ஒட்டாத உதடுகள்

  • படம்: வில்லுப்பாட்டுக்காரன்
  • பாடல்: தந்தேன் தந்தேன்
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: மலேசியா வாசுதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=0OFeSDoMf_8

ஏழைகள் காதுகளில், செந்தேன் அள்ளிச் சேர்க்கிற கலைஞனடி,

தென்னாட்டுல இருக்கிற இதயங்களைச் சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி!

நாட்டுல கேட்டுக்கடி இசையில் இங்கு நான் செஞ்ச சாதனைதான்,

நாக்குல இருக்குதடி, எடுத்துத் தர ஆயிரங்கீர்த்தனைதான்!

இந்தப் பாடலைப்பற்றிச் சொல்வதற்கு ஓர் அபூர்வமான விஷயம் இருக்கிறது, இது ‘நிரோட்டகம்’ என்ற வகையைச் சேர்ந்த பாடல்.

நிரோட்டகம் என்பது சமஸ்கிருதச் சொல், நிர் + ஓட்டகம், அதாவது, உதடுகள் ஒட்டாமல் பாடப்படுகிற பாடல்.

தமிழில் எத்தனையோ பாவகைகள் இருப்பினும், இதை ஒரு விசேஷமான வகையாகக் குறிப்பிட்டு இலக்கணம் வரையறுத்திருப்பதாகத் தெரியவில்லை. சினிமாவிலும் இந்த ஒரு பாடலில் வாலியைத் தவிர வேறு யாரும் இந்த வகையில் முயற்சி செய்திருக்கிறார்களா என்று அறியேன்.

ஆச்சர்யமான விஷயம், உதடு ஒட்டாமல் பாடுவது என்றாலும், இந்த வரிகளைப் படிக்கும்போது அந்த சிரமமே தெரியாது. மிகவும் லகுவாக எழுதியிருப்பார் வாலி.

காரணம், தமிழில் உச்சரிக்கும்போது உதடு ஒட்டுகிற எழுத்துகள் குறைவுதான். ப், ம் மற்றும் வ் என்ற மெய்யெழுத்துகள், இவை இடம்பெறுகிற உயிர்மெய் எழுத்துகள், இவற்றைமட்டும் தவிர்த்துவிட்டு மீதமிருக்கும் தமிழ் எழுத்துகளை வைத்து எழுதவேண்டியதுதான்!

கொஞ்சம் சிரமம். ஆனால் ஜாலியான சிரமம், சும்மா ஒரு நாலு வரி முயற்சி செய்து பாருங்களேன்!

***

என். சொக்கன் …

17 07 2013

228/365