மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்

வாழ்க்கையில் கடன் வாங்காதார் யார்? இன்றைக்கு உலகமே கடனில் இயங்குகிறது. கடனுக்காக இயங்குகிறது. வீட்டுக் கடன், வண்டிக் கடன், தனிப்பட்ட கடன், சம்பளக் கடன் என்று எத்தனையெத்தனையோ கடன்கள்.

இதையெல்லாம் தெரிந்துதானோ என்னவோ விஸ்வரூபம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இப்படி எழுதினார்.

நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து செல்வம் ஆயிரம் இருந்து

மகாபாரதத்தில் வரும் கர்ணன் கூட செஞ்சோற்றுக் கடன் தீர்க்க உயிரையே கொடுத்தான். அதைக் கர்ணன் படத்தில் கவியரசர் இப்படியும் எழுதியிருக்கிறார்.

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
கர்ணா.. வஞ்சகன் கண்ணனடா!

கடன் வாங்கி விட்டால் உயிரைக் கூட கொடுத்து அடைக்க வேண்டி வரும் என்பதற்கு கர்ணன் கதை நல்ல எடுத்துக்காட்டு. ஆனாலும் “வஞ்சகன் கண்ணனடா” என்று சொல்வதன் வழியாக நாம் வாங்கும் கடனுக்கும் காரணம் கடவுளே என்று சொல்கிறார் கண்ணதாசன். அவனின்றி ஒரு அணுவும் அசையாத போது கடன் மட்டும் எப்படி அசையும்?!

கடன் வாங்கியவருக்கு மட்டுமே துன்பம் கொடுக்கும். கொடுத்தவருக்கு இன்பம்தான். வட்டி என்னும் இன்பம் பெருகிப் பெருகி வரும். அதைச் சொல்லத்தான் பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

உலகத்தில் சிறந்தது எது
ஒரு உருவமில்லாதது எது
ஆளுக்கு ஆள் தருவதுண்டு
அசலுக்கு மேலும் வளர்வதுண்டு
உலகத்தில் சிறந்தது வட்டி

ஆனால் கண்ணதாசன் காலம் இப்போது இல்லை. நிறைய மாற்றங்கள். கடன் அட்டையைப் (credit card) பெருமையாக பையில் எடுத்துக் கொண்டுதானே வாசலைத் தாண்டுகிறோம். இந்தச் சூழ்நிலையில் பாட்டு எழுதுகின்றவர்கள் கடன் வாங்கினால் தப்பில்லை என்றுதான் எழுதுவார்கள். நாடே கடன் வாங்குகிறது. பிறகென்ன என்ற எண்ணம் நாட்டின் வேர் வரை பரவிவிட்டதே!

ஈஸ்வரா வானும் மண்ணும் ஃபிரண்ட்ஷிப் பண்ணுது
உன்னால் ஈஸ்வரா
………………………………………………….
கிளியின் சிறகு கடன் கேட்கலாம் தப்பில்லை

ஒருவகையில் மக்கள் மனநிலையின் ஓட்டத்தைத்தான் வைரமுத்து அவர்கள் எழுதிய இந்தப் பாடல் காட்டுகின்றது. கண்ணதாசன் காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு பாடல் வந்தது. அதுவும் கடன் பாட்டுதான்.

பெத்து எடுத்தவதான் என்ன தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குதான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா

மு.மேத்தா இந்தப் பாட்டை எழுதினார். இவர் கடனுக்காக உயிரைக் கொடுக்கும் கண்ணதாசன் காலத்துக்கும் கடன் வாங்கினால் தப்பேயில்லை என்னும் புதிய உலகத்துக்கும் இடைப்பட்டவர். கடனின் சோகம் புரிந்தவர். ஆனால் எதையாவது கொடுத்து அடைத்து விட முடியும் என்று நம்புகின்றவர். ஆனாலும் வட்டி கட்டியே வாழ்க்கை முடிந்து விடும் என்று நொந்து கொள்கிறார்.

கதைப்படி பெற்ற தாயால் வளர்க்கப்படாத மகன் பாட்டு அது. பெற்ற கடனைத் தீர்ப்பதற்காக அன்னை மகனையே விற்று வட்டி கட்டியதாகப் பாடுகின்றார். ஆனால் பெற்ற கடன் தீர்க்கக் கூடியதா? அதனால்தான் ”வட்டியைக் கட்டிப்புட்டா” என்று பாடுகிறார். அசல் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.

கடன் பிரச்சனை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. அதையும் ஒரு பெண் எடுத்து எழுதியிருக்கிறார். அவர் பெயர் பொன்முடியார். ஒருவரிடம் இருந்து வாங்கினால்தான் அது கடன் என்பதில்லை. நாம் செய்ய வேண்டிய கடமை என்பதே ஒரு கடன் என்று எண்ணும் உயர்ந்த பண்புடைய காலத்தவர் இவர். செய்ய வேண்டிய கடமையைச் செய்யாத ஒவ்வொருவரும் கடன்காரரே என்ற இவரது கருத்து மிகச் சிறந்தது.

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
நூல் – புறனானூறு
எழுதியவர் – பொன்முடியார்
திணை – வாகை
துறை – மூதில்முல்லை

பெற்று நான்கு பேர் பார்க்க சிறப்பாக வளர்ப்பது ஒரு தாயின் கடன்(கடமை)
பிள்ளைக்குத் தக்க கல்வியைக் கொடுத்து சான்றோனாக்குவது தந்தையின் கடன்(கடமை)
செயலுக்குரிய வேல் போன்ற கருவிகளைச் செய்து கொடுத்தல் கொல்லற்கு கடன்(கடமை)
நல்ல நெறிமுறைகளை நடைமுறைகளை செயல்படுத்துவது அரசாள்கின்றவரின் கடன்(கடமை)
கடமை என்னும் போரில் களிறு போன்ற பிரச்சனைகளை வென்று மீளல் பிள்ளைகளின் கடன்(கடமை)

ஒரு தாய் எழுதிய பாட்டல்லவா. அதனால்தான் நல்ல கருத்துகளை நயமகாகப் படைத்துள்ளார். இந்தப் பாடல்களின் வழியாக கடன் மீதான பார்வை காலகாலமாக மாறிக் கொண்டே வந்திருப்பதைப் பார்க்கலாம்.

முடிப்பதற்கு முன்னால் ஒரு செய்தி. “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று ஒரு சொற்றொடர் பிரபலமானது. இதைக் கம்பர் சொன்னதாகச் சொல்வார்கள். ஆனால் கம்பராமாயணத்தில் இப்படி ஒரு வரியே இல்லை.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
நான் பட்ட கடன் எத்தனையோ (இசை-மெல்லிசை மன்னர்) – http://youtu.be/SxeODtxmL9M
உள்ளத்தில் நல்ல உள்ளம் (இசை-மெல்லிசை மன்னர்) – http://youtu.be/GxG9EzeAXi4
உலகத்தில் சிறந்தது எது (இசை-ஆர்.கோவர்தனம்) – கிடைக்கவில்லை
பெத்த கடனுக்குதான் (இசை-இசைஞானி இளையராஜா) – http://youtu.be/XH9_BooSMtU
ஈஸ்வரா வானும் மண்ணும் (இசை-தேவா) – http://youtu.be/wkv4XZb07Eo

அன்புடன்,
ஜிரா

127/365