விருந்தினர் பதிவு : தோட்டம்

பாடல் : யாரும் விளையாடும் தோட்டம்.

படம்: நாடோடித் தென்றல்.

எழுதி இசையமைத்தவர்: இளையராஜா.

பாடியோர் : சித்ரா,மனோ.

இளையராஜாவை நாம் இசையமைப்பாளராகக் கொண்டாடிய அளவிற்கு, பாடலாசிரியராகக் கொண்டாடவில்லை என்று படுகிறது. மெட்டுகள் மட்டுமல்ல,மெட்டுகளுக்கேற்ப எளிமையினும் எளிமையான வார்த்தைகளைப் போட்டு, அருமையாக அமர வைப்பது இராஜாவிற்கு கை வந்த கலை. உதாரணத்திற்கு ‘யாரும் விளையாடும் தோட்டம்’ (நாடோடித் தென்றல்) பாடலை எடுத்துக் கொள்வோம். வாத்து மேய்க்கும் நாடோடிக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண், புது இடமொன்றை கண்டடைய வேண்டிச் செல்லும் வழியில் பாடும் பாடல்.

“போட்டாலும் பொறுத்துக்கொண்டு,

பொன்னு தரும் சாமி;

இந்த மண்ணு நம்ம பூமி”

என்று ‘நிலமெனும் நல்லாளை’ இறை வணக்கம் போல வைத்துப் புகழ்ந்து விட்டு, அவளுடைய வாழ்வியல் தேவைக்கு வருகிறாள் நாயகி.

“கோபங்கள் வேணாம் கொஞ்சம் ஆறப் போடு

ஆறோடும் ஊரப் பார்த்து டேராப் போடு”

இவளுடைய தொழிலோ வாத்து மேய்த்தல். வாத்துகளுக்கு இன்றியமையாதது நீர். போலவே மனிதர்களுக்கும். ஆதலால், ஆறைப் பார்த்துப் போடு டேரா! எளிமையாக வரும் கிராமியத் தமிழில் இந்த ‘டேரா’ என்ற வடமொழிச் சொல் இடறுகிறதா…? டேரா என்றால் ஓரிடத்தில் தற்காலிகமாக‌ குடில் அமைத்துத் தங்குதல். (சீக்கிய மத குரு இராம் ராய் என்பவர்,பள்ளத்தாக்கு ஒன்றில் குடிலமைத்துத் தங்கியதாலேயே, அவ்வூருக்கு ‘டேராடூன்’ என்று பெயர் வந்தது) பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் கொஞ்சம் நீக்கு போக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதால், அந்த கோபங்கள் வேண்டாமெனும் சிறு அறிவுரை. இதே பாடலின் சரணத்தில் வரும் மற்றொரு வரியான “ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒண்ணு” என்பதைப் பார்த்தால் சிறு விஷயமாகத் தோன்றலாம். மாநிலங்களுக்கிடையிலான சமகால நீர் அரசியலைப் பொருத்திப் பாருங்கள்.விளங்கும்!

பல்லவியில், தன் வாழ்வியலைப் பாடியவள், சரணத்தில் ஊர் அடைந்ததற்கான மகிழ்ச்சியைப் பாடுகிறாள்.  ”ஆஹா! இந்த ஊர்ல் மணிமாடம்,பள்ளிக்கூடம்ல்லாம் இருக்கு. என்ன, ஊர் மனுஷங்களுக்குள்ளதான் சின்ன சின்ன வம்பு தும்பு இருக்கு. அதனலென்ன, எல்லா ஊர்லயும் இருக்கறதுதானே.” என்பது மாதிரியான சமாதானத்துடன் கூடிய மகிழ்ச்சி!

“தேடவும் பள்ளு பாடவும் பள்ளிக்கூடம் உண்டு”

இங்கு பள்ளு என்பது தமிழின் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. ’ஆடுவோமே, பள்ளு பாடுவோமே’ என்ற சுதந்திர தினப் பாடல் நினைவிற்கு வருகிறதா..? மேலும் பள்ளு என்பதில் ஞானப்பள்ளு, சீர்காழி பள்ளு, குற்றாலப் பள்ளு என பலவகைகள் உண்டு. அது சரி, ஏன் குறிப்பாக ‘பள்ளு’வைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு குறவஞ்சியையோ, பரணியையோ, உலாவையோ பாடியிருக்கக் கூடாதா..? காரணம் இருக்கிறது. பாடலின் நாயகி, ஆற்றைத் தேடிப் போகின்றாள். ஆறு என்பது மருதத்திணையின் நீராதாரம். ’பள்ளு’ -வும் கூட மருத நிலத்தின் இலக்கியம். அதனால்தான் அவ்வூரின் பள்ளிக்கூடத்தில், குறிப்பாக பள்ளு-வைப் பாடுகிறார்கள். பள்ளிக்கூடம் என்பதை கலையரங்கம் மாதிரியாதனாகக் கூட புரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக, பாடலில் வருவது குறும்பு எபிசோட். ஊர் தேடி வருமவளை, நாயகன் கலாய்க்கும் பகுதி.

“டேராவை பார்த்து போடு ஓலத்தோடு

வேறூரு போய்ச்சேரு நேரத்தோடு”

வாத்துகளோடு சேர்த்து, அவளை மட்டம் தட்டுவதோடு அவளுடையப் பாடலையும் ‘ஓலம்’ என்கிறான். இதைத்தான் மதுரைப் பக்கம் ’உடைசலைக் கொடுத்தல்’ என்பார்கள். தொடர்ந்து வரும் வரிகளில்,

”சேராத தாமரைப்பூ தண்ணி போலே

மாறாதே எங்க வாழ்வு வானம் போலே”

எனப் பாடுகிறாள். ஏனோ இராஜாவின் வரிகளில் தொனிக்கும் மென் சோகம் பாடகி சித்ராவின் குரலில் தொனிக்கவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. எத்தனையோ பூக்கள் இருக்க ஏன் தாமரைப் பூ..? again மருத நிலம். ஆமாம், மருத நிலத்திற்குரிய பூக்களுள் ஒன்று தாமரை. of course, தாமரை இலையில்தான் தண்ணீர் சேராது!

ராஜூ

பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரைப் பக்கம். கடந்த ஆறாண்டுகளாக தமிழிணைய வாசி. இது அது என்று வகை தொகையின்றி எல்லாவற்றிலும் நுனிப்புல் மேய்வது பிடித்த செயல்.

வலைப்பூ : – http://www.tucklasssu.blogspot.com
ட்விட்டரில் : – http://www.twitter.com/naaraju