கோடைக் காற்று!

  •  படம்: நினைவெல்லாம் நித்யா
  • பாடல்: நீதானே எந்தன் பொன்வசந்தம்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=wXpq7zoUnLY

நீ ஆடை, அணிகலன் சூடும் அறைகளில்

ரோஜா, மல்லிகை வாசம்! முக

வேர்வைத் துளியது போகும்வரையிலும்

தென்றல் கவரிகள் வீசும்!

’கவரி வீசுதல்’ என்றவுடன், பள்ளியில் தமிழ் படித்த எல்லாருக்கும் சட்டென்று மோசிக்கீரனார் ஞாபகம் வரும்.

புறநானூறுப் பாடல் ஒன்றில் வரும் பிரபலமான கதை அது. மோசிகீரனார் என்ற இந்தப் புலவர் ஓர் அரசனைச் சந்திக்கச் செல்கிறார். அவன் பெயர் ’சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை’.

நல்லவேளை அந்தக் காலத்தில் பாஸ்போர்ட்டெல்லாம் இல்லை. அப்படி இருந்திருந்தால், இந்த ராஜாவின் பெயரை எழுதி முடிப்பதற்குள் அதிலுள்ள பக்கங்கள் அனைத்தும் தீர்ந்துபோயிருக்கும்!

அது நிற்க, ராஜாவைப் பார்க்கப் போனார் புலவர். ஆனால் அவன் ஊரில் இல்லை. நடந்துவந்த களைப்பில் ஏதோ ஓர் இடத்தில் சுருண்டு படுத்துத் தூங்கிவிட்டார்.

உண்மையில், அது ‘ஏதோ ஓர் இடம்’ அல்ல. ராஜாவின் அதிகார முரசு வைக்கப்படும் இடம், அதன் பெயர் ‘முரசுக் கட்டில்’. அதில் புலவர் படுத்து உறங்கியது மிகப் பெரிய குற்றம்.

ஆகவே, திரும்பி வந்த ராஜாவுக்கு மோசிகீரனாரைப் பார்த்துக் கோபம், முரசுக் கட்டிலை அவமானப்படுத்தியவரை வெட்டிவிட எண்ணி வாளை உருவினான்.

ஆனால், நெருங்கியபிறகுதான் அவர் புலவர் என்பது அவனுக்குப் புரிந்தது, ஆத்திரம் தணிந்தது, வாளைக் கீழே போட்டுவிட்டு, அவருக்குக் கவரி வீசினான்.

ராஜா கையிலிருந்த அந்தக் கவரியைத் தூக்கி இங்கே தென்றல் கையில் கொடுத்துவிட்டார் வைரமுத்து, இதமான காற்றைப் பார்க்கும்போது, நாயகியின் முக வேர்வையைத் துடைப்பதற்காக அந்தத் தென்றலே நேரில் வந்து கவரி வீசுவதுபோல் இருக்கிறதாம்!

அது சரி, ‘கவரி மான்’ என்று கேள்விப்படுகிறோமே, அதற்கும் இந்தக் ‘கவரி’க்கும் சம்பந்தம் உண்டா?

நிச்சயமாக உண்டு. அதற்குமுன்னால், அது ‘கவரி மான்’ அல்ல, ‘கவரி மா’ என்பதுதான் சரியான சொல். மா என்றால் விலங்கு, அது மானாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.

மாவோ மானோ, அது குளிர்ப் பகுதியில் வாழும் பிராணி, ஆகவே, அதற்கு உடல்முழுதும் நிறைய முடி இருக்கும், அந்த முடி நீங்கினால் இயற்கை ஸ்வெட்டர் இல்லாமல், குளிரைத் தாங்கமுடியாமல் அது இறந்துவிடும், இதை மையமாக வைத்து ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரி மா’ என்கிறார்கள், அதைக் கௌரவம் / மானம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தி உவமையாக்குகிறார்கள்.

போகட்டும், ‘கவரி’ வீசுவதற்கும் ‘கவரி’ மா என்ற பிராணிக்கும் சொல் தொடர்பு எப்படி ஏற்பட்டது?

’கவரி’ என்ற வார்த்தையின் பொருள் ’முடி நிறைந்த’ (அல்லது) ‘முடிபோன்ற ஒரு பொருள் நிறைந்த’. இந்த அர்த்தத்தில் இதனை எங்கு வேண்டுமானாலும் பொருத்தலாம்:

  • முடி நிறைந்த விலங்கு : கவரி மா
  • முடியால் செய்யப்பட்ட விசிறி : கவரி
  • முடிபோல் அடர்ந்து வளரும் நெற்பயிர் : கவரி நெல்

விளையாட்டுப் போட்டிகளின்போது Cheer Girls பல வண்ணங்களில் முடி அடர்ந்தாற்போன்ற தொகுதியைக் கொண்ட ஒரு குச்சியைக் கையில் வைத்து ஆ(ட்)டுகிறார்கள், அதற்கும் அநேகமாக இதே பெயரைச் சூட்டலாம் என்று நினைக்கிறேன்.

மறுபடி கவரி என்கிற விசிறிக்கு வருவோம், மோசிகீரனாரைக் கௌரவித்த அரசனும், காதலியின் வியர்வைத் துளியைத் துடைத்த தென்றலும் கையால்தான் கவரி வீசினார்கள். அதுதான் முறை.

ஆனால், கம்பர் ஓர் இடத்தில் ‘கவரி வீசிய கால்’ என்கிறார். இதென்ன கூத்து? காலால் கவரி வீசுவது வழக்கமில்லையே.

இங்கே ‘கால்’ என்றால் வலது கால், இடது கால் அல்ல, ’காற்று’ என்று அர்த்தம். ‘கவரி வீசிய கால்’ என்றால், (கையால்) கவரி வீச, அதனால் எழுந்த காற்று!

***

என். சொக்கன் …

14 04 2013