மலரோன்

  • படம்: ஜீன்ஸ்
  • பாடல்: அன்பே அன்பே
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: ஹரிஹரன்
  • Link: http://www.youtube.com/watch?v=2dr35kcmDe4

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்,

அடடா, பிரம்மன் கஞ்சனடி!

சற்றே நிமிர்ந்தேன், தலைசுற்றிப்போனேன்,

ஆஹா, அவனே வள்ளலடி!

சங்க காலம் தொடங்கி தமிழ்ப் பெண்களுக்கு Hourglass figureதான் லட்சிய உருவம். அதைக் குறிப்பிடும்வகையில் நூலிடை, கொடியிடை, துடி(உடுக்கு)யிடை என்றெல்லாம் வர்ணனைகள் அமையும். இதிலிருந்து கொஞ்சம் விலகி ‘இஞ்சி இடுப்பழகி’ என்றுகூட வாலி எழுதினார், அதற்கு இன்னும் விதவிதமாக அர்த்தம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பாடலில் வரும் ஆண் தன் காதலியின் மெல்லிடையைப் பார்த்துவிட்டு, அவளைப் படைத்தவன்மீதே சந்தேகப்படுகிறான், ‘அந்த பிரம்மன் பெரிய கஞ்சனா இருப்பானோ?’

வைரமுத்துமட்டுமல்ல, வள்ளலாரும் பிரம்மனைக் கஞ்சன் என்கிறார்.

என்னது? வள்ளலாரா? அருட்பா எழுதியவர் எப்போது அய்ஷ்வர்யா ராயைப் பார்த்தார்?

இது ரொமான்ஸ் மேட்டர் அல்ல. ஆன்மிகம். திருவொற்றியூரைப்பற்றிப் பாடும்போது வள்ளலார், ‘கஞ்சன், மால் புகழும் ஒற்றி’ என்பார்.

‘மால்’ என்றால் திருமால், தெரிகிறது. அது யார் ‘கஞ்சன்’?

’கஞ்சம்’ என்றால் தாமரைப் பூ என்று அர்த்தம். அதன்மீது வாசம் செய்கிறவன் என்பதால், பிரம்மனுக்குக் கஞ்சன் என்று ஒரு பெயரும் உண்டு.

ஆக, இடையில் சிக்கனம் காட்டி வேறிடத்தில் வள்ளலாக வாரி வழங்கினாலும், பிரம்மன் கஞ்சன்தான்!

***

என். சொக்கன் …

10 08 2013

252/365