உன் பார்வை போல் என் பார்வை இல்லை

‘நான் பேசறதே உனக்கு புரியல நான் ஒண்ணு சொன்னா நீ வேற எதையோ புரிஞ்சுக்கற’ – இந்த உரையாடல் கேட்காத வீடோ ஆபீசோ இருக்குமா என்பது சந்தேகம். இது போல ஒரு திரைப்பாடல் உண்டா?

ஒரே காட்சி  வெவ்வேறான பார்வைகள். இதை வைத்து ஏதாவது ஒரு பாடல்? பெண் தன் காதலை மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்கிறாள். ஆனால் ஆண் இதை ஏற்க இயலாது என்பதை சொல்லுவது போல் ஒரு பாடல் ?

மூன்று பாடல்களா ? இல்லை ஒரே பாடல். என்ன தவம் செய்தேன் படத்தில் கண்ணதாசன் எழுதிய அந்தியில் சந்திரன் வருவதேன் என்ற பாடல்

http://www.inbaminge.com/t/e/Enna%20Thavam%20Seithen/Anthiyil%20Chandhiran.eng.html

பெண் : அந்தியில் சந்திரன் வருவதேன் அது ஆனந்த போதையை தருவதேன்

ஆண் : சந்திரன் வருவது ஒளிதர அது தமிழுக்கு ஆயிரம் கவி தர

நிலவின் வருகை அவளுக்கு ஆனந்த போதை ஆனால் அவன் நிலவொளி மட்டும் போதும் போதையெல்லாம் கவிகளுக்குதான் ப்ளீஸ் நிலவே என்னை நெருங்காதே என்கிறான். தொடரும் வரிகள்

பெண் : இலைகளில் இளந்தென்றல் படிப்பதென்னவோ

ஆண் : அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ

பெண் : மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ

ஆண் : அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ

மூன்று இயற்கையான நிகழ்வுகள். நமக்கு தெரிந்த காட்சிகள். அந்தியில் வரும் சந்திரன், இலைகளை வருடும் தென்றல், மலைமுகட்டில் வெண்மேகம். ஒரு பெண் இவையனைத்தையும் வைத்து மறைமுகமாக தன் காதல் சொல்கிறாள் .ஆனால் ஆண் இதை ஏற்காமல் (ஏற்க இயலாமல்?) அதே காட்சிகளுக்கு வேறு அர்த்தம் சொல்கிறான்.

அட இவன் சரியான டியுப் லைட் என்று நினைத்து பெண் வெட்கம் விட்டு நேரடியாக தன் ஆசையை சொல்கிறாள்.

பெண் : பெண் மனம் ஒன்றோடு இணைவதென்னவோ

ஆண் : அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ

பெண் : சம்மதம் தருவதில் தொல்லையென்னவோ

ஆண் : அதை தானாக கேளாது பெண்மையல்லவோ

இந்த நிலையில் பெண் பொறுமை இழந்து ‘என் கேள்வி புரிகிறதா இல்லையா என்று சலிப்புடன் கேட்க அவன் அப்போதும் சரியான பதில் சொல்லாமல் விலகுகிறான்.

கேள்வி பதில் பாடல்கள் என்று ஒரு வகை. கொடியா காற்றா இரவா பகலா என்று கேள்வியும் பதிலும் இருக்கும் பாடல்கள் உண்டு ஆனால்  இது ஒரு வித்தியாசமான structure – இந்த அமைப்பிற்கு என்ன பெயர்?

பெண் பாடும் வரிகள் ஒரு கருத்தை அல்லது உணர்வைக் குறிப்பாகக் காட்டுதல் அல்லது வெளிப்படுத்தல் போல் உள்ளது . இது என்ன அணி ? மனதில் தோன்றிய கருத்தினை நேரடியாகக்கூறாமல், வேறொரு பொருள் கொண்டு கூறுவது .பிறிது மொழிதலா ?

ஆண் பாடும் வரிகள் உள்ளதை உள்ளபடி  விளக்கும் சொற்கள். கற்பனையோ கனவோ கலக்காத வார்த்தைகள்.  இயல்பு நவிற்சி அணியா ?

இந்த பாடலில் பெண்ணும் ஆணும் இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது  அவரவர்  புரிதலை ஏற்றி சொல்வதால் தற்குறிப்பேற்ற அணியா?

அழகான மலை சார்ந்த இடம். இளந்தென்றல் வீசும் நிலவொளி நேரம். கவிதையாய் கேள்வி கேட்கும் ஒரு பெண். இவற்றை புறக்கணிக்கும் ஒரு ரசனையில்லாத தற்குறி. அந்த பெண்ணை வெறுப்பெற்றுவதால் ஒருவேளை இது ‘தற்குறி வெறுப்பேற்றும்’ அணி என்று தோன்றுகிறது.

நீங்களே சொல்லுங்கள்

மோகனகிருஷ்ணன்

132/365