காற்றின் வகைகள்

நடிகை குஷ்புவை இந்தப் பாடல் மிகமிக உயரத்துக்கு கொண்டு சென்றது என்றால் மிகையில்லை. ஆம். குஷ்புவின் திரைவாழ்வில் இந்தப் பாடலின் பங்கும் பெரிதுதான்.

பூப்பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
………………………….
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது மலையமாருதம் பாடுது
பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – இசைஞானி இளையராஜா
படம் – வருஷம் பதினாறு
பாடலின் சுட்டி – http://youtu.be/AfAZQd7bHbk

இந்த இனிய பாடலில் இரண்டு சொற்கள் நாம் கவனிக்கத்தக்கவை. பொதுவாகப் நாம் பயன்படுத்தாதவை.

மந்தமாருதம்
மலையமாருதம்

இவற்றின் பொருள் புரிய வேண்டுமென்றால் மாருதம் என்பதற்குப் பொருள் முதலில் புரிய வேண்டும்.

வடமொழியில் மாருதம் என்றால் காற்று. வாயுவாகிய காற்றின் மைந்தனான அனுமனுக்கு அதனால் மாருதி என்றே பெயர்.

சரி. மாருதம் புரிந்து விட்டது. அதென்ன மந்தமாருதமும் மலையமாருதமும்?

மந்தமாக வீசும் காற்று மந்தமாருதம். அதாவது மெல்ல வீசும் தென்றல்காற்றுக்கு வடமொழியில் மந்தமாருதம் என்று பெயர்.

அப்பூதியடிகள் நமக்குத் தெரிந்தவர். திருநாவுக்கரசர் பெயரில் பல நற்பணிகளைச் செய்தவர். அவர் நடத்திய தண்ணீர்ப் பந்தலில் மந்தமாருதம் வீசியதாக திருத்தொண்டர் புராணம் சொல்கிறது.

வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப்
பந்தர்
உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளிச்
சிந்தை வியப்பு உற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர்
சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார்

திருநாவுக்கரசர் வருகிறார். அங்கே ஒரு தண்ணீர்ப்பந்தல். மந்தமாருதம்(தென்றல்) வீசும் சீதப்(குளிர்ந்த) பந்தல். அங்கு தண்ணீர் அமுதமாய் இருக்கிறது. யார் இதைச் செய்தது என்று பார்க்கிறார். திருநாவுக்கரசர் என்று அவருடைய பெயர் இருப்பதைப் பார்த்து வியந்து போகிறார். இதுதான் மேலுள்ள பாட்டின் எளிமையான பொருள்.

சரி. மந்தமாருதம் புரிந்து விட்டது. மலைய மாருதம்? இதுவும் எளிமைதான். மலையிலிருந்து வரும் காற்று மலைய மாருதம்.

கலை உவா மதியே கறி ஆக, வன்
சிலையின் மாதனைத் தின்னும் நினைப் பினாள்,
மலையமாருத மா நெடுங் கால வேல்
உலைய மார்பிடை ஊன்றிட ஓயு மால்

மேலேயுள்ளது கம்பராமாயணப் பாடல். இது மலையமாருதத்தை காலனின் வேல் என்று குறிப்பிடுகிறது? ஏன்? அது சூர்ப்பனகையை அந்த அளவுக்குத் துன்புறுத்துகிறது. காதல் உள்ளத்தில் கொதிக்கும் போது காதலன் அருகில் இல்லாத போது மலைக்காற்று குளுமையாக வீசினால் அது கொடுமையாகத்தானே இருக்கும். அதனால்தான் இனிய மலைக்காற்றை சூர்ப்பனகையைக் கொல்லும் காலனின் வேல் என்று சொல்கிறார் கம்பர்.

இந்த மந்தமாருதமும் மலையமாருதமும் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. பக்தி இலக்கியங்கள் எழுந்த காலத்துக்குப் பிறகுதான் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன. வடமொழியும் தென்மொழியும் கலந்து பயிலத் தொடங்கிய காலத்தில் இந்தச் சொற்கள் உண்டாகியிருக்க வேண்டும்.

சரி. இன்னொரு மாருதமும் இருக்கிறது. அதுதான் சண்டமாருதம். சண்டித்தனம் செய்யும் காற்றுக்குச் சண்டமாருதம் என்று பெயர். அதாவது சூறாவளி. வீசுகின்ற இடமெல்லாம் அழிவைச் செய்யும் சூறாவளியைச் சண்டமாருதம் என்று வடமொழி அழைப்பதில் தவறில்லையே.

அன்புடன்,
ஜிரா

139/365