குற்று

  • படம்: அன்னக்கிளி
  • பாடல்: சுத்த சம்பா, பச்ச நெல்லு
  • எழுதியவர்: பஞ்சு அருணாசலம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=MJNYBUN5Dss

சுத்த சம்பா, பச்ச நெல்லு குத்தத்தான் வேணும்,

முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தான் வேணும்,

முல்லை, வெள்ளிபோல அன்னம் பொங்கத்தான் வேணும்,

நம்ம வீட்டுக் கல்யாணம், இது நம்ம வீட்டுக் கல்யாணம்!

’நெல்லுக் குத்துதல்’ என்ற பதம், ’நெல்லை உரலில் போட்டு உலக்கையால் குத்தி, உமி தனியாக, அரிசி தனியாகப் பிரித்தெடுப்பது’ என்று நீளும். கிராமத்தில் வளர்ந்தவர்கள் இதை நேரில் பார்த்திருப்பர், மற்றவர்கள் சினிமாவில் பார்த்திருப்பர், அல்லது கேட்டிருப்பர்.

சாதாரணமாக நாம் ஒரு பொருளைக் கீழே போட்டு, உலக்கைமாதிரி ஒரு கனமான பொருளை அதன்மீது வைத்துக் குத்தினால் என்ன ஆகும்?

கீழே உள்ள பொருள் நசுங்கிப்போகும், அல்லது சிதைந்துபோகும்.

ஆனால், நெல் குத்தும்போதுமட்டும் அப்படி நிகழ்வதில்லை, நெல் சிதையாதபடி, இடிந்து மாவாக மாறிவிடாதபடி உமியைமட்டும் பிரித்தெடுப்பது ஒரு கலை.

தன்னுடைய குட்டியைக் கவ்வித் தூக்கும் குரங்கு, அதைக் கடித்துக் காயப்படுத்திவிடாது, அதேசமயம் ரொம்ப லேசாகப் பிடித்து அதை நழுவவும் விடாது. சரியான அந்தப் பக்குவம், தாய்க் குரங்குக்குத் தெரியும். உலக்கையைக் கையில் பிடித்த பெண்களெல்லாம் அதில் விற்பன்னர்கள்!

’அரிசிக்கு உறை, உமி. அதுபோல, நம்முடைய ஆன்மாவையும் உமி மூடியிருக்கிறது’ என்கிறார் ஆதி சங்கரர். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், உமி அல்ல, உமிகள்.

ஆதி சங்கரர் சொல்லும் அந்த ஐந்து உமிகள், அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம். ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்திருக்கும் இவற்றைப்பற்றி விரிவாகப் பேசுமளவு எனக்கு ஞானம் இல்லை, ஆகவே, ‘ஆன்மா எனும் அரிசிக்கு வெளியே ஐந்து வகையான உமிகள்’ என்கிற அந்த உவமையை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

நெல் அறுவடையானதும், அதை உரலில் போட்டுக் குத்துகிறோம், தேவையற்ற உமியை நீக்குகிறோம், தேவையான அரிசியைமட்டும் பிரித்து எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம்.

அதுபோல, மேற்சொன்ன ஐந்து வகை உமிகள் இருக்கும்வரை ஆன்மாவால் எந்தப் பலனும் இல்லை. அதை எந்த உரலில் போட்டுக் குத்துவது?

யோகப் பயிற்சிகள், தியானப் பயிற்சிகள், ஆத்ம விசாரம் என்று ஆதி சங்கரர் பல வழிகளைச் சொல்கிறார். ஆனால் இவற்றையெல்லாம் மொத்தமாகப் போட்டு அடித்துவிட்டால் உமிகளோடு அரிசியும் சிதைந்துவிடும், நெல் குத்தும் பெண்களைப்போலப் புத்திசாலித்தனமாக, சரியான வேகத்தில் இவற்றைப் பயன்படுத்தினால் உமிகள் பிரியும், சுத்தமான அரிசி (அதாவது ஆன்மா) வெளிப்படும்.

ஜாலியான கல்யாண விஷயத்தைப் பேச ஆரம்பித்து ரொம்ப ’ஹெவி’யாகிவிட்டது. கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு மேட்டர், ’நெல் குத்துதல்’ என்பது கொச்சை மொழி, அதற்கான சரியான வார்த்தை, ‘நெல் குற்றுதல்’ என்பதுதான். ‘பற்ற வை’ என்பது பேச்சுவழக்கில் ‘பத்த வை’ என்று மாறியதுபோல, ‘நெல் குற்றுதல்’ மாறி ‘நெல் குத்துதல்’ என்றாகிவிட்டது.

***

என். சொக்கன் …

08 04 2013

128/365