இன்னொரு நேசம்

அவனுக்கும் முன்பு திருமணம் ஆகியிருந்தது. அவளுக்கும் திருமணம் ஆகியிருந்தது. மனைவியைப் பறிகொடுத்தவன் அவன். கணவனால் துன்புறுத்தப்பட்டவள் அவள். கையிலோ சிறு குழந்தை.

ஏதோவொரு நெருக்கம். ஏதோவொரு ஏக்கம். சாப்பிட்டவர்களுக்கு திரும்பத் திரும்பப் பசிக்கும் என்பது உலகவிதியல்லவா! சாப்பிடாமல் இருப்பதும் தவறல்லவா!

தலைவாழையிலையிருக்கிறது. இலையில் பலவகை உணவுகள் இருக்கின்றன. சாப்பிடும் ஆசையும் இருக்கிறது. நன்றாகச் சாப்பிடும் உடல்வாகும் இருக்கிறது. ஆனாலும் சாப்பாடு அப்படியே இருக்கிறது.

கண்களில் பசி இருந்தாலும் கைகளில் ஏதோவொரு தயக்கம். ஆனால் இருவரும் பழகப் பழக அந்தத் தயக்கம் உடைகிறது. காதல் புரிகிறது.

நான் சொல்லிக் கொண்டிருப்பது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் உண்டாகும் பாடல் காட்சி.

பொதுவாக தமிழ்ச் சமூகத்தில் ஆணுக்கு இரண்டாம் காதல் என்பது இரவு முடிந்து பகல் வருவது போல இயல்பானது. ஆனால் பெண்ணுக்கு? வந்துவிட்டதே. அதுவும் எப்படி?

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்

தீயை உதறினால் என்னாவகும்? பக்கென்று பற்றிக் கொள்ளும். அப்படித்தான் பற்றி எரிகிறது அவளது உயிர். தீயென்றால் அணைக்கத்தான் வேண்டும். அணைப்பதற்கு அவன் வரவேண்டுமே!

அவன் வந்தான். ஆனால் அவள் உணர்வினில் வந்தான். ஒவ்வொரு அணுவிலும் கலந்தான். உணர்வில் மட்டும் கலந்தால் போதுமா?

உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்

பக்கத்தில்தான் அவன் இருக்கிறான். ஆனால் தொடமுடியவில்லை. கடலுக்கும் வானத்துக்கும் இடையே எவ்வளவோ தூரம். ஆனாலும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன. முட்டிக் கொள்கின்றன.

அருகினில் உள்ள தூரமே
அலைக்கடல் தீண்டும் வானமே

சுவாசிப்பதற்கு கூட காற்று வேண்டும். ஆனால் நேசிக்கத்தான் இதயத்தைத் தவிர எதுவுமே தேவையில்லை. அந்த நேசம் கூட ஒருமுறை மட்டும் தான் வரவேண்டுமா? மறுமுறை வரக்கூடாதா? காதல் போயின் சாதல் மட்டும் தானா? ஒருமுறைதான் காதல் வரும் என்பதுதான் தமிழ்ப் பண்பாடா? இல்லையென்றால் கண்ணதாசன் சொன்னது போல் மறுபடியும் வருமா?

நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா!
நேசமும் ரெண்டு முறை வாராதா!

காதல் வந்தாலும் கூடவே பண்பாட்டுக் கவலைகளும் ஒட்டிக் கொண்டு வந்துவிடும். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு. அவளுக்கும் அந்தக் கவலை உண்டு.

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்ணாடீ நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே!

தாமரை எழுதிய இந்தப் பாடலை படிக்கும் போது எனக்கு இன்னொரு திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது. மழலைப்பட்டாளங்கள் படத்தில் வரும் “கௌரி மனோகரியைக் கண்டேன்” என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல்.

அதிலும் கிட்டத்தட்ட இதே காட்சிதான். ஆறுகுழந்தைகளுக்குத் தாயான விதவைக்கும் ஆறு குழந்தைகளுக்கு தந்தையான மனைவியை இழந்தவனுக்கும் இடையே காதல் வருகிறது. அந்த நாயகியும் வேட்டையாடு விளையாடு நாயகியைப் போலத்தான் புலம்புகிறாள்.

பருவங்கள் சென்றாலும் ராதை
அவள் கவிராஜ சங்கீத மேதை
கண் முன்பு அழகான ஆண்மை
நான் கல்லல்ல கனிவான பெண்மை
பண்பாடு என்பார்கள் சிலரே
இந்தப் பெண் பாடு அறிவார்கள் எவரே
என் பாடு நான் தானே அறிவேன்
உயர் அன்போடு மனம் போல இணைந்தேன்

இப்படியாக ஏக்கப் பெருமூச்சு நாயகிகளைக் காதலிக்காத விடாத பண்பாட்டையும் சமூகத்தையும் என்ன சொல்வது! காதலிக்க வேண்டியவர்களை காதலிக்க விடாததாலோ என்னவோ குழந்தைக் காதலும் பொறுப்பற்ற விடலைக் காதலுமே காதல் என்று ஆகிவிட்டது.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – உயிரிலே என் உயிரிலே
வரிகள் – தாமரை
பாடியவர் – ஸ்ரீநிவாஸ், மகாலஷ்மி ஐயர்
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
படம் – வேட்டையாடு விளையாடு
பாடலின் சுட்டி – http://youtu.be/vNy2IQ7RD-M

பாடல் – கௌரி மனோகரியைக் கண்டேன்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – மழலைப் பட்டாளம்
பாடலின் சுட்டி – http://youtu.be/rn7wDu5IOe0

அன்புடன்,
ஜிரா

296/365