இதுதான் எங்கள் வாழ்க்கை

அடிக்கடி பார்க்கும் காட்சிதான். ஆபிசில் ஏழாவது மாடியில் ஜன்னலில் திடீரென்று முளைக்கும் முகங்கள். கட்டடத்தின் உச்சியில் இருந்து தொங்கும் கயிற்றில் இணைத்துக்கட்டிகொண்டு,  வெளிப்புற கண்ணாடிகளை  துடைப்பவர்கள்.

எவ்வளவு அபாயமான வேலை? Occupational hazard, safety என்று நிறைய ஜல்லி அடித்தாலும் இது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இந்த தொழில் சார்ந்த இடையூறு / அபாயங்கள் பல வகைப்படும். இவை உடல் / மனம் இரண்டையும் பாதிக்கும். பஞ்சாலை அல்லது சிமெண்ட் ஆலைகளில் வேலை செய்பவர்கள் சுவாசிக்கும் மெல்லிய தூசு அவர்கள் உடல்நலம் கெடுக்கும்.

திரைப்படங்களில் / பாடல்களில் இது பற்றி ஏதாவது இருக்குமா என்று தேடினேன். கண்ணில் பட்ட சில பாடல்கள். படகோட்டி படத்தில் வாலி எழுதிய தரை மேல் பிறக்க வைத்தான் என்ற மறக்கவே முடியாத ஒரு பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

http://www.youtube.com/watch?v=Z6DKos7t_V4

தரை மேல் பிறக்க வைத்தான்

எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கரை மேல் இருக்க வைத்தான்

பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்

என்று அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரை கொடுப்பவர்களின் வாழ்க்கை பற்றி எழுதுகிறார்

கடல் நீர் நடுவே பயணம் போனால்

குடிநீர் தருபவர் யாரோ

தனியா வந்தோர் துணிவை தவிர

துணையாய் வருபவர் யாரோ

ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்

ஒரு ஜாண்  வயிற்றை வளர்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம்

நீண்ட கடல் பயணம் முடித்து திரும்பும் ஒரு மாலுமியின் நிலை பற்றி Samuel Taylor Coleridge எழுதிய The Rime of Ancient Mariner என்ற ஆங்கில கவிதை வரிகளைப் பாருங்கள்

Water, water, everywhere,

And all the boards did shrink;

Water, water, everywhere,

Nor  any drop to drink.

கடலை நம்பி பிழைக்கும்  தொழில் மீன் பிடித்தல். மீனவர்களின் துயர் இன்றும் தொடரும் ஒரு அவலம். மிக ஆபத்தான வேலை என்று  United States Department of Labor குறிப்பிடுவது மீனவர்களைத்தான். அழகன் படத்தில் வரும் கோழி கூவும் நேரமாச்சு என்ற பாடலில் (இசை மரகதமணி பாடியவர்கள் சித்ரா மலேசியா வாசுதேவன், சீர்காழி சிவ சிதம்பரம்)  புலமைப்பித்தன் இந்த சோகத்தை பதிவு செய்கிறார். KB அடிக்கடி பயன்படுத்தும் ‘மேடை நிகழ்ச்சி’ உத்தியில் கதை சொல்லும் ஒரு பாடல்

http://www.youtube.com/watch?v=q7AufD8pSPc

காதலி சொன்னது வேதம் என்று

புயல் வரும் வேளையில் அவன் போனான்

இந்திய எல்லையை தாண்டும் போது

பாவிகள் சுட்டதில் பலியானான்

புலமைப்பித்தன் பாடலின் நடுவே போகிறபோக்கில் அழுத்தமாக இப்படி ஏதாவது சொல்வார். ‘ஏர் பூட்டி தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து’ என்று உழவன் வறுமையை சொல்வார். நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி (இசை இளையராஜா பாடியவர்கள் வசந்தா எம் எஸ் ராஜேஸ்வரி) பாடலை கவனியுங்கள்.  http://www.youtube.com/watch?v=UH1yjlnWTu4

எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை

இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை

வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே

காயம் என்றால் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே

யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்

யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்

மீட்டும் கையில் நானோர் வீணை

காயம் என்றால் தேகம்தானே என்ற வரியில் அந்தப்பெண்களின் அத்தனை சோகமும் சொல்லும் திறமை.

புது புது அர்த்தங்கள் படத்தில் வாலி எழுதிய கல்யாண மாலை பாடலில் சில வரிகள் தன்  சோகத்தை மறைத்து மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனின் மனம் பற்றி சொல்கிறது

 http://www.youtube.com/watch?v=VchhlBn9wjg

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும்  நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடு தான்…

சாதரண மஞ்சள் ஹெல்மெட் அணிந்த மெட்ரோ ரயில் வேலை செய்பவர்கள், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வீடு தேடி வந்து தென்னை மரம் ஏறுபவர், கட்டட வேலை செய்பவர்கள், சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்பவர்கள் என்று எல்லாரும் ‘இதுதான் எங்கள் வாழ்க்கை’ என்று சொல்வது போல் இருக்கிறது.

மோகனகிருஷ்ணன்

208/365