ஆசை நூறு வகை, அறிவோ ஏழு வகை

தொலைக்காட்சியில் செம்மொழிப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பி.சுசீலா சிலவரிகளைப் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகளைக் கேட்கும் போது ஒரு சிந்தனை தோன்றியது. முதலில் அந்த வரிகளைத் தருகிறேன். பிறகு எனது சிந்தனையைச் சொல்கிறேன்.

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரனம் வரையிலும்
உணர்ந்திடும் உடலமைப்பைப் பகுத்துக் கூறும்
பாடல் – கலைஞர் கருணாநிதி
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – http://youtu.be/OSP0dxLymcM

ஆறறிவுள்ள மனிதன் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வோம். ஆனால் அந்த ஆறறிவு என்னென்ன என்று யாருக்காவது தெரியுமா? தொல்காப்பியத்தில் அதற்காக விளக்கம் இருக்கிறது. அந்த விளக்கத்தைப் பார்க்கும் முன் அறிவு என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.

பழந்தமிழில் பெயர்கள் பொருளோடுதான் வைக்கப்பட்டன. அறிவதனால் அது அறிவு எனப்பட்டது. எண்ணி இடுவது ஈடு. சுடுவது சூடு என்பது போல அறிவது அறிவு.

ஒரு உயிர் எப்படியெல்லாம் தன்னைச் சுற்றியுள்ளவைகளை அறிகின்றதோ அதை வைத்துதான் அந்த உயிர் எத்தனை அறிவுகள் கொண்டது என்று கருதப்படுகிறது. சரி. தொல்காப்பிய வரிகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
நூல் – தொல்காப்பியம்
அதிகாரம் – பொருளதிகாரம்
திணை – மரபியல்

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
ஓரறிவு உள்ள உயிர்கள் உடம்பால் உலகத்தை அறியும். உடம்பினால் தட்பம், வெட்பம், வன்மை, மென்மை ஆகியவைகளை ஓரறிவினால் அறியும்.

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
ஈரறிவு உள்ள உயிரினங்கள் உடம்பினாலும் நாவினாலும் உலகை அறியும். உடம்பினால் ஓரறிவு உயிரினங்கள் அறிகின்ற அனைத்தையும் அறிந்து நாவினால் பலவிதச் சுவைகளையும் ஈரறிவுள்ள உயிரினங்கள் அறியும்.

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
உடம்போடும் நாவோடும் அறிவதோடு மூக்கினாலும் அறிகின்ற உயிர்களை மூன்றறிவுள்ளவை என்பார்கள். மூக்கினால் நாற்றங்களையும் அந்த உயிரினங்கள் அறிந்துகொள்ள முடியும்.

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
உடம்பு, நாக்கு. மூக்கு ஆகியவைகளோடு கண்களாலும் உணர்வது நான்கறிவு எனப்படும். இந்த நான்காவது அறிவினால் மூன்று அறிவுகளை அறிவதோடு கூடுதலாகக் கண்களால் நிறங்களையும் உருவங்களையும் அறிய முடியும்.

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஐந்து விதமான அறிவுகளை உணர்வதற்கு உடம்பு, வாய், மூக்கு, கண்களோடு செவியும் உதவுகின்றது. நான்கு அறிவுகளோடு கூடுதலாக செவியினால் ஓசைகளை ஐந்தறிவு உயிர்கள் அறியும்.

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
ஐந்து அறிவுகள் மாக்களோடு நிற்க, ஆறறிவினால் மனிதன் மேலும் உணர்ந்தான். அதற்குக் காரணம் அவனுடைய மனம். அந்த மனதினால் உண்டாகும் சிந்திக்கும் திறன் ஆறாவது அறிவாகும்.

இப்போது ஆறு அறிவுகளையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஏழாவது அறிவு என்று ஒன்றையும் பட்டியலிட்டிருக்கிறார் வைரமுத்து. ஆம். எந்திரன் திரைப்படத்துக்காக எழுதிய பாடலில்தான் ஏழாம் அறிவு பற்றிச் சொல்லியிருக்கிறார்.

புதிய மனிதா பூமிக்கு வா
எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்க்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
பாடல் – வைரமுத்து
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான், கதிஜா
படம் – எந்திரன்
பாடலின் சுட்டி – http://youtu.be/ZkZ6eNBxZ8E

ஆறு அறிவுகளால் ஒரு இயந்திர மனிதனை உருவாக்கி அந்த எந்திரனுக்கு ஏழாவது அறிவைத் தட்டி எழுப்பும் முயற்சியை “ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி” என்று எழுதியிருக்கிறார்.

உயிருள்ளவைகளுக்கு உள்ளது அதிகபட்சமாக ஆறு அறிவுகள்தான். ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்திரத்துக்கு உண்டாவது ஏழாவது அறிவு என்பது ஒரு அறிவார்ந்த கற்பனைதான்.

அன்புடன்,
ஜிரா

133/365