விருந்தினர் பதிவு : சூட்டோடு சூடாக

இன்னும் கோடை காலம் ஆரம்பிக்கக் கூட இல்லை ஆனா இப்பொழுதே வெயில் பத்தித்தான் எல்லாரும் பேசறாங்க. ஆனா எல்லாரும் வெயில் பத்திப் பேசறாங்களான்னா இல்லை. சிலர் வெயில் பத்திப் பேசறாங்க மத்தவங்க வெய்யில் பத்திப் பேசறாங்க. வெயில் சரியா, வெய்யில் சரியா? இலக்கணம் என்ன சொல்லுது? சினிமாப்பாட்டுகள்ல என்ன சொல்றாங்க?

சமீபத்திய பாட்டுகளை எடுத்துகிட்டா ஒரு மாலை இளவெயில் நேரம், மஞ்சள் வெயில் மாலையிலே, வெயிலோடு விளையாடின்னு வெயில் பாட்டுகளாத்தான் வருது. கொஞ்சம் முன்னாடிப் போனா, இளையராஜா உமா ரமணன் காம்போவில் மஞ்சல் வெயில் மாலையிட்ட பூவேன்னு ஒரு அருமையான பாட்டு இருக்கு. என்னடா எல்லாப் பாட்டும் வெயில்ன்னு வருதே, வெய்யில் இல்லையான்னு யோசிச்சுக்கிட்டே அதுக்கும் கொஞ்சம் முன்னாடி போய் கண்ணதாசனைக் கேட்டா சரியா குழப்பிட்டாரு!

’அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே’ பாட்டுல ’மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ணமே’ன்னு எழுதினவரு, ’பால் வண்ணம் பருவம் கண்டு’ பாட்டுல ’மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு’ன்னு மாத்திட்டாரு. இதுக்கெல்லாம் முன்னாடி எழுதின ’குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ பாட்டுல ’உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது’ன்னு வருது.

இலக்கியத்தில் என்ன சொல்லறாங்க. மீசைக்காரனே ’யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல்’ன்னு சொல்லிட்டான். அதைத் தாண்டிப் போகணுமா என்ன?

கம்பன் வெயில்ன்னு பல இடங்கள்ல எழுதி இருக்காரு. உதாரணமா மாலை நேரம் சூரியன் மறையும் சமயம். இதை எப்படிச் சொல்றாருன்னா “மீன் பொலிதர, வெயில் ஒதுங்க”ன்னு சொல்லறார். பால காண்டத்திலும்கூட ” இழையிடை இள வெயில் எறிக்கும் அவ் வெயில், தழையிடை நிழல் கெடத் தவழும்”ன்னு வரும். இப்படிப் பல இடங்களிலும் வெயில்தான். நோ வெய்யில்.

கம்பன் வெயில்ன்னு சொல்லியாச்சு. சரி, தாடி என்ன சொல்லறார்?

”என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம்” இங்கயும் வெயில்தான்.

வெண்பான்னு வந்தாச்சுன்னா ரூல் எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். என்பி லதனை வெயில்போல : இப்படி இருந்தாத்தான் தளை தட்டாது. என்பி லதனை வெய்யில்போலன்னு எழுதினா காலி. மா முன் நேர் வருமாடா, நாலசைச்சீர் வருமாடான்னு வறுத்து எடுத்துடுவாங்க. தளை தட்டலுக்காகவோ, சந்தத்துக்காகவோ அட்ஜெஸ்ட் பண்ணறது பலரும் செய்யறதுன்னாக்கூட திருக்குறளில் பொதுவா அப்படி பார்க்க முடியாது.

கொஞ்சம் விளையாட்டாப் பார்த்தோமானாக் கூட வெய்யில் = வெய் + இல். வெய் அப்படின்னா சூடு. அப்போ வெய்யில்ன்னு சொன்னோமானா சூடு இல்லைன்னு அர்த்தமா? இல்லை இல் = இடம்ன்னு எடுத்துக்கிட்டு சூடு இருக்கும் இடம்ன்னு அர்த்தமா?ன்னு கேள்வி கேட்டு பேஜார் பண்ணலாம். வெயில்ன்னு சொல்லிட்டோமானா இந்த மாதிரி கன்ப்யூஷன் எல்லாம் கிடையாது.

அதனால இனிமே வெயில்ன்னே சொல்லுவோம் வெய்யில் வேண்டாம். சரியா?

இலவசக் கொத்தனார்

ட்விட்டரில் ‘வாத்தி’ என்று செல்லமாக விளிக்கப்படும் இலவசக் கொத்தனார் கோட்டும் டையும் அணிந்த நவீன சீத்தலைச் சாத்தனார். இணையத்தில் எழுத்துப் பிழைகளுக்கே முகம் சுளிக்கிற, இலக்கணப் பிழைகளைத் திருத்த முற்படுகிற மைனாரிட்டி அப்பாவிகளில் ஒருவர். இன்னொருபக்கம், சிலேடை, வெண்பா, வார்த்தை விளையாட்டு, ’எல்லா வார்த்தைகளும் தமிழில் இருந்து சென்றவைதான்’ என்கிற ரேஞ்சுக்கு நகைச்சுவைப் பதிவுகள் எனக் கலவையான ரசனை கொண்டவர். இவரது சமீபத்திய நூலான ‘ஜாலியா தமிழ் இலக்கணம்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் செம ஹிட்!

இலவசக் கொத்தனாரின் வலைப்பதிவு: http://elavasam.blogspot.in/