இரு கன்னியர்
அரியது என்ன என்ற முருகனின் கேள்விக்கு ஔவை சொன்னது என்ன?
அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு
நீங்கிப் பிறத்தல் அரிது
ஊனமற்ற வாழ்க்கைதான் முதலில் சொல்லப்படும் அரியதாக இருக்கிறது. எல்லாம் இருப்பவர்களுக்கு இருப்பதன் பெருமை தெரியவில்லை. பெருமை தெரிந்த சிலருக்கு அது இருப்பதில்லை.
வாழ்க்கையில் மட்டுமல்ல திரைப்படங்களில் ஊனமுள்ள பாத்திரங்கள் துன்பியல் பாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. ஊனமுற்ற ஒரே காரணத்துக்காக அந்த பாத்திரங்களும் அவைகளின் உறவுப் பாத்திரங்களும் திரையில் மிகுந்த துன்பப்படும். ஒரு வகையில் வாழ்க்கையிலும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது.
கல்லுக்கும் மரத்துக்கும் நமக்கும் உள்ள முதல் வேறுபாடே நாம் ஒரே இடத்தில் இல்லாமல் இருப்பது. அதற்கு உதவுவது நமது கால்கள். அது இல்லையென்றால்?!?! அப்படி இல்லாதவர்கள் பெண்கள் என்றால்? அந்தப் பெண்கள் திருமணம் ஆகாத கன்னியர் என்றால்? அந்தக் கன்னிகள் தமிழ்த் திரைப்படத்தின் பாத்திரங்கள் என்றால்?
அவளால் நடக்க முடியாது. ஊர் அவளை நொண்டி என்று ஏளனம் பேசும். அவளுக்கும் ஒரு திருமணம் நடக்க இருந்தது. அவளுடைய குறையைத் தெரிந்து கொண்டதால் திருமணம் நடக்கவில்லை. அப்போது அவள் பாடுகிறாள்.
தேர் வந்தது
திருநாள் வந்தது
ஊர்வலம் போகின்ற நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது!
ஊர்வலம் செல்வதற்கான நாளும் வந்தது. தேரும் இருக்கிறது. ஆனால் ஓட முடியாமல் தேர் நின்றது. சே! என்ன ஒரு வருத்தமான நிலை. வாலி எழுதிய பாடல் இது.
இன்னொருத்தி இருக்கிறாள். அவளுக்கும் இதே நிலைதான். ஆசைகள் மொட்டு விட்டுப் பூப்பூக்கும் இளம் வயது. அந்தப் பூவின் கண்ணிலும் ஒரு வண்டு தென்படுகின்றது. ஆனால் வண்டை அழைத்துச் சொல்லுமா மலர்? வாய் இல்லாத மலரும் ஒருவகையில் ஊனம்தானே. அந்த எண்ணத்திலேயே பாடுகிறாள்.
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்
இந்த வரிகளும் அந்த வண்டை அவளிடத்தில் இழுத்து வரவில்லை. வராத வண்டைப் பார்த்துப் பாடுகிறாள்.
நீ வரவேண்டும். ஏன் வரவில்லை?
நான் வரலாமா? ஒருக்காலுமில்லை… ஒரு காலுமில்லை!
மலர்கள் வண்டை நோக்கிப் போவதற்கு வழி ஒருக்காலும் இல்லை என்று சொன்ன வேளையில் அவளுக்கு ஒரு காலும் இல்லை என்று சோகத்தையெல்லாம் கொட்டி விடுகிறாள். இப்படி சொற்சிலம்பம் ஆட கவியரசரை அன்றி யார் முடியும்!
பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – தேர் வந்தது திருநாள் வந்தது
படம் – காக்கும் கரங்கள்
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=pQOTkIekP9g
பாடல் – மலரும் மங்கையும் ஒரு ஜாதி
படம் – அன்னையும் பிதாவும்
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=Zutwx7oWk9E
அன்புடன்,
ஜிரா
053/365
amas32 (@amas32) 3:07 pm on January 24, 2013 Permalink |
//ஊர்வலம் போகின்ற நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது!//
கவியரசர் கவியரசர் தான்!
உடல் ஊனத்தோடு நிறமும் ஒரு காராணம் ஆகிறது பெண்ணுக்குத் திருமணம் தடை பட. கண்ணா கருமை நிறக் கண்ணா என்ற பாடல் அதைத் தான் அற்புதமாக விவரிக்கும். The tune is also soul wrenching one.
amas32
Rajnirams 3:27 pm on February 11, 2013 Permalink |
காக்கும் கரங்கள் பாடல்களை எழுதியர் கவிஞர் வாலி ஆயிற்றே.