”மா”வடு

கோடை வந்தாலே மாமரங்களில் மாம்பிஞ்சுகள் நிறைந்து தொங்கும். மாம்பிஞ்சு என்று சொல்வதை விட மாவடு என்ற பெயர்தான் இன்று பிரபலமாக இருக்கின்றது. மாவடு என்றதுமே இரண்டு திரைப்படப் பாடல்கள் நினைவுக்கு வரும்.

என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறச்சொல்லோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
படம் – சிவகாசி
பாடல் – இயக்குனர் பேரரசு
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், உதித் நாராயண்
பாடலின் சுட்டி – http://youtu.be/6XXhDTH2iMw

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
………………
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
படம் – நெஞ்சில் ஒரு ஆலயம்
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
பாடலின் சுட்டி – http://youtu.be/t5zV9id2QP4

முதல் பாடல் கவித்துவமே இல்லாமல் இருந்தாலும் தயிர்ச்சோற்றுக்கு மாவடு மிகப்பொருத்தம் என்ற உண்மையைச் சொல்கிறது. இரண்டாவது பாடல் மிக இனிமையான பாடல். மாவடு வகிர்ந்தது போன்ற அழகான கண்கள் என்று உவமிக்கிறது.

சரி. நாம் தயிர்ச்சோற்றுக்கே போகலாம். ஊறுகாய்கள் எல்லாமே தயிர்ச்சோற்றுக்குப் பொருத்தமாக இருந்தாலும் நன்கு ஊறிய வடுமாங்காய் பலரால் விரும்பப்படுவதுதான் உண்மை.

இப்பொழுதெல்லாம் ஊறுகாய்களை கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வீட்டிலேயே செய்யப்படும் மாவடுவுக்கு இணை வேறெதுவும் இல்லை.

சென்னையில் மாவடு பார்த்துப் பொறுக்கி வாங்க வேண்டுமென்றால் மயிலைதான் சிறந்த இடம். வெறும் வடுமாங்காய்கள் மட்டுமல்ல, ஊறுகாய் செய்வதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் அங்கேயே வாங்கிவிடலாம். பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வடுமாங்காய் பிரபலமாக இருப்பது இன்று நேற்று நடப்பதல்ல. கடைச்சங்க காலத்திலேயே அப்படித்தான் இருந்திருக்கிறது.

கடைச்சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் தொகுக்கப்பட்ட ஒரு நூல் அந்தணர் வீடுகளில் வடுமாங்காய் பயன்பாட்டில் இருந்ததையும் செய்முறையையும் தெளிவாகக் குறிக்கிறது.

அந்த நூல்தான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படை.

மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின்
……………………………………….பைந்துணர்
நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர்
நூல் – பெரும்பாணாற்றுப்படை
எழுதியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்

இந்த வரிகள் அந்தணர் வீடுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களைப் பட்டியல் இடுகின்றது. மாதுளங்காயை எப்படிப் பொரியல் செய்வது என்றும் இந்தப் பாடல் விளக்கும். ஆனாலும் நமக்குத் தேவையான மாவடு பற்றிய வரிகளின் பொருளை மட்டும் பார்க்கலாம்.

மறைகளை ஓதுகின்றவர்களின் வீடுகளில்
நெடிய மாமரங்களின் பசுங்கொத்துகளிலிருந்து
உதிர்க்கப்பட்ட மாவடுக்கள் காடியில் ஊறி
உண்பதற்கு சோற்றோடு வகைபடப் பெறுவீர்கள்

காடித்தண்ணீரில் மாவடு ஊற வைக்கப்பட்டு சோற்றோடு கலந்து உண்ணப்பட்டதாம். எப்போது? கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முன்னர்.

ஆனால் அந்த முறையில்தான் இப்போதும் மாவடுக்கள் ஊறவைக்கப்படுகின்றனவா? இல்லை. இப்போதைய செய்முறையை எளிமையாச் சொல்கிறேன்.

வடுமாங்காய்களை காம்பு நீக்கி நீரில் அலசிக்கொள்ள வேண்டும். நன்கு கழுவப்பட்ட மாவடுக்களை நிழலில் உலர்த்திக்கொள்ள வேண்டும். சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது.

ஆமணக்கு எண்ணெய்யை (விளக்கெண்ணெய்) சிறிதளவு எடுத்துக்கொண்டு மாவடுகளின் மீது பரவலாகப் பரவும்படி கலந்துகொள்ள வேண்டும். சிறிதளவு விளக்கெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவு கூடினால் ”பின்விளைவுகள்” இருக்கும்.

இந்த மாவடுக்களோடு உப்பு, மிளகாய்த்தூள், கடுகுப்பொடி கலந்து பாத்திரத்தில் போட்டு துணியால் மூடி வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து காலையிலும் மாலையிலும் குலுக்கி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஊறி ஊறி நீர் சேர்ந்து மாவடுக்கள் சுண்டிச் சுருங்கி சுவையாகிவிடும். அவ்வளவுதான் செய்முறை.

என்ன? மாவடு வாங்கப் போகின்றீர்களா? மாவடு ஊறியபின் எனக்கும் ஒரு பாட்டில் நிறைய கொடுங்கள்.

அன்புடன்,
ஜிரா

151/365