மாத்தி வாசி

பொருள்கோள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது ஒரு பாடலை எப்படியெல்லாம் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லும் இலக்கணம் அது.

சொற்கள் உள்ளது உள்ளபடியே வரிசையாகப் படித்து அப்படியே பொருள் கொண்டால் அது ஆற்றுநீர்ப் பொருள்கோள்.

அதே போல விற்பூட்டு பொருள்கோள் என்று உள்ளது. பூட்டுவிற் பொருள்கோள் என்றும் இதற்குப் பெயருண்டு.

அதாவது செய்யுளின் கடைசிச் சொல்லை அங்கிருந்து எடுத்து செய்யுளின் முதலில் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

என்னுடைய நண்பன் ஒருவன் பேசுவதெல்லாம் கூட இந்தப் பூட்டுவிற் பொருள்கோள் வகையில்தான் வரும். சற்றே நகைச்சுவையும் கிண்டலும் கலந்துதான் எப்போதும் பேசுவான் அவன். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்கள்.

அவனுக்கெல்லாம் உக்கார வெச்சு வெட்டனும்… தலைமுடிய. காடு மாதிரி வளந்திருக்கு.”

இதில் தலைமுடி என்பதை வரியின் முன்னால் சொன்னால் அதுவொரு சாதாரண கருத்து போல ஆகிவிடும். ஆனால் அதை வேண்டுமென்றே பின்னால் சொன்னதால் எதையோ ஆபாசமாகச் சொல்ல வருகிறான் என்று நினைத்து கடைசியில் சாதாரணமாக முடியும்.

இது போல முயற்சிகள் திரைப்படங்களிலும் நடந்தன. முதன்முதலில் கண்ணதாசன் இந்த முறையை கந்தன் கருணை திரைப்படத்தில் மிகச்சிறப்பாகச் செய்தார். அடுத்து கே.டி.சந்தானம் அகத்தியர் திரைப்படத்தில் பயன்படுத்தினார். அதற்குப் பிறகு 80களில் முழுக்க முழுக்க ஆபாசமாகவே ஒரு பாடல் வந்தது. “குத்துறேன் குத்துறேன்னு சொல்லிப்புட்டு குத்தாமதான் போறீங்களே.. பச்சைய” என்றெல்லாம் வரிகள் வரும். சரி. அதை விட்டு விட்டு முதல் இரண்டு முயற்சிகளைப் பார்ப்போம்.

கந்தண் கருணை படத்தில் அரியது பெரியது கொடியது இனியது என்று ஔவையாரின் பாடல்களை முருகன் பாடச் சொல்லிக் கேட்பது போல ஒரு காட்சி. இவையெல்லாம் ஆனதும் முருகன் “ஔவையே புதியது என்ன?” என்று முருகன் கேட்டதும் கவியரசரின் வரிகளைக் கே.பி.சுந்தராம்பாள் பாடுவார்.

என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா, உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

இப்படி அடுக்கி அடுக்கி எழுதியிருப்பார் கண்ணதாசன். இதற்குப் பிறகுதான் பாடலே தொடங்கும். இப்படி வேண்டுமென்று ஏ.பி.நாகராஜன் கேட்டு வாங்கினாரா என்று தெரியவில்லை. ஆனால் அகத்தியர் படத்தில் லேசாக இதே முயற்சியை கே.டி.சந்தானம் செய்திருப்பதிலிருந்து ஏ.பி.நாகராஜனுக்கு இந்த முயற்சி பிடித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இசையாய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

இந்தப் பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் டி.ஆர்.மகாலிங்கமும் மிக அருமையாகப் பாடியிருப்பார்கள்.

பொதுவாக ஆற்றுநீர்ப் பொருள்கோளாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய பாடல்களுக்கு நடுவில் இப்படியான விளையாட்டுகள் நிறைந்த இந்தப் பாடல்களையும் கேட்பது சுகமே.

இதுபோல நீங்கள் எங்கும் பயன்படுத்தியிருக்கின்றீர்களா? கேட்டிருக்கின்றீர்களா? படித்திருக்கின்றீர்களா? அவைகளை இங்கே எடுத்துச் சொல்லுங்களேன்.

பாடலின் சுட்டி
அரியது கேட்கின் (கந்தன் கருணை) –http://youtu.be/HYmH8wOZ4Yg
இசையாய் தமிழாய் (அகத்தியர்) – http://youtu.be/467Y_UeokDo

அன்புடன்,
ஜிரா

090/365