வைரமுத்துவுடன் ஒரு நாள்

காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும் என்ற திருக்குறள் பற்றி நண்பர் @nchokkan நொடியில் பாயும் செந்நாரைகள் என்ற பதிவில் சொல்லியிருந்தார். பாடல் வரிகளில் இந்த காலை மாலை நேரம் பற்றி ஏதாவது இருக்கிறதா என்று தேடினேன்.

தமிழ் திரைப்பாடல்களில் கடவுளையும் காதலையும் தவிர கவிஞர்கள் அதிகம் பாடியது இயற்கைதான் என்று நினைக்கிறேன். நிலா வானம் காற்று மழை மலை கடல் சூரியன் என்று பல வர்ணனை பாடல்கள் உண்டு. ஒரு நாளின் பல நேரங்களையும் நிறங்களையும் பதிவு செய்யும் பாடல்கள் உண்டா ? . இதோ வைரமுத்துவுடன் ஒரு நாள்

மூன்றாம் பிறை என்ற படத்தில் விடியல் பற்றி ஒரு பாடல் http://www.youtube.com/watch?v=wy2eKsH1oPo தமிழில் ஒரே வாக்கியத்தில் அமைந்த மிக நீண்ட பல்லவி என்று கவிஞர் குறிப்பிடும் இந்தப் பாடலின் ஆரம்பம்

      வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட

      சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்

எவ்வளவு ரசனையான கற்பனை . சூரியன் கடலில் குளித்து வெளியே வரும் நேரம், கவிஞர் என்ன காட்சியை பார்க்கிறார்?

        வானில் ஒரு தீபாவளி, நாம் பாடலாம் கீதாஞ்சலி,

        கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்,

        கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்!

அந்த வண்ண கலவையை வானில் நடக்கும் அட்டகாசமான மத்தாப்பு சிதறலாக ,. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு தரும் சித்திரமாக பார்க்கிறார்.

விடிந்துவிட்டது. அதிகாலை சொல்லும் அழகுச்  செய்தியை கேட்க எல்லோரையும் போர்வை சிறையை விட்டு வெளியே வரச்சொல்கிறார்.காலை தென்றல் பாடி வரும்  http://www.youtube.com/watch?v=2R7KfyTP1s4 என்ற பாடலில்  (உயர்ந்த உள்ளம்) .உறங்கும் மானுடனே உடனே  வெளியே வா அதிகாலை உன்னை வணங்கும் என்று சொல்லி எப்படி இருக்கிறது காலை என்று ஒரு நேர்முக வர்ணனையை அளிக்கிறார்

       குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்

        மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்

       தினந்தோறும்  புது கோலம் எழுதும் வானம்

       இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே

      பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே

அடடா இந்த கற்பனையில் லயித்து நேரம் போனது தெரியாமல்… மற்ற வேலைகள் உண்டே  .சரி எல்லோரும் கிளம்பி அவரவர் வேலையை கவனியுங்கள். பள்ளி கல்லூரி அலுவலகம் எல்லாம் முடிந்து மறுபடியும் மாலையில் சந்திப்போம்.

சூரிய உதயத்தைப் பாடிய கவிஞர் நிழல்கள் படத்தில் ஒரு அற்புதமான பாடலில் http://www.youtube.com/watch?v=hymujdC0mlw மயக்கும் மாலை பொழுதின் அழகையும்  சொல்கிறார்.

        இ்து ஒரு பொன்மாலைப் பொழுது

        வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

       ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்

       வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்

        பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

வீடு திரும்பி இரவில் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தை பார்க்கும் கவிஞரின் கற்பனை தொடருகிறது பயணங்கள் முடிவதில்லை http://www.youtube.com/watch?v=AsN_9uXAoNE படத்தில்

      இளைய நிலா பொழிகிறதே  இதயம் வரை நனைகிறதே

       உலாப் போகும் மேகம் கனாக் காணுதே விழாக்காணுதே வானமே

       வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்

      முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்

      நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள்

     விண்  வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்

ஒரு நாளின் வெவ்வேறு நேரங்கள் வானில் தூவும் பல நிறங்களை அழகாக பதிவு செய்யும் கவிதைகள்.

மோகன கிருஷ்ணன்

081/365