ரிப்பீ(பா)ட்டு

நண்பர் @nchokkan எழுதிய பொய்க்கும் மெய்க்கும் இடையே பதிவில் குறிப்பிட்டிருந்த மூடித்திறந்த விழி இரண்டும் பார் பார் என்ற பாடல்.இதில் .  சரணத்தின்  வரிகளில்  ஒரு வார்த்தை இரு முறை வருவது சுவாரஸ்யமாக இருக்கவே பாடலை முழுவதும் கேட்டேன். கவிஞர் இந்த விளையாட்டை  பல்லவியில் ஆரம்பித்து முதல் சரணம் வரை தொடர்கிறார். ஆனால் ஏனோ அடுத்த சரணத்தில் இந்த உத்தியை கைவிட்டுவிடுகிறார்.

இது போல வேறு பாடல் உண்டா? கொஞ்சம் முத்துக்குளித்ததில் கிடைத்த  இரண்டு அருமையான பாடல்களை கவிஞர் கண்ணதாசன் இதே போல் எழுதியிருக்கிறார்.

தேன் நிலவு படத்தில், ஏ. எம். ராஜா இசையில், அவரே பி. சுசீலாவுடன் இணைந்து பாடிய ’நிலவும் மலரும் பாடுது’ http://www.inbaminge.com/t/t/Then%20Nilavu/Nilavum%20Malarum.eng.html (கேட்டுக்கொண்டேயிருக்கலாம் என்று தோன்றுகிறது ) என்ற பாடலின் சரணத்தில்

      சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா

எல்லா வரிகளிலும் ஒரு வார்த்தையை இரண்டு முறை வைத்து ஒரு அந்தரங்க உரையாடலை பதிவு செய்யும் மாயம். அடுத்த சரணத்திலும் அதை தொடர்கிறார்

      முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி ஆழமான கவிதை சொல்வது கண்ணதாசனுக்கு கை வந்த வித்தை.

அடுத்த பாடல் இன்னும் விசேஷமானது. ஒரு பாடல் முழுவதும் இது போல் எழுத முடியும் என்று நிரூபிக்கும் கவிதை. வெண்ணிற ஆடை படத்தில் வரும் கண்ணன் என்னும் மன்னன் என்ற http://www.inbaminge.com/t/v/Vennira%20Aadai/Kannan%20Ennum%20Mannan.eng.html
பாடலின் வரிகள் இதோ. எல்லா வரிகளிலும் ஒரு வார்த்தை இருமுறை வரும்

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்னப் பின்ன
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்

அற்புதமான அமைப்பு. சுசீலா அவர்களின் தேன் குரலில் எல்லா வரிகளும் உயிர்பெற்று – அருமையான பாடல்.

கண்ணதாசன் : அவர் கண்ணனுக்கு தாசன். நான் அவருக்கு தாசன்

மோகன கிருஷ்ணன்

078/365