காய் நிலவும் கனி நிலவும்

  • படம்: பலே பாண்டியா
  • பாடல்: அத்திக்காய் காய் காய்
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
  • Link: http://www.youtube.com/watch?v=muWBARd3oAk

அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே,

இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ!

கன்னிக்காய், ஆசைக்காய், காதல் கொண்ட பாவைக்காய்,

அங்கே காய், அவரைக் காய், மங்கை எந்தன் கோவைக்காய்!

ஒரு படை வீரன், கடமை அழைக்க, போர்க்களத்துக்குச் சென்றுவிடுகிறான்.

அவனைப் பிரிந்து வாடும் காதலி, தவிக்கிறாள், துடிக்கிறாள், வானத்தில் இருக்கும் முழுச் சந்திரனும் அவளுக்குச் சூரியனைப்போல் சுடுகிறது. அதைப் பார்த்துப் பேசுகிறாள்:

‘அத்திக்காய்க் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே,

இத்திக்காய்க் காய்ந்துனக்கு என்ன பயன்?’

இங்கே அத்திக்காய், ஆலங்காய் என்பவை காய்களின் பெயர்கள் அல்ல, ’ஆலத்தைப்போலக் (அதாவது, விஷத்தைப்போலக்) காய்கிற (அதாவது, சுடுகிற) வெண்ணிலவே, அத் திக்காய் (அதாவது, அந்தத் திக்காக, என் காதலன் இருக்கும் அந்தத் திசையில்) சென்று காய்வாயாக, இத் திக்காய் (அதாவது, இந்தத் திக்கில், நான் இருக்கும் இந்தத் திசையில்) மட்டும் காய்வதால் உனக்கு என்ன பயன்?’ என்கிறாள் அந்தப் பெண்.

இதன் அர்த்தம், ’நிலவே, நீ என்னையே சுட்டுகிட்டிருக்கியே, என்னைப் பிரிவுத் துன்பத்தில வாடவைக்கற அந்தக் காதலன் இருக்கற திசையிலும் போ, அவனையும் கொஞ்சம் நல்லாச் சுடு, அப்போதாவது அந்தப் பயலுக்கு என் ஞாபகம் வருதான்னு பார்ப்போம்!’

அவள் அதோடு நிறுத்தவில்லை, ‘பற்றில் அவரைக் காய், கோவைக் காய்’ என்கிறாள். அதாவது, (என்மீது) பற்று இல்லாத என் காதலனைச் சுடு, அவனைப் போருக்கு அழைத்துச் சென்ற அவனுடைய தலைவன் (கோ) இருக்கிறானே, அவனையும் சுடு!’

இத்தனை சூட்டையும், ஒரு சந்தோஷமான காதல் பாட்டுக்குள் கண்ணதாசன் எப்படிக் கச்சிதமாக இறக்கியிருக்கிறார் என்று மேலே படித்துப் பாருங்கள்!

***

என். சொக்கன் …

11 07 2013

222/365