ஜாடை நாடகம்

ஒரு பக்கம் பார்த்து, ஒரு கண்ணை சாய்த்து, உதட்டையும்  நகத்தையும்  கடித்து, மெதுவாக சிரித்து கால் பெருவிரலால் கோலமிட்டு என்று இலக்கியத்திலும் கதையிலும் கவிதையிலும் திரைப்படங்களிலும் பதிவாக்கப்பட்ட ஒரு பிம்பம் – பெண்களின் Exclusive உணர்வு-நாணம்! பெண்களுக்கு வகுக்கப்பட்ட நால் வகை பண்புகளில் ஒன்று . பெண்மை என்பதால் நாணம் வந்ததா நாணம் வந்ததால் பெண்மை ஆனதா என்று கவிஞர்கள் வியந்த ஒன்று.

திரைப்பாடல்களில் நிறைய காதல் பாடல்கள் உண்டென்பதால் நாணம் / வெட்கம் பற்றியும் அவள் கன்னம் சிவந்தது பற்றியும் சொல்லும் வரிகள் ஏராளம். ஆண் எப்போதும் பெண்ணை இந்த வட்டத்தை விட்டு வரச்சொல்வதும் பெண் இந்த ‘சங்கிலியை’ உடைக்கமுடியாமல் மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல என்று  தவிப்பதும் ஐயோ நாணம் அத்துப்போக புலம்புவதும் என்றும் பல பாடல்கள்.

முதலில் ஒரு definition. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் நாணமோ இன்னும் நாணமோ என்ற கண்ணதாசன் பாடல்.

நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ

இந்த ஜாடை நாடகமும் பார்வை சொல்லுவதும் என்ன என்று ஆண் கேட்கும் கேள்வி. பெண் என்ன பதில் சொல்லுவாள்? அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது என்கிறாள்

ஆடவர் கண்களில் காணாதது
அதுகாலங்கள் மாறியும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது அது இது

தொடர்ந்து எதெல்லாம் நாணம் என்று ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். கண்ணதாசன் விளைந்து நிற்கும் வயலை பார்த்து பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா ‘பருவம் வந்த பெண்ணைப்போல நாணம் என்ன சொல்லம்மா என்று சொன்னவர். நாணம் பற்றி இவர் சொல்வதென்ன?

ராஜா ராஜஸ்ரீ ராணி வந்தாள் என்ற ஊட்டி வரி உறவு படத்தின் பாடலில்

மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது

மெல்ல மெல்ல நாணத்தின் தேரும் வந்தது

இடையொரு வேதனை நடையொரு வேதனை கொள்ள

இதழொரு பாவமும் முகமொரு பாவமும் சொல்ல

என்று பெண்ணின் eternal conflict பற்றி அழகாக சொல்கிறார். வாலியும் ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ என்ற பாடலில் இதே conflict பற்றி சொல்லும் வரிகள்

மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை

சிவந்த மண் படத்தில் ஒரு கன்னம் சிவந்த பெண்ணைப்பற்றி கண்ணதாசன் சொல்வதைப் பாருங்கள் http://www.youtube.com/watch?v=_rXdHS5a5iY

ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்

அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ

நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ

வள்ளுவன் நாணென ஒன்றோ அறியலம் என்று சொன்ன கருத்தை பாலும் பழமும் படத்தின் காதல் சிறகை காற்றினில் விரித்து என்ற பாடலில் (வழக்கம் போல) எளிமையாக சொல்கிறார்

முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் நடந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா

இதையே ஆயிரத்தில் ஒருவன் பாடலில் சொல்கிறார்

தன்னை நாடும் காதலன் முன்னே
திரு நாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ நாணுமோ

சமீபத்தில் வந்த சிவப்பதிகாரம் படத்தில் சித்திரையில் என்ன வரும் என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=UrvBQz-hPRc

கேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க

கூனி  முதுகாக  செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க

என்று பெண் பாட ஆண் சொல்வதாக யுகபாரதியின்  ஒரு அருமையான கற்பனை.

மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற

நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற…

அட இது Sustained Release மருந்து போல் நாவிடுக்கில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி …படுத்தி – ஆஹா

இது பெண்களின் Intrinsic குணம் என்றே தோன்றுகிறது. வைரமுத்து  ஏன் அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு என்று சொன்னார் ?

மோகனகிருஷ்ணன்

113/365