மாற்றான் தோட்டத்து மெல்லிசை

ஒரு இசையமைப்பாளர் பாடுவது என்பது மிக இயல்பான ஒன்று. ஒரு பாடகருக்குரிய குரலினிமை குறைவாக இருந்தாலும் ஒரு இசையமைப்பாளரின் குரலில் இருக்கும் பாவம் மிகச் சிறப்பானது.

மெல்லிசை மன்னர் அவருடைய எத்தனையோ படங்களில் பாடியிருக்கிறார். பாலிருக்கும் பழமிருக்கும் பாடலில் சுசீலாம்மா பாலிருக்கும் என்று பாட நடிகர் திலகத்துக்கு ம்ஹும் என்று குரல் கொடுத்துப் பாடியது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் என்பதைச் சொன்னால்தால் தெரிந்து கொள்ள முடியும்.

தன்னுடைய இசையில் வந்த பாடல்களையே பாடிக் கொண்டு வந்த மெல்லிசை மன்னரை இன்னொரு இசையமைப்பாளர் அவருடைய இசையில் பாட வைத்தார். அதன் பலன் இன்று ஜி.வி.பிரகாஷ்குமார் போன்ற இருபத்தைந்து வயது வாலிபனின் இசையிலும் எம்பது வயதைத் தாண்டிய மெல்லிசை மன்னர் பாடியிருக்கிறார்.

அடுத்த இசையமைப்பாளர் இசையில் அதிகப்படியாகப் பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதன் என்று அடித்துச் சொல்லி விடலாம்.

எம்.எஸ்.வி அவர்களை முதலில் அப்படிப் பாட வைத்தது இசையமைப்பாளர் வி.குமார். வெள்ளி விழா என்பது படத்தின் பெயர். “உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா” என்ற மிக அற்புதமான பாடல் மெல்லிசை மன்னரின் குரலில் சாகாவரம் பெற்றது. இணையத்தில் இந்தப் பாடலின் ஒலி-ஒளி வடிவமும் கிடைக்கிறது (https://www.youtube.com/watch?v=PS5C7QF0yXU).

அடுத்து கோவர்த்தனம் இசையில் பாடிய வரப்பிரசாதம் என்ற பாடலும் பிரபலமானது. அந்தப் பாடல் வரப்பிரசாதம் என்ற படத்தில் இடம் பெற்றது. ஆனால் இந்தப் பாடல் ஆன்லைனில் கிடைக்கவே இல்லை. தனித்து இசையமைத்திருந்தாலும் கோவர்த்தனம் மெல்லிசை மன்னரிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார். வரப்பிரசாதம் படத்தில் கங்கைநதியோரம் ராமன் நடந்தால் என்ற பாடல் மட்டும் இன்று இணையத்தில் கிடைக்கிறது. மிக அருமையான பாடல்.

மெல்லிசை மன்னரின் இசைப்பயணத்தில் இசைஞானி இளையராஜாவை விட்டுவிட முடியுமா?

தாய்மூகாம்பிகை படத்தில் ராஜா இசையில் நாரணன் தேவி திருமகளே என்று தொடங்கும் திருமகள் துதியைப் பாடியிருக்கிறார். அதே பாட்டில் கலைமகள் துதியை பாலமுரளிகிருஷ்ணாவும் மலைமகள் துதியை சீர்காழி கோவிந்தராஜனும் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலை இங்கு கேட்டும் பார்த்தும் ரசிக்கலாம் (https://www.youtube.com/watch?v=sVVBuQM4eJU). படத்தில் பாடலைப் பாடி நடித்திருப்பதும் மெல்லிசை மன்னரே.

ஒரு யாத்ராமொழி என்று மலையாளப்படம். அதிலும் இளையராஜா இசையில் மெல்லிசைமன்னர் பாடியிருக்கிறார். எரிக்கனல் காட்டில் என்று தொடங்கும் உணர்ச்சி மிகுந்த பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். உள்ளத்து உணர்ச்சியை இசையும் குரலும் எப்படி வெளிக்கொண்டுவரும் என்பது புரியும். இந்தப் பாடலின் ஆடியோ வடிவம் ஆன்லைனில் கிடைக்கிறது (http://bsnl.hungama.com/fls_details.php?pid=26511).

அண்ணனிடம் பாடியவர் தம்பியின் இசையில் பாடாமல் இருப்பாரா? நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் கங்கை அமரன் இசையில் ஓடம் எங்கே போகும் என்ற பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் மூன்று இசையமைப்பாளர்களின் கூட்டணி. இசையை கங்கை அமரன் பார்த்துக் கொள்ள மெல்லிசை மன்னர் பாட (சங்கர்)கணேஷ் நடிக்க வந்த பாடல் இது. இதன் ஒளிவடிவம் கிடைக்கவில்லை. ஒலிவடிவம் இங்கு கிடைக்கிறது (http://music.cooltoad.com/music/song.php?id=404824).

அடுத்து வந்தது காதல் மன்னன் திரைப்படம். இந்தப் படத்துக்கு இசை பரத்வாஜ். இந்தப் படத்தில் மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு என்ற பாட்டை எம்.எஸ்.வி பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவரே எம்.எஸ்.விதான் என்று வைரமுத்து ஒரு பேட்டியில் சொன்ன நினைவு. இன்னொரு பேட்டியில் பரத்வாஜ் தன்னுடைய இசையில் எம்.எஸ்.வி பாடியதைப் பெருமையாகக் குறிப்பிட்டார். உண்மை எதுவோ! மெல்லிசைமன்னர் பாடலைப் பாடி நடித்த காட்சி இங்கே http://www.youtube.com/watch?v=qpd8r5MvBcM.

ராஜா இசையில் இரண்டு பாடல்களைப் பாடியவர் ரகுமான் இசையிலும் இரண்டு பாடல்களை இதுவரையில் பாடியிருக்கிறார். முதலில் வந்தது ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா என்ற பாடல். இடம் பெற்ற படம் சங்கமம். இந்தப் பாடலைத் தனியாகவும் ஹரிஹரனோடு இணைந்தும் பாடியுள்ளார் மெல்லிசை மன்னர். பாடலின் ஒளிவடிவம் இங்கே – https://www.youtube.com/watch?v=8WxTlj1ieu4

அடுத்த பாடல் மிகவும் உணர்ச்சிமயமான பாடல். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற விடை கொடு எங்கள் நாடே என்ற பாடல். தனது கரகரப்பான குரலால் ஈழத்து மக்களின் சோகத்தையெல்லாம் கொட்டி விட்டார் மெல்லிசை மன்னர். இந்தப் பாடல் காட்சியில் இலங்கையில் திரையரங்குகளில் மக்கள் எல்லாரும் அழுதார்கள் என்பது கேள்விப்பட்ட செய்தி. இந்தப் பாடலின் ஒலி-ஒளி வடிவங்களை மற்றொரு முறை கேட்கும்/பார்க்கும் திறன் எனக்கில்லை (https://www.youtube.com/watch?v=HjNsz1yQ6Mo).

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்று பாடிய சிறுவன் இன்று இளைஞன். அதுவும் இசையமைப்பாளன். அந்த ஜி.வி.பிரகாஷ்குமார் இசையிலும் மெல்லிசை மன்னர் பாடியிருக்கிறார். மதராசப்பட்டினம் என்ற படத்தில் இடம் பெற்ற மேகமே ஓ மேகமே என்ற பாடல் அது. சலவைத் தொழிலாளர்கள் எல்லாம் இணைந்து பாடுவது போன்ற பாடல் அது. பாடலை இங்கே பார்க்கலாம் (https://www.youtube.com/watch?v=1Pl8_CgRWZo).

தேவாவின் இசையில் மாணிக்க விநாயகத்தின் இசையிலும் மெல்லிசை மன்னர் பாடியிருக்கிறார் என்று கேள்வி. ஆனால் அவை திரைப்பாடல்களா பக்திப்பாடல்களா என்று தெரியவில்லை. மாணிக்க விநாயகம் இசையமைத்த ஒரு முருகன் பாடல்கள் தொகுப்பில் பன்னிரண்டு பாடல்களை மெல்லிசை மன்னரே பாடியது நினைவுக்கு வருகிறது. அவற்றை எங்கே தேடுவது?

முன்பெல்லாம் சாகாவரம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்களாம். ஆனால் சில பாடல்கள் மெல்லிசை மன்னரின் குரலில் பாடப்பட்டு சாகாவரம் பெற்று விட்டன. படைப்புக் கடவுளான நான்முகனால் கொடுக்க முடியாத சாகாவரத்தை இந்த மெல்லிசைக் கடவுள் கொடுத்து விட்டார் என்றால் மிகையில்லை.

அன்புடன்,
ஜிரா

059/365