையோடு அமருங்கள். தேநீரின் இனிய நறுமணம் மென்புகையாய் நாசியோடு பேசும். அதன் இன்சுவை நாவோடு பேசும்.

கொட்டும் மழையின் சொட்டுகள் நிலமெனும் பறை தட்டிப் பேசும். வீட்டின் கூரையிலிருந்து சொட்டும் துளிகள் தரையில் தேங்கிய நீரில் ஜலதரங்கம் வாசிக்கும். ஒளிந்திருக்கும் தவளைகள் கடுங்குரலில் மகிழ்ச்சிப் பண் பாடும். மழை நின்றதும் எல்லா நிறங்களையும் ஏழு நிறங்களுக்குள் அடக்கிக் கொண்டு வானவில் புன்சிரிக்கும்.

நீங்கள் ரசிகராக இருந்தால் இந்நேரம் அழுதிருப்பீர்கள். அது உங்கள் கண்கள் பேசும் மொழி.

வானம் பேசும் பேச்சு – துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு – நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் – கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் – நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் சாமத்தில் – உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் – அசைவு கூட மொழியாகும்

இப்போது சொல்லுங்கள். மொழி என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா? இல்லை. இயற்கை ஒவ்வொன்றிருக்கும் மொழியைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. மனிதன் மட்டும் அதை வைத்துக் கொண்டு சண்டை போடுகிறான்.

பாடல் – காற்றின் மொழி ஒலியா
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடகர் – பல்ராம்
இசை – வித்யாசாகர்
படம் – மொழி
பாடலின் சுட்டி – http://youtu.be/hs5cj3xPAhA

அன்புடன்,
ஜிரா

293/365