இருக்கும் இடத்தை விட்டு…

ஒரு இடத்திலிருந்து விலகி இன்னொரு இடத்துக்கு நகர்ந்து வாழ்க்கையை தொடரவேண்டிய கட்டாயம் நம் எல்லாருக்கும் உண்டு. நூறு  காரணங்கள். படிப்புக்காக, வேலை, திருமணம், சொந்த வீடு வாங்கி, பிரபல பள்ளியின் பக்கத்தில், என்று வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு காரணங்கள். வீடு மாறி ஊர் மாறி நாடு விட்டு நாடு மாறி என்று வாழ்வில் நடக்கும் இடம் பெயர்தல் மகிழ்ச்சி தரலாம் சில சமயங்களில் வலியாகவும் இருக்கலாம்.

ஒரு பெண்ணின் வாழ்வில் இந்த இடமாற்றம் திருமணம் சார்ந்து நடக்கும்.(கால மாற்றத்தில் இப்போது இது ஆண்களுக்கும் நடக்கிற நிகழ்வு)  இது ஒரு mixed feeling தருணம். புது வாழ்வு தொடங்கும் மகிழ்ச்சியான நேரம். ஆனால் வளர்ந்த வீட்டையும் தாய் தந்தை உடன்பிறப்புகள் என்று கூடவே வாழ்ந்தவர்களைப் பிரிந்து இன்னொரு குடும்பம், வேறு வீடு, பல சமயங்களில் வேறு ஊர் /நாடு என்று போக வேண்டிய வேளை. பிரிவின் வேதனையை வைரமுத்து வண்டி மாடு எட்டு வச்சு என்ற பாடலில் (படம்: கிழக்குச் சீமையிலே இசை: ஏ.ஆர். ரஹ்மான் பாடியவர்கள் : ஜெயசந்திரன், எஸ். ஜானகி) அழகாக பதிவு செய்கிறார்.

http://www.inbaminge.com/t/k/Kizhakku%20Cheemaiyile/Kathalang%20Kattu.eng.html

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா

வாக்க பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா

பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு

பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

சரி மாற்றம் மகிழ்ச்சியும் தருமா?  யாரும் விளையாடும் தோட்டம் என்ற பாடலில் ஒரு கூட்டம் சந்தோஷமாக இடம் பெயர்வதைச்  சொல்லும் இளையராஜாவின் வரிகளை  பாருங்கள்  (படம்: நாடோடித் தென்றல், பாடியவர்கள்  சித்ரா, மனோ, இசை: இளையராஜா) 

http://www.inbaminge.com/t/n/Naadodi%20Thendral/Yarum%20Vilaiyaadum.eng.html

யாரும் விளையாடும் தோட்டம்

தினந்தோறும் ஆட்டம் பாட்டம் போட்டாலும் பொறுத்துக் கொண்டு

பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு

ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

இந்தப்பாடலில் நாடோடிகளின் வாழ்வியல், அவர்கள் ஊர் மாற என்ன காரணங்கள் பற்றி நண்பர் @naaraju  சொல்லும் விளக்கங்கள் இந்த  பதிவில் காணலாம்.

ஆனால் கூட்டமாக இடம் பெயர்வது எப்போதும் மகிழ்ச்சியான நிகழ்வாகவே இருக்கும் என்பதில்லை. வெள்ளம், வறட்சி, போர் என்று பல நிர்ப்பந்தங்களால் நிகழும் இடமாற்றம் மிகுந்த வலி தரக்கூடியது. வைரமுத்து கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எழுதிய விடை கொடு எங்கள் நாடே என்ற பாடல் வரிகள் (இசை: AR ரஹ்மான் பாடியவர்கள்: MS விஸ்வநாதன் AR ரெஹனா, பால்ராம், ஃபெபி மணி) இடம் பெயரும் வலியை சொல்கிறது

http://www.youtube.com/watch?v=QX0aLn580dg

விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே

பனை மர காடே பறவைகள் கூடே

மறுமுறை ஒரு முறை பார்ப்போமா

உதட்டில் புன்னகை புதைத்தோம்

உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

பள்ளிக்கூடம் போக முரண்டு பிடிக்கும் குழந்தையைப் போல் வாழ்ந்த வளர்ந்த இடத்தின் இதமான கதகதப்பில் இருந்து வெளியே வர மறுக்கும் மனம் படும் வேதனையை காட்சியாய் சொல்லும் வரிகள்.

மாற்றம் தான் நிரந்தரம். அது மகிழ்வான நிகழ்வாக அமைவது வரம்.

மோகனகிருஷ்ணன்

184/365