சிங்Gun

விழிகளை வேலோடும் வாளோடும் எத்தனையெத்தனையோ கவிஞர்கள் எத்தனையெத்தனையோ பாடல்களில் எழுதிவிட்டார்கள்.

அம்புவிழி என்று ஏன் சொன்னான்.. அது பாய்வதனால்தானோ” என்று கண்ணதாசன் கண்களை ஆயுதங்களாகச் சொன்னதுக்கான காரணத்தை விளக்குகிறார்.

காதல் கொண்ட விழியின் பார்வையைத் தாங்கும் வல்லமை யாருக்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கண்களால் உண்டான காயங்கள் எக்கச்சக்கம். அந்தக் காயங்களுக்கு மருந்தே கிடையாது என்பதுதான் மிகமிக விசித்திரம்.

காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆயுதங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. வேலும் வாளும் அம்பும் கோயிலில் கடவுள் கையில்தான் இன்று காணக்கிடைக்கும்.

கையடக்கமாக ஒரு துப்பாக்கி இருந்தால் குறிதவறாமல் சுட்டு விடலாம். அதனால் உண்டாகும் இழப்பும் வில்லையும் வாளையும் விட நிறையவே இருக்கும்.

அப்படிப் பட்ட கண்ணை Gunனோடு ஒப்பிடாமல் இருப்பார்களா கவிஞர்கள்?!?

உன் கண்ணுக்குள்ள Gunன வெச்சு என்னச் சுடாத
உன் காக்கிச் சட்ட காலரத்தான் தூக்கி விடாத

இது சிங்கம்-2 படத்துக்காக விவேகா எழுதிய வரிகள்.

நாயகன் ஒரு காவல்துறை அதிகாரி. அவனது காதலி பாடும் போது அவன் காவல் தொழிலோடு தொடர்புடைய கருப்பொருட்களைப் பாட்டில் வைத்துப் பாடுவது பொருத்தம் தானே? அதனால்தான் பாட்டில் துப்பாக்கியும் காக்கிச் சட்டையும் வருகின்றன.

கண் Gunனானால் பார்வை தோட்டாவாகும். பார்வை தோட்டாவானால் பாவை இதயம் பாட்டாகும் என்பது எவ்வளவு உண்மை.

சரி. கண்ணை Gunனோடு ஒப்பிட்டு வந்த முதல் பாட்டு இதுதானா?

இல்லை. இல்லை. இல்லை.

கோடைமழை படத்தில் நா.காமராசன் ஏற்கனவே எழுதிவிட்டார்.

ஆனாலும் ஒரு வித்யாசம். கவிஞர் விவேகா ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணை Gun என்றால் நா.காமராசன் ஒரு பெண்ணின் கண்ணை Gun என்கிறார். அதுவும் கொக்கு சுடப் போன ஒரு குறவன் வாயால்.

துப்பாக்கி கையிலெடுத்து
ரெண்டு தோட்டாவும் பையிலெடுத்து
கொக்கு சுடப் போகும் வழியில்
என்ன சுட்டதென்ன Gunன்னு
இந்த கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு

அடுத்து என்னென்ன ஆயுதங்கள் புதிது புதிதாக வரப் போகின்றனவோ.. கவிஞர்கள் அவைகளையெல்லாம் பாட்டில் வைக்கப் போகிறார்களோ!

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – உன் கண்ணுக்குள்ள
வரிகள் – விவேகா
பாடியவர்கள் – ப்ரியா ஹிமேஷ், ஜாவித் அலி
இசை – தேவிஸ்ரீ பிரசாத்
படம் – சிங்கம்-2
பாடலில் சுட்டி – http://youtu.be/lRPjWUndJ6w

பாடல் – துப்பாக்கி கையிலெடுத்து
வரிகள் – நா.காமராசன்
பாடியவர் – இசைஞானி இளையராஜா
இசை – இசைஞானி இளையராஜா
படம் – கோடைமழை
பாடலின் சுட்டி – http://youtu.be/5duNvDDXJxc

அன்புடன்,
ஜிரா

227/365