சென்னையில் ஒரு நாள்

கடந்த வாரம் ஆபீஸ் வேலையாய் தென் சென்னை, புற நகர், வட சென்னை , தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்கள் செல்லவேண்டியிருந்தது. தினந்தோறும் விரிவடையும் நகரம் பிரமிப்பாக இருந்தது.

பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு வெயில் வேளையில் பயணம். -வழியெங்கும்  சாப்ட்வேர் நிறுவனங்கள் ,கல்லூரிகள். அதனால் நிறைய மிதவை (??) பேருந்துகள்  சாலையின் இரு புறமும் வீடு வாங்கலையோ வீடு வாங்கலையோ என்று கூவும் ப்ளெக்ஸ் விளம்பரங்கள். கண்ணுக்கு தெரியும் தூரம் வரை கட்டடங்கள் – புதிய, பழைய, முடிக்கப்படாமல் என்று பல நிலைகளில் உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், தரையும் கூரையும் சொந்தமில்லை ஆனால் இடையில்  உள்ள காற்று வெளி  (Air Pocket ) மட்டும் விற்பனைக்கு!

சட்டென்று மனதில் ஓடியது  ‘ சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி’ என்ற வரிகள்.  உடனே மனம்  நாலு வரி நோட் அலைவரிசையில் sync ஆனது.அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தில் கண்ணதாசன் அன்றைய (1967) மெட்ராஸ் பற்றி எழுதிய பாடல் http://www.youtube.com/watch?v=ujMYkmG6cqA

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே

சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே

கிராமத்திலிருந்து வரும் ஒருவன் நகரத்தின் அவலங்கள் சொல்லும் பாடல். அவசர வாழ்க்கையும் காது கூசும் மெட்ராஸ் பாஷையும் பற்றிய வருத்தம்.

சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்காக

வீட்டக் கட்டி இருந்தாலும் சிலர் ரோட்டு மேலே படுக்காக

சீட்டுக்கட்டா? 1967ல் சென்னையில் அடுக்கு மாடி இருந்திருக்க வாய்ப்பில்லை. ஹவுசிங் போர்ட் வீடுகள் பார்த்து / LIC பார்த்து பாடுவது போல் காட்சி. அதுவே சீட்டுக்கட்டு என்றால் இன்றைய கட்டடங்களைப்பார்த்தால்  தீப்பெட்டிக் கணக்காக என்று பாடியிருப்பாரோ?  நகரத்தின்  தெருக்களிலே நிக்க ஒரு நிழலில்லையே  என்றும் அங்கலாய்க்கிறார் .

பட்டணத்துத் தெருக்களிலே ஆளு நிக்க ஒரு நிழலில்லையே

வெட்டவெளி நிலமில்லையே நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே

காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே

நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே

இன்று நகரங்களில் ஷாப்பிங் மால்கள் தான் பப்ளிக் ஸ்பேஸ் என்னும்போது இன்றும் நிற்க நிழலில்லைதான். அதனால்தான் வங்கக்கடலோரம் காற்று வாங்க பெரும் கூட்டம்.என்கிறார்

வைரமுத்துவும் ஒரு நகர்வல பாடல் எழுதியிருக்கிறார். மே மாதம் படத்தில் மெட்ராச சுத்திப்பாக்கப்போறேன் என்ற பாடல் http://www.youtube.com/watch?v=VETmkuuI8Fs

மெரினாவில் வீடு கட்டப்போறேன்

லைட் ஹவுசில் ஏறி நிக்கப்போறேன்

இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு

இதுக்கு உங்கப்பன் பேர் வக்க சொல்லப்போறேன்

என்று ஜாலியான Fantasy கற்பனையில் ஆரம்ப வரிகள். சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம், ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்,, பாரின் சரக்கு பர்மா பஜார் என்று சென்னையின் ‘பெருமைகளை’ பட்டியல் போடுகிறார்.

மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்

ஆனா ஸ்டைலுன்ன இப்ப மினரல் வாட்டர்

மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ சத்தம்

என்றும் நக்கல் செய்கிறார். http://www.youtube.com/watch?v=VETmkuuI8Fs

இரண்டு பாடல் காட்சிகளையும் பாருங்கள். சென்னை அழகுதான் முதல் பாடலில் வரும் அசல் ஸ்பென்சர் பிளாசாவும் சென்ட்ரல் ஸ்டேஷன் மேல் இருக்கும் murphy radio எழுத்துக்களும் அழகு.

பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பாடல்கள் இன்றும் பொருத்தமாய்… மாற்றங்களே இல்லையா?  சீட்டுக்கட்டு தீப்பெட்டியாகி, ஆட்டோ ஷேர் ஆட்டோவாகி.. இது வளர்ச்சியா?

வெயில்தான். மின்வெட்டும் உண்டு. கொசுக்கள் ராஜ்ஜியம். கூவம் பார்த்தால் கோவம் வரும்.ஆனாலும் எனக்கு சென்னை பிடிக்கும். சொர்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?

மோகனகிருஷ்ணன்

159/365