கண்ணகியும் சீதையும்

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவையில்ல ஃபார்மசி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி ஃபார்மசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபேண்டசி
படம் – காதலன்
பாடல் – வைரமுத்து
பாடியவர் – சுரேஷ் பீட்டர்ஸ், ஷாகுல் ஹமீது, ஏ. ஆர். ரகுமான்
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – http://youtu.be/y2uT02X8a94

Take it easy policy. ஒரு காலத்தில் ஊரெங்கும் ஓடி உலகெங்கும் ஆடிய பாடல். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் பாடுவதாக எழுதப்பட்ட பாட்டு.

ஆனாலும் இந்தப் பாடலை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாத/முடியாத ஒரு கருத்தையும் சேர்த்தே எழுதியிருக்கிறார்.

கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியே சிலையேது

இந்தக் கருத்தை ஏற்பாரும் உண்டு. மறுப்பாரும் உண்டு. எந்தவிதப் பாகுபாடும் இன்றி இந்தக் கருத்தைச் சிந்தித்தால் வைரமுத்து அவர்களின் இலக்கிய அறிவு விளங்கும். இன்றைக்கு வைரமுத்து சொன்னது அன்றைக்கே ஒரு பெரும் புலவரால் சொல்லப்பட்டதுதான். அதுவும் அவர் எழுதிய காப்பியத்தில் ஒரு பெண்ணின் வாயால் சொல்லப்பட்டது. ஆம். விளக்கத்தை தொடர்ந்து பார்ப்போம்.

சேரன் செங்குட்டுவனுக்கு ஒரு ஐயப்பாடு. சேரன் செங்குட்டுவன் தெரியும்தானே? இளங்கோவடிகளின் அண்ணன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த மகன். அந்த செங்குட்டுவன் தன் மனைவியான வேண்மாளிடம் வியந்து கேட்கிறான். இரண்டில் எது சிறந்தது என்பது அவனது கேள்வி.

உயிருடன் சென்ற ஒரு மகள் தன்னினும்
செயிருடன் வந்த இச் சேயிழை தன்னினும்
நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்? என மன்னவன் உரைப்ப

புரியவில்லையா? இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். இருவரும் செய்தது பெரிய செயல்கள். இவர்கள் இருவரில் கற்பு நலத்தை வியந்து பாராட்டத்தக்கவர் யார் என்பதுதான் அவனது கேள்வி. சரி. யாரந்த இரண்டு பெண்கள்?

கணவன் இறந்தான் என்று தெரிந்ததும் அவனுடனே கிளம்பி விட்டவள் ஒருத்தி.
கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று தெரிந்ததும் நீதி கேட்டுப் போராடினாள் ஒருத்தி.

இப்போது புரிந்திருக்குமே அந்த இரண்டு பெண்கள் யாரென்று. கணவனோடு உயிர் விட்டவள் பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவி கோப்பெருந்தேவி. கணவனுக்காக நீதி கேட்டுப் போராடியவள் கண்ணகி.

இவர்கள் இருவரில் யாருடைய கற்புநலத்தை வியப்பது? பாராட்டுவது? புகழ்வது?

கேள்வி படுபயங்கர கேள்வி. இரண்டு சிறந்த பெண்களுக்குள் யாருடைய கற்புநலம் சிறந்தது என்று ஒரு ஆணுக்கு ஐயம். இன்னொரு வீட்டுப் பெண்ணைப் பற்றிப் பேசி சற்று வரம்பு மீறித்தான் சிந்தித்திருக்கிறான் செங்குட்டுவன்.

அந்தச் சிந்தனையைத் திருத்தத்தான் வேண்டும். உலகுக்கும் புரிய வைக்கத்தான் வேண்டும். பெண்ணின் கற்பைப் பற்றி ஆண் பேசுவதே தவறு என்று இளங்கோவடிகள் கருதியிருக்க வேண்டும். அதனால்தான் ஒரு பெண்ணின் வாயிலாக “பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்று சொல்கிறார்.

காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்

மேலே உள்ள வரிகள் சேரநாட்டரசி வேண்மாள் சொன்னவை. கற்பு பற்றி ஒரு பெண்ணின் கருத்தைப் பார்ப்போமே.

கணவனோடு என்றும் உடன் நின்று, அவன் உயிரை விட்டதும் அவனுடனேயே ஒருத்தி உயிர் விட்டாள். அவள் பெரும் செல்வம் பெற்ற திருமகள். கணவனோடு அவள் விண்ணுலகில் என்றும் இருப்பதே அவளுக்குப் பிடித்த செல்வம். அதைத் தவிர எதுவும் அவளுக்குப் பிடிக்காது.

ஆனால் கணவனுக்கு ஒரு குற்றம் இழைத்ததும் அதைத் தட்டிக் கேட்ட அறச் சீற்றத்தைக் கொண்டாளே.. அவளே பத்திக் கடவுள். அவளுடைய அந்தத் திறமே கற்பெனும் திண்மை. அவளுக்கே கோயில் கட்ட வேண்டும். அந்தக் கோயிலைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் குற்றத்தைத் தட்டிக் கேட்கும் எண்ணம் வரவேண்டும்.

கோப்பெருந்தேவியின் இடத்தில் சீதையையும் பொருத்திப் பார்க்கலாம். அவளும் கணவனோடு சென்ற இடமெல்லாம் சென்றவள்தான். அவளுக்கு எது பொருத்தமாகவும் பிடித்தமானதாகவும் இருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மறுபடியும் வைரமுத்து எழுதிய இந்த வரிகளைப் பாருங்கள். ஒரு புதிய பரிமாணம் புலப்படுமே!
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியே சிலை ஏது?

அன்புடன்,
ஜிரா

136/365