என் காந்தா!

  • படம்: கண்ட நாள் முதல்
  • பாடல்: கண்ட நாள் முதலாய்
  • எழுதியவர்: என். எஸ். சிதம்பரம்
  • இசை: என். எஸ். சிதம்பரம் / யுவன் ஷங்கர் ராஜா
  • பாடியவர்: பூஜா, சுபிக்‌ஷா
  • Link: http://www.youtube.com/watch?v=MD9j8xxvYe8

கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி,

கையினில் வேல் பிடித்த, கருணை சிவ பாலனை!

வண்டிசை பாடும் எழில் வசந்தப் பூங்காவில்,

வந்து சுகம் தந்த கந்தனை, என் காந்தனை!

என். எஸ். சிதம்பரம் எழுதி இசையமைத்த பழைய பாடல் இது. பின்னர் அதனை ரீமிக்ஸ் செய்து ஒரு படத்தில் பயன்படுத்திக்கொண்டார் யுவன் ஷங்கர் ராஜா. பாடல் வரிகளை மாற்றவில்லை.

இந்தப் பாடலில் நாம் கவனிக்கவிருக்கும் வார்த்தை ‘காந்தன்’.

முருகனைப் பாட வந்த என். எஸ். சிதம்பரம், கந்தன், காந்தன் என்று இயைபுத் தொடைக்காகமட்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. ’காந்தன்’ என்றால் கணவன் என்று அர்த்தம். அந்தக் கந்தனையே தன்னுடைய கணவனாக நினைத்துப் பாடும் ஒரு பெண்ணின் மொழியாக இந்தப் பாடல் உள்ளது.

கண்ணனைப் பலவிதமாகக் கற்பனை செய்து எழுதிய பாரதி, ‘கண்ணன்: என் காதலன்’க்கும் ‘கண்ணன்: என் தந்தை’க்கும் இடையே, ‘கண்ணன்: என் காந்தன்’ என்று ஒரு பாட்டு எழுதியுள்ளார்.

’லஷ்மி காந்தன்’ என்று பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதன் அர்த்தம், திருமகளின் கணவன்.

இதே ‘காந்தன்’ என்ற பெயர், ’சிறந்த ஆண்’ என்பதுபோன்ற பொருளிலும் வருகிறது என்று நினைக்கிறேன், எழுத்தாளர்‘ஜெய காந்தன்’ பெயருக்கு அர்த்தம், வெற்றியின் கணவன்? அல்லது, தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்கும் ஆண் மகன்?

இந்தத் திசையில் இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சியை நீட்டினால், விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்ற பெயர்களும் விஜயகாந்தன், ரஜினிகாந்தன் என்பதன் சுருக்கம்தானா? ஈர்க்கும் காந்தத்துக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு?

போகட்டும், ‘காந்தன்’ என்றால் கணவன், அதற்குப் பெண்பால், அதாவது ‘மனைவி’க்கு இணையான சொல் என்ன?

’காந்தி’ அல்ல, காந்தை!

இதற்குச் சான்றாக, நீதி நூல் பாடல் ஒன்றில் ‘புரவிகள்போல் காந்தனும் காந்தையும்’ என்கிறது. அதாவது, கணவனும் மனைவியும் ஒரு வண்டியில் பூட்டிய இரண்டு குதிரைகளைப்போல் ஒருமித்த சிந்தனையோடு இருக்கவேண்டுமாம்!

***

என். சொக்கன் …

14 12 2012

13/365