நொடியில் பாயும் செந்நாரைகள்

  • படம்: பிரம்மா
  • பாடல்: இவள் ஒரு இளங்குருவி
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=CztV3oi4aGc

நான் பாடும் பாட்டு, தலையாட்டிக் கேட்டு,

தினந்தோறும் பூப் பூக்கும் தோட்டங்களே!

நீரோடைமீது நொடிப்போதில் பாய்ந்து

இரை தேடும் செந்நாரைக் கூட்டங்களே!

’நொடிப் போது’ என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. ‘நொடிப் பொழுது’ (அதாவது ஒரு விநாடி நேரம்) என்பதன் சுருங்கிய / மருவிய வடிவம் இது.

அதேசமயம், ‘போது’ என்பது ஒதுக்கவேண்டிய வார்த்தை அல்ல, இதே வடிவில், இதே பொருளில் அது பல இலக்கியங்களிலும் வருகிறது. உதாரணமாக, திருவருட்பாவில் வள்ளலார் ’போதுபோக்கினையே மனனே’ என்று எழுதுகிறார். இன்றைக்கு நாம் சர்வசாதாரணமாகச் சொல்லும் ‘பொழுதுபோக்கு’ என்ற வார்த்தையேதான்.

‘போது’ என்ற தனிச்சொல் இப்போது பரவலாகப் பேசப்படாவிட்டாலும், அது ஒரு கூட்டுச்சொல்லாகப் புழக்கத்தில் இருக்கிறது. நம்மையும் அறியாமல் நாம் அதைத் தினந்தோறும் பயன்படுத்துகிறோம்.

இப்போது, அப்போது, எப்போது என்ற சொற்களின் முழு வடிவம், இந்தப் பொழுது, அந்தப் பொழுது, எந்தப் பொழுது. இதில் ‘பொழுது’ என்பது சுருங்கிப் ‘போது’ என மாறி, சுட்டும் ‘இந்த’, ‘அந்த’, ‘எந்த’ என்ற சொற்களும் இ, அ, எ எனச் சுருங்கி, இப்படி வேறுவிதமாக மாறிவிட்டது.

அதேபோல், ‘பாடியபோது’, ‘சந்தித்தபோது’, ‘பிறந்தபோது’ போன்ற சொற்களும்கூட, ‘பாடிய பொழுது’, ‘சந்தித்த பொழுது’, ‘பிறந்த பொழுது’ என்றுதான் நீளும். இப்படி நாமே உணராத அளவு ‘பொழுது’க்குப் பதில் ‘போது’ என்ற வார்த்தை நம்மை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது.

பொழுது, போதுதவிர, போழ்து என்றும் ஒரு வார்த்தை உண்டு. பெரும்பாலும் கவிதைகளில்மட்டும் பயன்படுத்துவார்கள். ’செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதுபோல.

அது நிற்க. தமிழில் ‘போது’க்கு வேறு அர்த்தம் உண்டு: முதிர்ந்த மொட்டு. ‘காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும் இந்நோய்’ என்று காதல்பற்றி ஓர் அருமையான திருக்குறள் இருக்கிறது.

***

என். சொக்கன் …

18 02 2013

079/365