இனிப்பு!

  • படம்: ப்ரியா
  • பாடல்: ஹேய், பாடல் ஒன்று
  • எழுதியவர்: பஞ்சு அருணாச்சலம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=7CORvsjQT60

என் ஜோடிக் கிளியே,

கன்னல் தமிழே,

தேனில் ஆடும் திராட்சை நீயே!

பழைய பாடல்களில் கன்னல் மொழி, கன்னல் தமிழ், கன்னல் சுவை போன்ற பயன்பாடுகளை நிறைய பார்க்கலாம். குறிப்பாகக் கன்னத்துக்கும் வண்ணத்துக்கும் இயைபாக இதனைப் பயன்படுத்துவார்கள்.

‘கன்னல்’ என்றால் கரும்பு. இதையே கரும்புச் சாறைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்று, கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள். அவர் பயன்படுத்துகிற உவமைகளும் பாவனைகளும் அற்புதமானவை.

அந்த வரிசையில், கண்ணனையும் கன்னலையும் ஒரே வரியில் சேர்த்துப் பெரியாழ்வார் பாடியது: ‘கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி…’

அதாவது, ஒரு குடம் நிறைய கரும்புச் சாறை நிரப்பிவைத்திருக்கிறார்கள், அதிலிருந்து சாறு வழிந்து வெளியே வருகிறது. அதுபோன்றதாம், குழந்தைக் கண்ணன் வாயிலிருந்து வடியும் ஜொள்ளு 🙂

திருவருட்பாவில் வள்ளலாரும் இந்தப் பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘என்னுயிரில் கலந்து இனிக்கின்ற பெருமான்’ என சிவபெருமானைப் போற்றித் தொடங்கும் அவர், ‘கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டா?’ என்கிறார். அதாவது, ‘நீ கரும்புய்யா, உன்கிட்ட கசப்பு ஏது?’

அபிராமி அந்தாதியில் ஒரு வரி: கைக்கே அணிவது கன்னலும் பூவும். அதாவது, அபிராமித் தாயாரின் ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பூவும் அணிகலன்களாகத் திகழ்கின்றன.

இந்தச் சொல் எப்படி வந்திருக்கும்? முனைவர் நா. கணேசன் தரும் விளக்கம் இது:

வயலில் இருந்து கரும்பை அறுவடை செய்தபின், ஆலைக்கு அனுப்புவார்கள். அங்கே அதனைப் பிழிந்து, காய்ச்சிச் சுண்டவைப்பார்கள், இதற்குக் ‘கருகக் காய்ச்சுதல்’ என்று பெயர்.

ஆக, கருகக் காய்ச்சப்படும் தாவரம் ==> கரும்பு / கரிம்பு / கரிநல் / கன்னல்!

***

என். சொக்கன் …

28 01 2013

058/365

(பின்குறிப்பு: ட்விட்டரில் இந்த வார்த்தையைக் குறிப்பிட்டு, இதனை #4VariNote வரிசையில் இடம் பெறச் செய்யுமாறு கேட்டவர் @umakrish. அவருக்கு நன்றி 🙂 )