பொய்க்கும் மெய்க்கும் இடையே

  • படம்: தாயைக் காத்த தனயன்
  • பாடல்: மூடித் திறந்த இமை இரண்டும் பார், பார் என்றன
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=-MiDUzvViSo

அன்னப் பொடிநடை முன்னும் பின்னும் ஐயோ, ஐயோ என்றது,

வண்ணக் கொடி இடை கண்ணில் விழுந்து மெய்யோ, பொய்யோ என்றது,

கன்னிப் பருவம் உன்னைக் கண்டு காதல், காதல் என்றது,

காதல் என்றதும் வேறோர் இதயம் நாணம், நாணம் என்றது!

கண்ணதாசனை நாம் கம்ப தாசன் என்றும் அழைக்கலாம். அந்த அளவுக்குக் கம்பன்மீது கவிஞருக்குப் பற்று அதிகம்.

இதற்குச் சாட்சியாக, கண்ணதாசனின் தனிப்பாடல்களில் இருந்து சில வரிகள்:

அந்நாளில்,

அழகு வெண்ணெய் நல்லூரில்,

கம்பனது வீட்டில்

கணக்கெழுதி வாழ்ந்தேனோ!

  • பத்தாயிரம் கவிதை

சத்தாக அள்ளிவைத்த

சத்தான கம்பனுக்கு ஈடு, இன்னும்

வித்தாகவில்லை என்று பாடு!

  • கம்பன் எனும் மாநதியில்

கால்நதிபோல் ஆவதென

நம்புகிறேன் பாட்டெழுதும் நானே, அந்த

நாயகன்தான் என்ன நினைப்பானோ!

தனிப்பாடல்களில்மட்டுமல்ல, திரைப்பாடல்களிலும் கவிஞரின் கம்பன் பற்று தெரியும். உதாரணமாக, ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற பாடலில் பலவிதமான இயற்கைக் காட்சிகளைச் சொல்லிப்போகும் கவிஞர், ‘இதழை வருடும் பனியின் காற்று’ என்று சொல்லிவிட்டு, அதற்குப் பொருத்தமான உவமையாகக் ‘கம்பன் செய்த வர்ணனை’ என்கிறார். அப்படியென்றால் கம்பனின் வர்ணனைப் பதிவுகளை அவர் எந்த அளவு ரசித்துப் படித்திருக்கவேண்டும் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாம்!

கம்ப ராமாயணத்தை முழுவதுமாகப் படித்து ருசித்து, அதில் உள்ள அழகழகான அம்சங்களைத் திரைப்பாடல்களில் மிக எளிமையாக, யாரும் புரிந்துகொள்ளும்வகையில் உரித்துத் தந்தவர் கண்ணதாசன். அப்படிச் சில வரிகளைதான் இன்றைக்கு நாம் பார்க்கிறோம்.

அன்னம் போன்ற அவளுடைய பொடிநடையைப் பார்க்கும்போது மனம் ‘அடடா!’ என்று வியந்து நிற்கிறது, அப்போது அவளுடைய அழகான கொடி போன்ற மெல்லிய இடை கண்ணில் தோன்றி, மறுகணம் காணாமல் போய்விடுகிறது, நிஜத்தில் அங்கே இடை உள்ளதா, அல்லது அது பொய்யா என்று உள்ளம் மயங்குகிறது.

இந்த வாக்கியங்கள் சீதை, ராமனைப்பற்றிக் கம்பர் எழுதியவை:

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய,

பொய்யே எனும் இடையாளொடும், இளையானொடும் போனான்,

’மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ,

ஐயோ இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்!

ராமனின் உடலில் இருந்து வெளிப்படும் பிரகாசத்துக்கு முன்னால், அந்தச் சூரிய ஒளிகூடத் தோற்றுவிடுகிறது. ‘அங்கே இடுப்பு உள்ளது பொய்யே’ என்று எண்ணத் தோன்றும் மெலிந்த இடை கொண்ட சீதையோடும், தம்பி லட்சுமணனோடும் நடந்து செல்லும் அந்த ராமனைஎப்படி வர்ணிப்பது? கருத்த மை என்பதா? மரகதம் என்பதா? கடல் என்பதா? மேகம் என்பதா? அடடா, இவனுடைய அழியாத அழகுக்குப் பொருத்தமான உவமை சிக்க மறுக்கிறதே!

***

என். சொக்கன் …

12 02 2013

073/365