தமிழும் அவளும் ஓரினம்

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடல் நம் மொழியின் பெருமை சொல்லும். இதில் தமிழுக்கு சொல்லப்பட்ட சிறப்பையெல்லாம் ஒரு பெண்ணைப்பற்றி  சொல்ல நினைத்த வாலி. அதை அவளுக்கும் தமிழ் என்று பேர் என்ற  ஒரே வரியில் சாதித்தார்.

தமிழும் அவளும் ஓரினமா ? கண்ணதாசன் என் மகன் படத்தில் வரும் பொன்னுக்கென்ன அழகு என்ற ஒரு காதல் பாடலில் http://www.inbaminge.com/t/e/En%20Magan/Ponnukkena%20Azhagu.eng.html தமிழ் பற்றியும் அவள் பற்றியும் சொல்வதைப் பாருங்கள். பல்லவியில் அவள் கண்கள் எழுதும் தமிழ்க் கோலங்கள் என்று ஆரம்பிக்கிறார். தொடர்ந்து இலக்கியம், இலக்கணம், எதுகை மோனை, கம்பரசம், வஞ்சி , சிந்து என்று வார்த்தைகள். பாடலில் எங்கே தொட்டாலும் சங்கத்தமிழ் வாசம்.

பொன்னுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை
உன் கண் எழுதும் தமிழ்க்
கோலங்கள் போதாவோ.. வண்ணக்கிளியே

பொன்னென்றும் பூவென்றும் சொல்வேனோ கதை எழுதும் உன் விழிகளே போதும் என்று பல்லவியில் பின் காதலன் காதலி உறவை இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் உள்ள உறவாக குறிப்பிடுகிறார்

ஒரு பொருள் மறைபொருள்
விவரிக்கும் இலக்கியமே
உடன்பட்டுத் துணை நின்று
சுகம் தரும் இலக்கணமே

இலக்கியமா இலக்கணமா எது முதலில் தோன்றியது ? மொழிதான் முதலில். இந்த விவாதத்தை தவிர்த்து இலக்கியமும் இலக்கணமும் complementary என்பது போல ஒரு விளக்கம் கொடுக்கும் கவிஞர்  இதை இவ்வளவு அழகாக, பொருத்தமாக ஒரு காதல் பாடலின் வரிகளாக  கொண்டு வந்திருப்பது அருமை. மறைபொருள் விவரிக்கும் ஆண்தான் இலக்கியமா? உடன்பட்டு துணை நிற்கும் (ரூல்ஸ் பேசும் ?) பெண்தான் இலக்கணமா?

எதுகையில் உன் முகம்
மோனையில் உன் முகம்

எதுகையும், மோனையும் கவிதைக்கு அழகு. காதல் வயப்பட்டவன் கவிதை எழுதும்போது ‘ஒன்றி வருவது’ அவள் முகம் என்கிறாரோ?

கம்பரசக் கிண்ணம் அதிலே
கட்டி வெல்லக் கன்னம்
காமதேவன் வாகனங்கள்
காற்றிலே ஆடுதே..

கண்கள் எழுதும் தமிழ்கோலங்கள், எதுகையிலும் மோனையிலும் முகம், கட்டிவெல்லக் கன்னம் எல்லாம் பார்த்தவுடன் காமதேவன் வாகனங்கள் காற்றிலே ஆடுதே என்று ஒரு வரி. மன்மதன் அம்பு தெரியும் அதில் உள்ள பூக்கள் தெரியும் அவன் வாகனம் என்ன? மவுண்டன் வியூ மகாவிஷ்ணுவிடம் கேட்டால் மன்மதன், ரதி—வாகனம் கிளி என்று பதில் வருகிறது ஓ அதனால்தான் காற்றிலே ஆடுதே என்று ஒரு clue கொடுக்கிறாரா?

சேரன் மகள் வஞ்சி எதிரே
சேனை கண்டு அஞ்சி
காதல் தேவன் மார்பின் மீது
காவலைத் தேடுதே

போர்தொடுத்துச் செல்பவர் தான் வஞ்சிப் பூவை சூடிச்சென்றதாக கேள்வி.  ஆனால் கண்ணதாசன் காதலியை வஞ்சி என்று சொல்லி அவள் காதல் தாக்குதலில் அஞ்சி அவன் காவலை தேடுவதாய் சொல்கிறார்

மின்னும் நீலமணி போல் இன்று
என் மேல் ஆடு கண்ணே
இன்னும் என்ன ஏக்கம் இன்ப
வண்ணம் பாடு கண்ணா

மின்னும் நீலமணியிலும் இலக்கிய வாடை. என்ன என்று கூகுளில்  தேடினால் கோங்க மலரில் உறங்கும் வண்டு பொன்னில் பதித்த நீலமணிபோல் உள்ளது என்ற பொன் தகடு உறு நீலம்  புரைவன பல – காணாய்! என்று கம்பன் வார்த்தைகள் . பொன்னில் பதித்த  – அட அதான் மின்னுதோ !

பாடலை எப்படி முடிக்கிறார் ? நாம் பள்ளியில் படித்த ஒன்றே செய்க அதை நன்றே செய்க என்ற இழையில் காதல் வரிகள் நெய்து முடிக்கிறார்

ஒன்றே காண வேண்டும் அதை
நன்றே காண வேண்டும்
நன்றே காண வேண்டும்
அதை இன்றே காண வேண்டும்

கண்ணதாசன் பாடல்கள் தேக்கடியில் யானை போல கம்பீரம். நாக்கடியில் கல்கண்டு போல தித்திப்பு.

மோகன கிருஷ்ணன்

129/365