Multi Cuisine பாடல்
ஒரு மொழியில் உண்டாகும் திரைப்படத்தில் பெரும்பாலும் அந்த மொழியில்தான் பாடல்கள் இருக்கும். கதைக்கு ஏற்றவாறு பிறமொழி பேசும் பாத்திரங்கள் இருந்தால் அந்த மொழியிலும் பாடல்கள் இருக்கும். சில சமயங்களில் தமிழும் பிறமொழியும் கலந்து பாடல்கள் இருக்கும்.
ஆனால் பல மொழிகள் கலந்த பாடல்கள் மிகக் குறைவு. மிகமிகக் குறைவு. இப்படிப் பலமொழிகள் கலந்த தமிழ்ப் பாடல் என்றதுமே எல்லாருக்கும் முதலில் பாரதவிலாஸ் பாட்டான “இந்திய நாடு என் வீடு” என்ற பாடல்தான் நினைவுக்கு வரும். அதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் பஞ்சாபி ஆகிய பிற மொழிகள் இருந்தாலும் பார்ப்பவர்களில் வசதிக்காக தமிழ் தாராளமாகக் கலந்திருக்கும்.
அப்படியெல்லாம் இல்லாமல் ஒரு பாடல் உண்டு. அந்தந்த மொழிகளிலேயே பாடப்படும் பாடல் அது. அதுவும் ருசியான பாட்டு. ஆம். சாப்பாட்டுப் பாட்டு.
1949ம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆச்சார்யாவின் இயக்கத்தில் வெளியான அபூர்வ சகோதர்கள் படத்தில் இடம் பெற்ற பாட்டுதான் அது. தீயவனின் படைவீரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சமையற்காரியைப் போல பானுமதி நடித்துப் பாடும் பாடல் அது.
ஒரு அவியல் ஒரு பொரியல்
ஒரு மசியல் ஒரு துவையல்
அப்பளம் பப்புடம் ஜாங்கிரி தேன்குழல்
சாம்பாரு மோர்க்கொழம்பு சட்டினி
எல்லாம் சமைக்காட்டி எல்லாரும் பட்டினி பட்டினி
இப்படித் தொடங்கும் பாட்டில் அடுத்து ஒரு மலையாளி வந்து பேசவும் “நான் கேரள நாரியுமாவேன்” என்று தொடங்கி ”காலன் ஓலன் எரிசேரி காராகாருணை புளிசேரி” என்று கேரள உணவுவகைகளை அடுக்குவார்.
அடுத்து ஒரு தெலுங்கு நாட்டுப் படைவீரர் வந்து பேசவும் “நான் ஆந்திரப் பெண்மணி ஆவேன்” என்று தொடங்கி “ஆவக்காய கோங்கூர பச்சடி பெசரட்டும் ஒரு பாயசமும் பப்பு புலுசு வெச்சே தருவேன்” என்று ஆந்திர உணவுவகைகளை அடுக்குவார்.
அடுத்து ஒரு கன்னடத்துப் படைவீரர் வரவும் “நான் கன்னட காரிகையும் ஆவேன்” என்று தொடங்கி “பிசிவின்பேஹுளி சண்டிகே ஹோளி துப்பத்தோசை ஹப்பளமெல்லாம் செய்தே தருவேன் தாசரஹள்ளி ஹெண்ணு” என்று கன்னடத்து உணவு வகைகளையும் அடுக்குவார்.
அடுத்து ஒரு இந்திக்காரர் வரவும் “நான் வடநாட்டு அழகியும் ஆவேன்” என்று தொடங்கி “கோதுமஹல்வா பாதாம்கீரு குலாப்ஜாமூன் ஜிலேபி லட்டு சுட்டுத் தருவேன் ரொட்டியும் தருவேன்” என்று இந்துஸ்தானி பலகாரங்களை அடுக்குவார்.
கேட்கச் சுவையான பாடல் அது. இந்தப் படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள். எஸ்.ராஜேஸ்வரராவ், எம்.டி.பார்த்தசாரதி, ஆர்.வைத்தியநாதன் ஆகிய மூவரும் இசைப் பொறுப்பைப் பார்த்துக்கொண்டார்கள். இவர்களுக்குள் இருந்த வேலைப்பங்கீடு எப்படிப்பட்டதென்று தெரியவில்லை.
இந்தப் படத்தை ஜெமினி ஸ்டுடியோஸ் இந்திக்கும் கொண்டு போனது. இந்தியிலும் இவர்கள் மூவருமே இசையமைத்தார்கள். பானுமதியே நடித்தார். ஆனால் பாடியது ஷம்தத் பேகம். இந்தியில் இந்தி, பெங்காலி, பஞ்சாபி, குஜராத்தி, தமிழ் (மதராசி) மொழிகளில் சாப்பாடு பாட்டு வந்தது.
கிட்டத்தட்ட இருபத்துமூன்று வருடங்களுக்குப் பிறகு 1971ல் இந்தப் படம் எம்.ஜி.ஆர் நடிக்க மீண்டும் எடுக்கப்பட்டது. படத்தின் பெயர் நீரும் நெருப்பும். படத்தில் நாயகியாக நடித்தவர் ஜெயலலிதா. பானுமதி நடித்த அதே காட்சி இந்தப் படத்திலும் இடம் பெற்றது. அதற்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். பாடலைப் பாடியவர் எல்.ஆர்.ஈசுவரி.
ஒரு அவியல் ஒரு பொரியல் ஒரு மசியல் ஒரு துவையல் என்று தொடங்கினாலும் பாடலிலும் இசையிலும் மெல்லிசை மன்னர் புதுமைகளைப் புகுத்தியிருந்தார்.
கத்தரிக்கா சாம்பாரு காரவட மோர்க்கொழம்பு
தக்காளிப் பருப்புரசம் தயிருவட பாயாசம் என்று தமிழ் நாட்டு உணவு வகைகள் நிறைய மாறியிருந்தன.
அடுத்து ஒரு மலையாளி வந்ததும்,
நான் கேரள நாரியும் ஆவேன்
குட்டகாளன் புஞ்சேரி கூட்டி உண்ணான் புளிசேரி
ஒரு அவியல் ஒரு தீயல் குறுத்தகாளன் பச்சடி கிச்சடி கடுமாங்காகறி கூட்டுகறி என்று மலையாள உணவுகளை அடுக்குவார். இந்தப் பெயர்களைக் கேட்டு எழுதும் போது சரியாக எழுதினேனா என்று தெரியவில்லை.
இந்த வரிகள் முடிந்ததும் “நீலமுடம் காடுகள் மயிலாடும் மலையாளத்தில்” என்று பாடும் வரிகள் மிக நன்றாக இருக்கும்.
அடுத்தது ஒருவர் “நீக்கு தெலுகு ராதா” என்று கேட்டதும்,
“நான் ஆந்திரப் பெண்மணி ஆவேன்
தெனாலி பில்லனய்யா நேனு தெலுகு பிட்டனய்யா
குண்டூரு கோங்கூரா ராஜமுந்திரி ஆவக்காய
பெதவாடா பெசரட்டு XXXX லட்டு ருசி சூஸ்தாவா
ஹைதராபாது அல்வா ஒண்டிக்கி செலவா ” என்று ஆந்திரா பலகாரங்களை அடுக்குவார்.
அதே போல “நீ சூசு சூப்புலகு” என்று பாடும் வரிகளில் ஆந்திர வாடை அடிக்கும். நாட்டுப்புற குத்துப்பாட்டை அழகாகக் கொண்டு வந்திருப்பார் மெல்லிசை மன்னர்.
அடுத்து கன்னடத்துக்காரர் வருவார். மங்களூரு போண்டா ஹுப்பள்ளி பேடா மைசூர்பாக் பக்கோடா என்று கன்னடத்துப் பலகாரங்கள் வரிசை கட்டும்.
மூலப்பாடலில் இருந்த இந்திப் பலகாரங்கள் இந்தப் பாடலில் இல்லை. அது தமிழகத்து அரசியல் மாற்றங்களையும் இந்திமொழி விலக்கலையும் தெளிவாகக் காட்டுகிறது. திரைப்படங்களும் அந்த வகையில் காலம் காட்டும் கண்ணாடிகள்தான்.
இந்தப் பாடல் வரிகளை நான் கொடுத்ததில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை எடுத்துச் சொல்லவும்.
இந்தப் பதிவில் இடம் பெற்ற பாடல்களைப் பார்க்க,
அபூர்வ சகோதரர்கள் – http://youtu.be/6IsdQUhG9hk
அபூர்வ சகோதரர்கள் (இந்தி) – http://youtu.be/h9sErV1BP3A
நீரும் நெருப்பும் – http://youtu.be/kCyUDKSDjWM
அன்புடன்,
ஜிரா
065/365
kamala chandramani 12:37 pm on February 4, 2013 Permalink |
சொக்கன், ஜிரா, இந்த ஆராய்ச்சிகளை வைத்துக்கொண்டு ‘சினிமாவும் இலக்கியமும்’ என ஒரு Phd பட்டமே வாங்கிவிடலாம்.
Saba-Thambi 12:59 pm on February 4, 2013 Permalink |
பலே பலே பல் சுவை விருந்து!
மிக்க தகவல்கள் கொண்ட பதிவு !!!
நீரும் நெருப்பும் பட ப் பாடலில் “தீயல்” என்ற சொல் மலயாளத்தில் பாடப்படுகிறது.
அந்தச் சாப்பாடு (உணவு) யாழ் குடா நாட்டில் வடமராட்சி பகுதியில் சமைப்பார்கள். “நெத்தலி தீயல்” (Anchovi) என்று சொல்லுவினம்.
மலயாள தொடர்பு யாழ்ப்பாணத்தில் இருப்பதர்க்கு இது இன்னுமொரு சான்று. பச்சடியும் சாப்பிடுவோம் (உண்ணுவோம்)
பாடல்களைக் கேட்டு சாப்பிட்ட திருப்தி. வயிறு full 🙂
amas32 8:58 pm on February 4, 2013 Permalink |
சூப்பரா இருக்கே இந்தப் பாடல்கள், அதுவும் இப்போ பசி வேளையில் படிக்கும் போது 😉 எங்கே இருந்தோ தேடிக் கண்டுப்பிடிக்கறீங்க நீங்க! Thanks for the links 🙂
amas32
Rajnirams 12:00 am on February 5, 2013 Permalink |
சான்சே இல்லை,கலக்கிட்டீங்க. சூப்பர்.நவரத்தினம் படத்தில குன்னக்குடி இசையில் இது போல் ஒரு பாட்டு இருப்பதாக ஞாபகம்.
சரியா நினைவில்லை:-))
மலையாளக் காற்று « நாலு வரி நோட்டு 11:48 am on February 10, 2013 Permalink |
[…] பாடுவார். இந்தப் பாடல்களைப் பற்றி Multi Cuisine Songs என்ற பதிவில் முன்பே […]