வென்றார் உண்டோ?

பெண் ஜென்மம் படம் எத்தனை பேருக்குத் தெரியும்? 1977ம் ஆண்டு ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த படம். பத்ரகாளி எடுத்து வெற்றி பெற்ற கையோடு எடுத்த படம் பெண் ஜென்மம். இந்தப் படத்துக்கும் இசை அப்போதைய புதியமுகமான இளையராஜாதான். ஆனால் படம் தோல்வியடைந்தது.

பத்ரகாளி படத்தில் வாலி எழுதிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” பாடல் இன்றும் மிகப் பிரபலம். ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் உரிமை நெருக்கம் அணைப்பு அனைத்தையும் அழகாகக் காட்டிய பாடல்.

அதே போலவொரு பாடலை பெண் ஜென்மம் படத்திலும் வைக்க விரும்பினார் அதே ஏ.சி.திருலோகச்சந்தர். அதே இளையராஜா. அதே வாலி. அதே பி.சுசீலா. அதே கே.ஜே.ஏசுதாஸ். பாடலிலும் அதே இனிமை. ஆனால் அதே கண்ணன் அல்ல. இந்த முறை முருகன்.

ஆனால் படத்தின் தோல்வி பாடலைப் பின்னடைய வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி. பதிவின் கருத்துக்கு வருவோம். அந்தப் பாடலின் தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்

செல்லப்பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
கோபத்தில் மனத்தாபத்தில்
குன்றம் ஏறி நின்றவன் (செல்லப்பிள்ளை
படம் – பெண் ஜென்மம்
பாடல் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா, கே.ஜே.ஏசுதாஸ்
இசை – இசைஞானி இளையராஜா
ஆண்டு – 1977

இந்தப் பாடலை இப்போது ஏன் எடுத்துப் பார்க்கிறோம்? இந்தப் பாடலின் நடுவில் வரும் ஒர் வரி என்னைச் சிந்திக்க வைத்தது. மனைவியின் புன்னகையை வியந்து கணவன் பாடுகிறான் இப்படி.

மன்மதன் கணை ஐவகை
அதில் ஓர் வகை உந்தன் புன்னகை

இந்த வரிகளில் இருந்து மன்மதனின் கணைகள் ஐந்து வகையானவை என்று தெரிகிறது. பொதுவாக மன்மதனுக்குக் கரும்பு வில் என்றும் மலர்க்கணைகள் என்றும் நாம் அறிவோம். இதென்ன ஐந்து வகைக் கணைகள்?

இந்த ஐந்து கணைகளையும் விளக்க நான் இன்னொரு கவிஞரை துணைக்கு அழைக்கிறேன். அவர்தான் கே.டி.சந்தானம். கண்காட்சி திரைப்படத்தில் அவர் எழுதிய வரிகளை ஏ.பி.நாகராஜன் வசனநடையில் மெதுவாகச் சொல்ல அதன்பின் எல்.ஆர்.ஈசுவரி மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் பாடல் தொடரும்.

வெண்ணிலவை குடை பிடித்து வீசு தென்றல் தேரேறி
மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி கனகமணிப் பொற்பாவை
அன்ன நடை ரதியுடனே அழகுமதன் வில்லேந்தி
தண்முல்லை, தாமரை, மா, தனி நீலம், அசோகமெனும்
வண்ண மலர்க் கணை தொடுத்தான்
வையமெல்லாம் வாழ்கவென்றே!

அடடா! என்ன அழகான வரிகள். வாசிக்கவே சுவையாக இருக்கிறது. ஒரு நடையில் வாய்விட்டு சொல்லிப்பாருங்கள். கவிஞரின் எழுத்து நடையின் சிறப்பு புரியும். கே.டி.சந்தானம் ஒரு நடிகரும் கூட. ஏ.பி.நாகராஜன் படங்களில் எல்லாம் தவறாமல் இருப்பார். “என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம்” பாடலில் ஜெயலலைதாவின் தந்தையாக வருவார்.

மன்மதன் வைத்திருப்பது மலர்க்கணை என்றாலும் அதில் ஐவகை மலர்கள் உண்டு. அந்த ஐந்து மலர்களாவன முல்லை, தாமரை, மாம்பூ, நீலம் மற்றும் அசோகம். இந்த ஐந்து மலர்களில் ஒரு மலரைப் போல முந்தைய பாடலின் கதாநாயகியின் புன்னகை இருந்ததாம். அது எந்த மலரைப் போல என்று இப்போது ஊகிக்க எளிமையாக இருக்குமே!

காமதேவாய வித்மஹே புஷ்பபாணாய தீமஹி
தன்னோ அனங்க ப்ரசோதயா

பாடலின் சுட்டிகள்.
செல்லப்பிள்ளை சரவணன் (பெண் ஜென்மம்) – http://isaiaruvi.net/downloads/download.php?d=/Ilayaraja/Ilayaraja%20A-Z%20Songs/Part-11&filename=UGVuX0plbm1hbSBfLV9DaGVsbGFfUGlsbGFpX1NhcmF2YW5hbi0oSXNhaWFydXZpLk5ldCkubXAz&sort=0&p=0
அனங்கன் அங்கதன் (கண்காட்சி) – http://youtu.be/Z_UG7cmU6Do

அன்புடன்,
ஜிரா

083/365