கேட்டதும் கற்றதும்
நண்பர் @nchokkan ‘ஒரு பாடலில் ஒரு வார்த்தை வேறு வார்த்தை போல் கேட்டது’ என்று சொல்லி அந்த புதிய வார்த்தையை ஒரு பதிவில் அழகாக விளக்கியிருந்தார். கான மயிலாட கண்டவுடன் சரி நாமும் ஜாலியாக இதே போல் வேறு பாடல்களை ஆராயலாம் என்று ஒரு முயற்சி.
எனக்கு சில சந்தேகங்கள் – கவிஞரும் இசையமைப்பாளரும் சொல்வதை சில பல சமயங்களில் பாடகர்கள் சரியாக கேட்டுக்கொள்ளாமல் பாடுகிறார்களோ என்று சந்தேகம். அந்தமான் காதலி படத்தில் நினைவாலே சிலை செய்த பாடலில் திருக்கோவிலை ‘தெருக்கொவிலாய்’ பாடியதும் , பூவிழி வாசலில் யாரடி வந்தது என்ற பாடலில் கிளியே என்பதற்கு பதில் கிலியே என்று பாடியதும் ஏன் என்று புரியவில்லை. அப்போது ரொம்பவும் உறுத்தியது ஆனால் இப்போது எல்லாமே ‘பருவாயில்லை’ தான். சமீபத்தில் நெஞ்சுக்குள்ளே ஒம்ம என்ற கடல் பாடலில் கூட ‘வெல்ல பார்வையா வெள்ள பார்வையா என்று ஒரு விவாதம் நடந்தது.
மௌன ராகம் படத்தில் வாலியின் ‘நிலாவே வா’ என்ற பிரபல பாடலில் http://www.youtube.com/watch?v=-RdltrvAvJ8
பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரேயொரு பார்வை தந்தாலென்ன தேனே
ஒரேயொரு வார்த்தை சொன்னாலென்ன மானே
என்ற வரிகளை கேட்டவுடன் குழப்பம். காலங்காலமாய் பார்வைக்கு மானும் சொல்லுக்கு தேனும் தானே? அங்கங்கே மானே தேனே போட்டுக்க என்று சொன்ன கவிஞர் மானையும் தேனையும் மாற்றி போட்டுவிட்டரா? இருக்க முடியாதே. இதே பாடலில் முன்னால் வரும் வரிகளில் ‘பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை‘ என்று தேனையும் சொல்லையும் இணைத்து பாடிய வாலி ஏன் இப்படி மாற்றி போட வேண்டும்?அல்லது இசையமைத்தவரும் பாடியவரும் மெட்டில் உட்கார்ந்தால் போதும் என்று interchange செய்தார்களா? தெரிந்தே செய்தார்களா? Poetic Liberty என்பது இதில் உண்டா?
சரி விடுங்கள். வேறு பாடல் பார்ப்போம். ராமு என்ற படத்தில் ஒரு பாடல். ஒரு பெண் ஒரு குழந்தையிடம் நான் உனக்கு சிற்றன்னையாக வர வேண்டும் என்று கூறும் பாடல் http://www.youtube.com/watch?v=1rC0ny8Q7bA
முத்துசிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்
முத்தம் ஒன்று சத்தம் இன்றி பிறந்து வரும்
அம்மம்மா அப்பப்பா
தித்திக்கும் சேதி வரும்
இதில் தித்திக்கும் சேதி என்பது எனக்கு ‘சித்திக்கும் தேதி’ என்று கேட்டது. அப்படியே கேட்டாலும் பொருள் மாறாமல் மெட்டும் குலையாமல் இருப்பது போல் தோன்றுகிறது.பாடலில் இருப்பது கவிதையாய் இருக்கிறது. எனக்கு கேட்டது கதை சொல்கிறது.
அடுத்து சின்ன சின்ன ஆசை பாடலில்
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை
என்ற வரிகள். முதலில் இது எனக்கு ‘சிற்றிடைக்கு மேலே சேலை கட்ட ஆசை’ என்றே கேட்டது. சரியாகத்தானே இருக்கிறது என்று நண்பனிடம் வாதாடி தோற்றுபோனேன். சித்திரை தான் இன்னும் அழகான அர்த்தம் கொடுக்கிறது.
மோகன கிருஷ்ணன்
060/365
Saba-Thambi 8:09 pm on January 30, 2013 Permalink |
வேற் று மொழி பாடகர்களின் உச்சரிப்பு ல,ள,ழ வரிசையிலும், ர,ற வரிசையிலும் காட்டிக் கொடுத்துவிடும் ஆனாலும் அப் பாடகரின் குரல் இனிமை இரசிகர்களின் மனதை வென்று விடும்.
பூவிழி வாசலில் யாரடி வந்தது என்ற பாடலில் கிளியே அதற்கு நல்ல உதாரணம்
amas32 10:12 pm on January 30, 2013 Permalink |
இப்பொழுது வரும் பலப் பாடல்களில் வார்த்தைகள் எனக்குச் சரியாகவே புரிவதில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று தவறான உச்சரிப்பு, இரண்டாவது வார்த்தைகளை மூழ்கடிக்கும் சத்தமான இசை. பழைய பாடல்களில் அந்த பிரச்சினையே கிடையாது. பி.சுசிலா, டி.எம்.எஸ்., பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் மெல்லிசை மன்னர் இசையில் பாடியவை துல்லியமாகக் காதில் ஒலிக்கும்! இப்போ தமிழல்லாத வார்த்தைகள் பாடலின் ஆரம்பத்தில் வருவது இன்னும் தலை வேதனையாக உள்ளது 🙂 அனால் அதுவும் இசை தான். இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்!
amas32