குடும்பம்: ஒரு கதம்பம்

70களிலும் 80களிலும் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்கியவை குடும்பப் பாடல்கள்.

இந்தப் பாடல்களில் குடும்பப் பாசம் முன்னிறுத்தப் படும். நேர்மையும் நல்ல பண்புகளும் ஒழுக்கம் போற்றப் படும். பொதுவாகவே ஒரே பாடல் மகிழ்ச்சியோடு முதலில் சோகத்தோடு பிறகும் பாடப்படும்.

மகிழ்ச்சியாகப் பாடிய பின்னர் குடும்பம் பிரியும். சோகமாகப் பாடிய பிறகு சேர்ந்துவிடும். இது படம் பார்க்கும் சராசரி ரசிகனுக்கும் தெரிந்த உலக உண்மை.

சோகமான பாடலைப் பாடினால் இளகிய மனம் உடையவர்கள் அழுது விடவும் வாய்ப்புண்டு. ஆகையால்தான் இந்த மாதிரி பாடல்களைக் கேட்கும் போது கையில் கைக்குட்டை…. இல்லை இல்லை. கைத்துண்டு இருந்தால் நல்லது.

குடும்பப் பாட்டு என்றதும் முதலில் எனக்குத் தோன்றியது நாளை நமதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் தான்.

அன்பு மலர்களே
நம்பி இருங்களேன்
தாய் வழி வந்த சொந்தங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே

இந்தப் பாடலைப் பாடி முடித்ததும் குடும்பம் முழுவதுமே பிரிந்து விடும். குழந்தைகள் பெரியவர்களாகித்தான் ஒன்று சேர்வார்கள்.

இன்னொரு பாடல் உண்டு. இதுவும் குடும்பப் பாட்டுதான். ஆனால் வளர்ந்தவர்களின் குடும்பப்பாட்டு. அண்ணன் தம்பிகள் பாடும் பாட்டு. மகிழ்ச்சியாக பாட்டைப் பாடிய பின்னால் குடும்பத்தில் சண்டை வந்து அவர்களும் பிரிந்துதான் போனார்கள். படம் முடியும் முன்னர் மூத்த அண்ணன் இறக்கும் போது ஒன்று சேர்வார்கள்.

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்குக் கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒன்னுக்குள் ஒன்னாக

இவர்கள் அண்ணன் தம்பிகள் என்றால், அண்ணனுக்கும் தங்கைக்கும் கூட குடும்பப் பாட்டு வைத்தது தமிழ் சினிமா.

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் வருகின்றது
அன்பு பொங்கிடும் அன்புத் தங்கையின் நெற்றியில்
குங்குமம் ஜொலிக்கின்றது

சினிமா வழக்கப்படி அண்ணனும் தங்கையும் பிரிந்து விடுகிறார்கள். பின்னொரு காட்சியில் அண்ணன் அந்தப் பாடலை ஒரு திருமண வரவேற்பில் பாடும் போது காலில்லாத தங்கை நடக்க முடியாமல் நடந்து ஓடமுடியாமல் அழ முடியாத அளவுக்கு அழுது…. கடைசியில் அண்னனைக் காண முடியாமல் போன போது திரையரங்குகளில் சிந்திய கண்ணீர் ஆற்றிலேயே ஆடிப்பெருக்கு கொண்டாடியிருக்கலாம்.

கிட்டத்தட்ட இதே போல இன்னொரு குடும்பம். தாய் தந்தை இழந்து அனாதைகளான அக்காவும் தம்பிகளும். அவர்களுக்கும் ஒரு பாடல் எழுதினார் கலைஞர் கருணாநிதி.

காகித ஓடம் கடலலை மேலே
போவது போலே மூவரும் போவோம்

இந்தப் படத்தில் முதலில் மகிழ்ச்சியாகவும் பிறகு சோகமாகவும் பாட மாட்டார்கள். முதலில் சோகமாகவும் அடுத்து பெரும் சோகமாகவும் பாடி படம் பார்த்த மக்களை கதறக் கதறக் கூக்குரலிட்டு அழவைத்ததை மறக்க முடியுமா? எப்போதோ பிரிந்து போன தம்பி குடிபோதையில் எதிரில் இருப்பது அக்கா என்று தெரியாமலே தவறிழைக்க நெருங்குவான். சோகத்தின் உச்சியில் அந்நேரம் அக்கா அந்தப் பாடலைப் பாட திருந்துகிறான் தம்பி. அரிவாள்மனையில் கழுத்தை அறுத்துக் கொண்டு குடும்பத்தை இணைக்கிறாள் அக்கா.

இன்னொரு குடும்பப் பாடல் உண்டு. இந்தப் பாடல் நடிகர் திலகத்துக்கு. மகிழ்ச்சியான குடும்பம். சந்தர்ப்பத்தால் மூலைக்கொன்றாய் பிரிகிறது. பிறகென்ன… படம் முடியும் போது எல்லாம் சுபம்.

ஆனந்தம் விளையாடும் வீடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு

பிரிந்தால் குடும்பமாகத்தான் பிரிய வேண்டுமா? கணவனும் மனைவியும் பிரிந்தால்? நிறைமாதமாக இருக்கும் மனைவிக்கு கணவன் ஒரு பாடல் பாடுகிறான். அவன் பாடலைப் பாடிய வேளை இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.

மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே
இதுவொரு சீராட்டம்மா
என்னையும் தாலாட்டம்மா

பிரிந்த கணவன் காஷ்மிரில் இருக்க… மனைவி டில்லியில் இருக்க.. ஒரு தற்செயலான தொலைபேசி அழைப்பு இருவரையும் பேச வைக்கிறது.

எதிர்முனையில் பேசுவது கணவன் என்று தெரிந்ததும் கே.ஆர்.விஜயா அதிர்ச்சியில் போனை கீழே போட்டு விடுவார்… அப்போது “சுமதீஈஈஈஈஈஈஈஈஈஈ” என்று நடிகர் திலகம் சிம்ம கர்ஜனை செய்யும் போது அடுத்த காட்சிக்காக வெளியே காத்திருந்தவர்கள் காதிலும் விழும். இந்தக் காட்சியில் கீழே விழுந்துவிட்ட கே.ஆர்.விஜயா கை நழுவவிட்ட தொலைபேசியை எடுப்பாரா இல்லையா என்ற அதிர்ச்சி தாங்காமல் திரையரங்கில் ஒருவருக்கு மாரடைப்பு வந்ததாகச் சொல்வார்கள்.

தமிழ்த் திரைப்படத்தின் தன்மை மாறிக் கொண்டிருந்த எழுபதுகளின் இறுதியில் மிகப் பழம் பெருமை வாய்ந்த இயக்குனர் டி.ஆர்.சுந்தரம் ஒரு திரைப்படம் எடுத்தார். அந்தப் படத்திலும் ஒரு குடும்பப் பாட்டு. அவர்கள் குடும்பத்தோடு இன்னொரு உறுப்பினராக நிலா.

வெண்ணிலா வெள்ளித்தட்டு
வானிலே முல்லை மொட்டு

இந்தப் படத்திலும் பிரிந்த அண்ணன் தம்பி தங்கைகள் படம் முடிவதற்கு முன்னால் குய்யோ முய்யோ என்று கதறிக் கொண்டு ஒன்று சேர்ந்தார்கள் என்றும் அவர்களின் மூத்த அண்ணன் உயிரைக் கொடுத்து மற்றவர்களைக் காப்பாற்றினான் என்றும் சொல்லி கிண்டலடிக்க விரும்பவில்லை.

இது போன்ற குடும்பப் பாட்டுகள் குறைந்து விட்ட காலத்தில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. அதுவும் கலைப்பட இயக்குனர் ஒருவரால் கொண்டுவரப்பட்டது. பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படப் பாடலைத்தான் சொல்கிறேன்.

சிறுவயதில் அம்மா பாடிய பாட்டை நினைவில் வைத்துக் கொண்டு பின்னாளில் அண்ணனும் தம்பியும் சேர்கிறார்கள். அம்மாவைக் கொன்றவனைப் பழி வாங்குகிறார்கள்.

பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா
அலை போலவே
மனம் விளையாடுதே

இதில் அம்மாவாக பாடும் எஸ்.ஜானகி குரலில் பிள்ளை நிலா என்றும் மகனுக்காக ஏசுதாஸ் அவர்கள் பாடும் போது பில்லை நிலா என்றும் உங்கள் காதில் விழுந்தால் என்னைக் குற்றம் சொல்லாதீர்கள்.

இதுவரை நாம் பார்த்ததெல்லாம் குடும்பப் பாட்டுகளே அல்ல என்னும் அளவுக்கு 90களில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. இதுவரை நாம் மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் குடும்பப் பாட்டுகளைப் பார்த்தோம்.

ஆனால் ”காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி சொன்னதை ஒவ்வொரு படத்திலும் பாம்பை டைப் அடிக்க வைத்தும் குரங்கை பைக் ஓட்ட வைத்தும் யானையை சைக்கிள் ஓட்ட வைத்தும் நிரூபித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் இராம.நாராயணன் எடுத்த படமான துர்காவில் ஒரு குடும்பப் பாட்டு உண்டு.

பாப்பா பாடும் பாட்டு
கேட்டு தலைய ஆட்டு
மூணு பேரும் ஒன்னுதானே
அம்மாவுக்கு கண்ணுதானே
ஒன்னா விளையாடலாம்

அந்தப் பாடலைக் கேட்டதுமே பிரிந்து போன நாயும் குரங்கும் எங்கெங்கோ இருந்து ஓடி வந்து பேபி ஷாமிலியைச் சேரும் காட்சி படம் பார்க்கின்றவர்களின் நெஞ்சை உருக்கும். மனதை கிறுகிறுக்க வைக்கும். சித்தத்தை பைத்தியம் பிடிக்க வைக்கும்.

எப்படியெல்லாம் நாம் சிக்கியிருக்கிறோம் பார்த்தீர்களா?!?

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர் – (மகிழ்ச்சி – பி.சுசீலா, அஞ்சலி, ஷோபா, சசிரேகா) (சோகம் – டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – நாளை நமதே
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ED6zDjOZXtw

பாடல் – முத்துக்கு முத்தாக
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – கண்டசாலா
இசை – கே.வி.மகாதேவன்
படம் – அன்புச் சகோதரர்கள்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-gyJT1nQDnM

பாடல் – பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – நினைத்ததை முடிப்பவன்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Azrz41LaLeo

பாடல் – ஆனந்தம் விளையாடும் வீடு
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – சந்திப்பு
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=bzRQIs5OIuA

பாடல் – மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – திரிசூலம்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-oUNmu4edLA

பாடல் – வெண்ணிலா வெள்ளித்தட்டு
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – மலேசியா வாசுதேவன், பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
இசை – ராஜேஷ்
படம் – காளி கோயில் கபாலி
பாடலின் சுட்டி – http://youtu.be/GfWzFhWRuHs

பாடல் – பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர் – எஸ்.ஜானகி (மகிழ்ச்சி), கே.ஜே.ஏசுதாஸ்(சோகம்)
இசை – இசைஞானி இளையராஜா
படம் – நீங்கள் கேட்டவை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=XvrB5UA0Kl0

பாடல் – பாப்பா பாடும் பாட்டு
வரிகள் – தெரியவில்லை
பாடியவர் – எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை – சங்கர் – கணேஷ்
படம் – துர்கா
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Vg0kYE6CnWA

அன்புடன்,
ஜிரா

314/365