இராகங்கள் பதினாறு

இன்றைய பதிவில் இரண்டு பாடல்களை ரசித்துப் பாராட்டப் போகிறேன்.

இரண்டு பாடல்களையும் எழுதியவர்கள் வேவ்வேறு. இசையமைத்தவர்கள் வெவ்வேறு. பாடியவர்கள் வெவ்வேறு. நடித்தவர்களும் வெவ்வேறு. ஆனால் இயக்குனர் ஒருவரே. ஆம். திரு.ஏ.பி.நாகராஜன் இயக்கிய இரண்டு படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அவை.

முதற்பாடல் – ஒரு நாள் போதுமா
படம் – திருவிளையாடல்
பாடியவர் – பாலமுரளிகிருஷ்ணா
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
நடிகர் – பாலையா
பாடலின் சுட்டி – http://youtu.be/ppnzHXqT5Sg

இரண்டாம் பாடல் – வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால்
படம் – அகத்தியர்
பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள் – உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
இசை – குன்னக்குடி வைத்தியநாதன்
நடிகர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், ஆர்.எஸ்.மனோகர்
பாடலின் சுட்டி – http://youtu.be/N-5btIpWZmQ

இந்த இரண்டு பாடல்களிலும் இயக்குனரையும் தாண்டி காட்சியமைப்பில் ஒரு ஒற்றுமை உண்டு. ஆம். சங்கீதத்தின் சிகரங்களாக இருப்பவர்கள் பாடுகின்ற பாடல்களாக இவை இருக்கின்றன.

மீன்காரன் பாடினால் பாட்டில் மீனைப்பற்றி வரும். வேடன் பாடினால் மானைப் பற்றி வரும். விவசாயி பாடினால் பயிர் வகைகள் வரும். ஆய்ச்சியர் பாடினால் பாலும் தயிரும் ஓடும். ஆனால் இவர்கள் வாக்கேயக்காரர்கள். அதாவது சங்கீத சாம்ராட்டுகள். இவர்கள் பாட்டில் என்ன வரும்?

இராகமும் தாளமும் அள்ளக் குறையாமல் வரும். இராகங்களின் பெயர்களையே பாடலின் வரிகளில் வைத்து விளையாடுகிறார்கள். அப்படி எழுதிய கவிஞர்களை முதலில் வணங்குகிறேன்.

காலத்தில் திருவிளையாடல் பாடலே முந்தியது. ஆகவே அதையே முதலில் எடுத்துக் கொள்வோம்.

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ..
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ
கலையாத மோகனச் சுவை நானன்றோ

கான(ண)டா என் பாட்டுத் தேனடா
இசை தெய்வம் நானடா

பாட்டு வரிகளில் வருகின்ற இராகங்கள் தெரிகின்றதா? அவைகளை எடுத்துப் பட்டியல் இடுகிறேன், பாருங்கள்.

எழுந்தோடி வருவாரன்றோ – தோடி இராகம்
எனக்கிணையாக தர்பாரில் – தர்பார் இராகம்
கலையாத மோகனச் சுவை – மோகன இராகம்
காண(ன)டா என் பாட்டு தேனடா – கானடா இராகம்

கவியரசர் எவ்வளவு அழகாக பாடல் வரிகளில் இராகங்களின் பெயர்களை பொருள் பொருந்திவரும்படி நெய்திருக்கிறார். அடடா!

கவியரசர் அப்படிச் செய்தது முதற்படி என்றால் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் பாடலை அடுத்த படிக்கு எடுத்துச் செல்கிறார். பாடல் முழுவதுமே இராகங்கள். அதுவும் போதாதென்று இன்னொரு புதுமையையும் செய்திருக்கிறார். அதைக் கடைசியாகச் சொல்கிறேன்.

இது போட்டிப் பாட்டு. அகத்தியருக்கும் இராவணுக்கும் இடையில் இசைப்போட்டி. எல்லாரும் மீட்டிய வகையில் வீணை இசைத்தால் இவர்கள் இருவருக்கு மட்டும் எண்ணிய வகையிலேயே வீணை இசைக்கும். அப்பேர்ப்பட்ட மேதைகள். அதனால் பாடல் வரிகளும் மேதாவித்தனமாகவே இருக்கிறது. பதிவின் ரசிப்புத்தன்மைக்காக பாடலின் சிலவரிகளை நீக்கியிருக்கிறேன்.

வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்

வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன்

இசை கேட்டு எழுந்தோடி வந்தான் உன்தன்
இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்தோடி வந்தான்

ஆரபிமானம் கொள்வார் வெறும்
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
ஆரபிமானம் கொள்வார்

சண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா?
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?
சண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? இனிய
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?

நாடகமா தர்பார் நாடகமா?
அடக்கு முறை தர்பார் நாடகமா? எதுவும்
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?

ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்?

மோகன
கானம் நான் மீட்டிடுவேன்
மனோலயம் இல்லை உன் பாட்டினிலே

பாகேஸ்வரியோ பரம்பொருளோ?
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ?
யார் வந்தால் என்ன காம்போதி
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்

கௌரி மனோகரி துணையிருப்பாள்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்

பாடல் வரிகள் நாடகத்தனமாக இருந்தாலும் எத்தனையெத்தனை இராகங்கள் பார்த்தீர்களா? படிப்பதற்கு எளிமையாக எடுத்துக் கொடுக்கிறேன்.

நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் – நாட்டை
பைரவி துணைவன் பாதம் பணிந்து – பைரவி
இசை கேட்டு எழுந்தோடி வந்தான் – தோடி
ஆரபிமானம் கொள்வார் வெறும் – ஆரபி
சண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? – சண்முகப்பிரியா
நாடகமா தர்பார் நாடகமா? – தர்பார்
ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான் – ஹம்சத்வனி
அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்? – வசந்தா
மோகன கானம் நான் மீட்டிடுவேன் – மோகனா
மனோலயம் இல்லை உன் பாட்டினிலே – மனோலயம்
பாகேஸ்வரியோ பரம்பொருளோ? – பாகேஸ்வரி
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ? – சாரங்கா
யார் வந்தால் என்ன காம்போதி – காம்போதி
கௌரி மனோகரி துணையிருப்பாள் – கௌரிமனோகரி
கல்யாணி மணாளன் கை கொடுப்பான் – கல்யாணி
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள் – சரஸ்வதி

இராகங்கள் பதினாறு. ஆம். பாட்டில் வந்திருக்கும் இராகங்கள் பதினாறு. அடேங்கப்பா என்று மலைப்பாக இருக்கிறதல்லவா.

அத்தோடு நின்றுவிடவில்லை உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் அவர்கள். சுரங்களையும் சொற்களாக மாற்றியிருக்கிறார்.

சுரங்கள் “ச ரி க ம ப த நி” என்று ஏழு வகை என்பது தெரிந்திருக்கும். இந்தச் சுரங்களையே முன்னும் பின்னுமாக மாற்றிப் போட்டு சொற்களை உண்டாக்கியிருக்கிறார் கவிஞர். பாட்டாகப் பாடும் போது சுரங்கள் மறைந்து சொற்கள் வெளிப்படும்.

ச ம ம – சமமா?
ச ரி ச ம ம – சரி சமமா?
நி ச ரி ச ம ம – நீ சரி சமமா?
ம நி த நி பா த க ம – மனிதா நீ பாதகமா!

இப்படியாக பாட்டெழுதிய கவிஞர்களும் நம் நாட்டில் இருந்தார்கள் என்று நினைத்து நாம் பெருமை மட்டுமே பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்,
ஜிரா

182/365