பொருத்தம்

எல்லாம் நன்றாகப் பொருந்தி வந்தால் மட்டுமே எதுவும் பெரும் வெற்றி பெறும்.

எது பொருந்த வேண்டும்? அப்படிப் பொருந்தினால் எது வெற்றி பெறும்?

காதலைத்தான் சொல்கிறேன். காதல் வெற்றி பெற மனப் பொருத்தம் வேண்டும். இல்லையென்றால் தோல்விதான். அதனால்தான் இலக்கியம் கூட பொருந்தாக் காமம் என்று ஒரு வகையையே வைத்திருக்கிறது. பெயரிலேயே தெள்ளத்தெளிவாக அது பொருந்தாது என்பதையும் முடிவு செய்திருக்கிறது இலக்கியம்.

அப்படி உள்ளம் சிறப்பாகப் பொருந்திய காதலர்கள் பாடினால் எப்படி பாடுவார்கள்? கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் உடனடியாக என் நினைவுக்கு வருகிறது.

என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுகமே
படம் – ரகசிய போலீஸ் 115
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

காதலர் இருவருக்கும் மனப் பொருத்தம் மிகப் பொருத்தமாக இருந்தால் திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டியதுதான்.

அதெல்லாம் சரி. கல்யாணத்தில் பத்து பொருத்தங்கள் பார்ப்பார்களாமே. அவை எவையெவை?

வைதிக முறைப்படி நடக்கும் திருமணங்களில் பார்க்கப்படும் பொருத்தங்கள் பத்து மட்டுமல்ல. மொத்தம் பதினாறு. அந்தப் பதினாறில் பத்து பொருந்தினாலே திருமணம் செய்யலாம் என்பது கருத்து. அந்த பதினாறு பொருத்தங்கள் எவையெவை எனப் பார்க்கலாமா?

1. கிரக பொருத்தம்
2. நட்சத்திர பொருத்தம்
3. கண பொருத்தம் (மணமக்களின் குணப் பொருத்தத்தை இது குறிக்கும்)
4. மகேந்திர பொருத்தம் (குழந்தைப் பேறு)
5. ஸ்திரி தீர்க்க பொருத்தம் (தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பெருமை)
6. யோனி பொருத்தம் (இன்பமான இல்லறவாழ்க்கைக்காக)
7. இராசி பொருத்தம்
8. இராசியதிபதி (மணமக்களின் மனவொற்றுமைக்கு)
9. வசிய பொருத்தம் (ஒருவர் மீது ஒருவருக்கு உண்டாகும் ஈர்ப்பு)
10. இரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்ய பலம்)
11. வேதை பொருத்தம் (வாழ்வில் வரும் இன்பதுன்பங்களைக் காட்டும்)
12. விருஷ பொருத்தம் (வம்சா விருத்தி)
13. ஆயுள் பொருத்தம்
14. புத்திர பொருத்தம்
15. நாடி பொருத்தம்
16. கிரக பாவ பொருத்தம் (செய்த செய்யப் போகும் பாவங்கள் பற்றியது)

மனப்பொருத்தம் மட்டும் இருந்தால் போதாது. ஒவ்வொருவருக்குமான உடற் பொருத்தமும் தேவை. அது இருந்தால்தான் இன்பம் பெருகி இல்லறம் நிலைக்கும். அதையும் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
படம் – மன்மதலீலை
இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்

இப்படியெல்லாம் பொருந்தி வாழும் கணவன் மனைவியரைக் கண்டால் எல்லாருக்கும் மகிழ்ச்சி வரும். சிலருக்கு மட்டும் பொறாமை வரும். அதற்கும் உண்டு ஒரு கண்ணதாசன் பாட்டு.

எனக்கும் உனக்குந்தான் பொருத்தம்
அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
படம் – முகராசி
இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

காதலரோடுதான் பொருத்தம் பார்க்க வேண்டுமா? கடவுளோடும் பொருத்தம் பார்க்கிறார் வள்ளலார்.

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ

முருகப் பெருமானின் திருவருள் முழுமையாகப் பெற்றவர் வள்ளலார். வெற்றுக் கண்ணாடியில் மயிலேறி கந்தன் வரக்கண்ட மாமணி அவர்.

ஆனால் பாடலில் முருகனை மெய்ப்பொருள் வடிவமாகவே எழுதியிருக்கிறார். அந்த மெய்ப்பொருளோடு தனக்கு உண்டான பொருத்தத்தை வியந்து பாராட்டுகிறார்.

ஆண்டவனோடு பொருந்திய உள்ளத்தில் துன்பமில்லை. துயரமில்லை. வலிகள் இல்லை. வேதனை இல்லை. எல்லாம் இன்ப மயம். பேரின்பமயம்.

வள்ளலார் அருளிய திருவருட்பாவின் இந்த அற்புத வரிகள் நம்ம வீட்டு தெய்வம் திரைப்படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் இந்தப் பாடல் இடம் பெற்றது. என்ன… ஒரு திருமண மேடையில் விலைமகளொருத்தி ஆடிப்பாடுவதாக அமைந்த காட்சியில் பாடல் இடம் பெற்றது.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
1. என்ன பொருத்தம் (டி.எம்.எஸ், பி.சுசீலா) – http://youtu.be/KJobbwySqRI
2. எனக்கும் உனக்குந்தான் (டி.எம்.எஸ், பி.சுசீலா) – http://youtu.be/b_6C2Z3-8XQ
3. மனைவி அமைவதெல்லாம் (கே.ஜே.ஏசுதாஸ்) – http://youtu.be/f4VxmTuaztQ
4. எனக்கும் உனக்கும் இசைந்த (பி.சுசீலா) – http://youtu.be/m0urUMBv_ZA

பின்குறிப்பு – என்ன பொருத்தம் பாடலிலும் எனக்கும் உனக்குந்தான் பொருத்தம் பாடலிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் நடித்தது என்ன அதிசயப் பொருத்தமோ!

அன்புடன்,
ஜிரா

272/365