இரு வரிக் கவிதை

பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள்  காதல் ரச பாடல்கள் முத்தம் தரும் / கேட்கும் பாடல்கள் … எவ்வளவு பாடல்கள் இதழ் பற்றி! விதிவிலக்கின்றி அத்தனை கவிஞர்களும் இது பற்றி பாடல் எழுதியிருக்க, எதைப்பற்றி நான் பதிவெழுத?

கண்ணதாசன் முதல் இன்று காலை ட்விட்டரில் உதித்த புது கவிஞன் வரை அனைவரும் இதழின் சிவப்புக்கு / சிறப்புக்கு ஒரு கவிதையாவது டெடிகேட்  செய்கிறார்கள்.

  • சிப்பி போல இதழ்கள், மாதுளை செம்பவளம் மருதாணி போல என்று ஓராயிரம் பாடல்கள்.

  • தித்திக்கும் இதழ் உனக்கு , இதழே இதழே தேன் வேண்ட குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு -தேன் பழரசம் மது என்று போதையில் இன்னொரு ஆயிரம்.

  • தவிர ஆரிய உதடுகள் திராவிட உதடுகள் , இதழில் கவிதை எழுதும் நேரம், , எந்த பெண்ணிலும் இல்லாத உதட்டின் மேல் மச்சம், , bubble gum ஐ இதழ் மாற்றி – டூ மச்!

சரி வித்தியாசமாய் ஏதாவது? பார்க்கலாம். முதலில் பழைய பாடல். தங்க ரங்கன் என்ற படத்தில் ஒரு பாடல். MSV இசையில் நா. காமராசன் எழுதியது.

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

கவனியுங்கள். அவள் பெயர்தான் ஒட்டிக்கொண்டது. உச்சரிப்பதுதான் தித்திக்கிறது. கண்ணியமான வரிகள்.

அந்நியன் படத்தில் ஐயங்காரு வீட்டு அழகே என்ற பாடலில்

உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை

நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை

தம்பி படத்தில் சுடும் நிலவு சுடாத சூரியன் என்ற பாடலில் ‘நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்’ என்ற வரி

ஐஸ்வர்யா ராய் என்றாலே வைரமுத்துவின் கற்பனை உற்சாகமாய் இருக்கும்

ராவணன் படத்தில் ஒரு பாடல்.

உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே

மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு நாள் யாரோ என்ற பாடலில் இதழின் நிறம் பற்றி வாலியின் கற்பனை ஒரு அழகிய கவிதை.

செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம்

வெளுத்தன செந்நிற இதழ்கள்

வெள்ளை விழிகளும் செந்நிற இதழ்களும் நிறம் மாறி நிற்கும் பெண்ணின் நிலை. இலக்கியத்தில் இதன் equivalent பற்றி சொக்கனும் ராகவனும் தான் சொல்லவேண்டும்.

அடுத்து இவன் படத்தில் அப்படி பாக்குறதுன்னா வேணாம் என்ற பாடலில் பழனிபாரதி சொல்லும் கற்பனை இனிமை

சுற்றி சுழன்றிடும் கண்ணில் இசை தட்டு ரெண்டு பார்த்தேனே
பற்றி இழுத்தென்னை அள்ளும் பட்டு குழிகளில் வீழ்ந்தேனே
ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும்

உந்தன் புத்தகத்தில் அச்சானேன்

கண்களால் கைது செய் என்ற படத்தில் பா விஜய் எழுதிய என்னுயிர் தோழியே என்று ஒரு பாடல்

மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு

எந்தன் செவியில் சிணுங்குகிறாய்

ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ

நீ அல்லவோ சிலுப்புகிறாய்

அவளை இரண்டு இதழ் கொண்ட அதிசய பூவாய் பார்க்கும் கற்பனை.

ஆயிரம் தான் இருந்தாலும் காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் என்பது என் எண்ணம். பழனிபாரதியும் அதைத்தான் சொல்கிறார்.

இன்னும் நிறைய இருக்கும். நீங்களும் சொல்லுங்களேன்

மோகனகிருஷ்ணன்

089/365