மன்னவன் ஒருவன்

  • படம்: மன்மதன் அம்பு
  • பாடல்: நீல வானம்
  • எழுதியவர்: கமல் ஹாசன்
  • இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
  • பாடியவர்கள்: கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்
  • Link: http://www.youtube.com/watch?v=qfTB6KhPzHU

என்னைப்போலே பெண் குழந்தை,

உன்னைப் போலே ஒரு ஆண் குழந்தை,

நாம் வாழ்ந்த வாழ்வுக்குச் சான்றாவது

இன்னொரு உயிர்தானடி!

ஆங்கிலத்தில் ஒரே ஒரு பொருள், அல்லது மனிதர் அல்லது விலங்கைக் குறிப்பிடுவதற்கு ‘a’ மற்றும் ‘an’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். அதூவே பன்மையாக வந்தால் ‘few’, ‘some’, ‘many’ என்பதுபோன்ற சொற்கள் உள்ளன.

இவற்றுக்கு இணையாகத் தமிழில் உள்ள சொற்கள்: ‘ஒரு’, ‘ஓர்’, ‘சில’, ‘பல’…

உதாரணமாக, “a ball” என்பது ”ஒரு பந்து” என மாறும், “few balls” என்பது “சில பந்துகள்” என்று ஆகும், “an ant” என்பது “ஓர் எறும்பு” என எழுதப்படும்.

இந்தச் சொற்களைப் பயன்படுத்தும்போது ஒரே ஒரு பிரச்னை, ‘ஒரு’ அல்லது ‘சில’ என்றால் அது உயர்திணையா, அஃறிணையா, ஆணா, பெண்ணா என்று வித்தியாசம் காணமுடியாது.

ஆங்கிலத்தில் இதற்குத் தீர்வு கிடையாது. தமிழில் உண்டு.

ஒரு பந்து, ஓர் எறும்பு என்ற சொற்களைத் தமிழில் வேறுவிதமாகவும் சொல்லமுடியும்: பந்து ஒன்று, எறும்பு ஒன்று.

அப்படியானால், ‘ஒரு ராஜா’, ‘ஒரு ராணி’ என்பதை எப்படி எழுதுவது?

‘ராஜா ஒருவன்’, ‘ராணி ஒருத்தி’.

‘சில ராஜாக்கள்’ என்பதை?

‘ராஜாக்கள் சிலர்’!

ஆக, பெயர்ச்சொல்லுக்கு முன்னால் ஒரு, ஓர், சில, பல போன்றவற்றைப் பயன்படுத்தாமல், அதைத் தூக்கிப் பெயர்ச் சொல்லுக்குப் பின்னால் போட்டால், ஒருவன், ஒருத்தி, ஒன்று, சிலர், சிலது, பலர், பலது என்று அது பலவிதமாக மாறி, சம்பந்தப்பட்ட பெயர்ச் சொல் ஆணா அல்லது பெண்ணா, உயர்திணையா அல்லது அஃறிணையா, ஒருமையா அல்லது பன்மையா என்றெல்லாம் அழகாகக் காண்பித்துவிடுகிறது.

சொல்லப்போனால், உயர்திணைக்கு ‘ஒரு’, ‘ஓர்’, ‘சில’, ‘பல’ போன்றவற்றைப் பயன்படுத்தவே கூடாது என்கிறார்கள். ‘ஒரு மன்னன்’ என்பதைவிட ‘மன்னன் ஒருவன்’ என்பதுதான் சரியாம். இதற்கு இலக்கண நெறிகள் எதையும் கண்டதில்லை. ஆனால் இதுதான் மரபு என்று வாசித்துள்ளேன்.

அந்த மரபுப்படி, நீல வானத்தின்கீழ் இந்தக் காதலனும் காதலியும் விரும்புவது, ஒரு பெண் குழந்தை, ஓர் ஆண் குழந்தை அல்ல, ஆண் குழந்தை ஒருவன், பெண் குழந்தை ஒருத்தி!

***

என். சொக்கன் …

21 09 2013

294/365