கற்க கற்க

கல்வி முறை, பள்ளி என்ன சொல்லி தருகிறது, குழந்தைகள் வீட்டிலேயே படிக்கும் home schooling, வேறு மாற்று வழிகள்  என்று என் டிவிட்டர் நண்பர்களிடையே ஒரு சுவாரசியமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் சீரியசான விஷயம். சரி / தவறு என்பதையெல்லாம் தாண்டி ஒரு தலைமுறையின் எதிர்காலம் பற்றிய உண்மையான கவலையுடன் வாத பிரதிவாதங்கள்.

எனக்கு உடனே Don’t let education get in the way of your learning என்ற Quote நினைவுக்கு வந்தது. கற்க வேண்டியது கடலளவு. கற்றுகொள்ளுதல் என்பது எங்கே வேண்டுமானாலும் நிகழலாம் என்பதும் அதில் அட்லீஸ்ட் ஒரு சிறு பகுதியாவது பள்ளியில் நடக்கிறது என்பதும் உண்மை. சந்தேகம் இருந்தால் கண்ணதாசனைக் கேட்கலாம்

குருதட்சணை என்ற படத்தில் ஒன்றே ஒன்று உலகம் ஒன்று என்ற பாடலில் கண்ணதாசன்   (பாடியவர்  பி.சுசீலா, இசை டி. கே. புகழேந்தி)  https://www.youtube.com/watch?v=bq2p6T5Rw_M. பள்ளியில் கிடைப்பது என்ன என்று விளக்குகிறார்

வாழும் வழிகள் தெரிந்து கொள்ள

வழிகள் செய்வது படிப்பு!

வருவதை ஒழுங்காய் வைத்துக்கொள்ளும்

அறிவைத்தருவது கணக்கு!

பார்க்கும் உலகைப் புரிந்துகொள்ள

பாதை சொல்வது பூகோளம்!

பரம்பரையான முன்னோர் கதையை

பாடம் சொல்வது சரித்திரம்!

ஏடும் அறிவும் கூட இருந்தால்

எல்லா நலனும் உண்டாகும்!

சரிதானே? முறையான கல்வி என்பது நம் பார்வைகளை விரிவாக்கி ஆர்வத்தை வளர்த்தால் அது ஒரு அழகிய ஆரம்பமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் முக்கியமாக  உறவை நட்பை சொல்லிக்  கொடுக்கிறது.

ஒரு குழந்தையின் கண்களில்  இருக்கும் வியப்பே கற்றலின் துவக்கப்புள்ளி.  காட்டில் கூட எதையாவது கற்றுகொள்ளலாம் என்பது வாலியின் வாதம். இந்த வரிகளை கேளுங்கள் (படம் திக்குத்தெரியாத காட்டில் இசை M.S. விஸ்வநாதன் பாடியவர் M S ராஜேஸ்வரி) http://www.youtube.com/watch?v=010ikQLt5wE

பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா நீ
பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
குதிச்சு குதிச்சு ஓடி போகும் குள்ள முயல் அண்ணா நீ
குதிக்காதே கொஞ்சம் நில்லு கூட வாரேன் ஒன்னா
பாவாடை போல் தோகை விரிச்சு புள்ளி மயில் வாயேன் என்
புத்தகத்திலே குட்டி போடவே பூஞ்சிறகொண்ணு தாயேன்
தாண்டி தாண்டி கிளைக்கு கிளை தாவிப்  போகும் குரங்கே நான்
பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன்
நீயும் இறங்கி ஓடி வா

முயல், மயில் குரங்கு யானை, மான் என்று பார்க்கும் எல்லா ஜீவனிடம் பேசும் ஆர்வத்தில் கூட  குழந்தை, கற்றுக்கொள்ளும் என்பதை சொல்கிறார்.

பல வருடங்களுக்கு முன் படித்த Tao Te Ching வரிகள் நினைவுக்கு வருகிறது.

We shape clay into a pot,

but it is the emptiness inside

that holds whatever we want.

கொஞ்சம் களிமண் கொண்டு செய்யப்படும் பானை களிமண் இல்லாத இடத்தால்தான் பயன் தருகிறது என்றே இதனை நான் புரிந்து கொள்கிறேன். திறந்த மனம் இருந்தால் போதும். நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று அர்த்தமா?

மோகனகிருஷ்ணன்

215/365