விருந்தினர் பதிவு: உற்றார், உறவினர்

இன்றைக்கு காலையில் ஒரு திருமண அழைப்பிதழ் மின்னஞ்சலில் வந்தது. பாரம்பரிய வடிவ அழைப்பிதழ் ஆனால் வந்தது மின்னஞ்சலில். பழமையும் புதுமையும் என்பது இதுதான் இல்லையா. எல்லா அழைப்பிதழ்களிலும் இருக்கும் வழமையான வரி இதிலும் இருந்தது – உற்றார் உறவினருடன் வந்திருந்து தம்பதிகளை வாழ்த்த வேண்டும். இதைப் படிக்கும் பொழுது திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் ஞானப்பழத்தைப் பிழிந்து தரும் பழம் நீயப்பா பாட்டுதான் ஞாபகத்துக்கு வந்தது. அதில் வரும் ஒரு வரி

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு

கண்ணதாசன் கூட உறவுண்டு உற்றார் பெற்றாரும் உண்டுன்னு எழுதி இருக்கார். அது என்ன உற்றார், உறவினர்? உறவினர்ன்னா relatives அப்படின்னு பொதுப்படையாச் சொல்லிடறோம். அப்போ உற்றார்ன்னா யாரு? அவர்களும் relativesதான். ஆனா இது ரெண்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு.

உற்றார் என்பவர் ஒருவனின் பிறப்பால் அவனுக்கு சொந்தமானவர்கள். உறவினர் என்போர் அவனுடைய தேர்ந்தெடுப்பினால் வரும் சொந்தம். அதாவது திருமண பந்தம் மூலமாக வரும் சொந்தங்கள், ஏன் நண்பர்கள் கூட உறவினர்கள்தாம். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் Relatives by birth and Relatives by choice.

உறு என்றால் கிட்டு, கிடை என்று பொருள். உற்றது என்றால் கிட்டியது, கிடைத்தது. கண்ணுற்றேன், பயமுற்றேன்னு எல்லாம் சொல்லறோமே. அது இந்தப் பொருளில்தான். நம் பிறப்பால் நமக்கு கிட்டிய, கிடைத்த சொந்தங்கள் உற்றார். அவரைப் பெரியப்பாவா வெச்சுக்கறேன், இவங்களை சித்தி முறைக்கு சேர்த்துக்கறேன்னு சொல்ல முடியுமா? அதெல்லாம் சாய்ஸே கிடையாது. இவர்கள் உற்றார், நமக்குக் கிடைத்தவர்.

உறவுன்னு சொன்னா சம்பந்தம், நட்பு. இவர்கள் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நமக்கு யாரு மாமனாராய் வரணும்ன்னு நம்மால் தேர்ந்தெடுக்கமுடியும். நம்முடைய நண்பர்கள் யார் யார்ன்னு நம்மால் முடிவு செய்ய முடியும். இவர்கள் எல்லோரும் நம் உறவினர்கள். உறவு முறிய முடியும். ஆனால் உற்றது என்னிக்கும் மாறாது.

இதுதான் உற்றோருக்கும் உறவினருக்குமான வித்தியாசம். இன்னிக்கு உறவினர்கள் என்றால் சொந்தக்காரர்கள் என்றும் நண்பர்களை இவர்களில் இருந்து வேறுபட்ட ஒரு குழுவாகவும் மாத்திட்டோம். இந்த மாதிரி நுட்பமான வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமா இழந்துக்கிட்டு வரோம்.

போகட்டும். திரும்ப கண்ணதாசனுக்கு வரலாம். அந்த வரியைக் கண்டு நான் அதிசயிக்கக் காரணம் இந்த உற்றார் உறவினர் மேட்டர் மட்டும் இல்லை. அதில் சொல்லி இருக்கும் வரிசைதான். அதையும் பார்ப்போமா? முதலில் அந்த வரியை மீண்டும் ஒரு முறை படிக்கலாம் – ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு

ஊருண்டு – அதாவது ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு.
பேருண்டு – சாதிக்காரங்க. சாதியை பெயரில் சேர்த்துக் கொள்வதும் சரி. குறிப்பிட்ட பெயர்களை கொள்வதாலும்கூட
உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும்
சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம்
உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம்
பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா

பாருங்க.. ஊர்ல ஆரம்பிச்சு.. பொறந்த தாய்மடி வரைக்கும் படிப்படியா ஜூம் பண்றாப்பல இல்ல இந்த வரி? இதை அவர் யோசிச்சு எழுதினாரா இல்லை அப்படியே வந்து விழுந்த சொற்களான்னு தெரியாது. ஆனா இப்போ படிக்கும் பொழுது அவரைப் பற்றிச் சொல்லத் தோன்றுவது – ப்ரில்லியண்ட்!

இலவசக் கொத்தனார்

ட்விட்டரில் ‘வாத்தி’ என்று செல்லமாக விளிக்கப்படும் இலவசக் கொத்தனார் கோட்டும் டையும் அணிந்த நவீன சீத்தலைச் சாத்தனார். இணையத்தில் எழுத்துப் பிழைகளுக்கே முகம் சுளிக்கிற, இலக்கணப் பிழைகளைத் திருத்த முற்படுகிற மைனாரிட்டி அப்பாவிகளில் ஒருவர். இன்னொருபக்கம், சிலேடை, வெண்பா, வார்த்தை விளையாட்டு, ’எல்லா வார்த்தைகளும் தமிழில் இருந்து சென்றவைதான்’ என்கிற ரேஞ்சுக்கு நகைச்சுவைப் பதிவுகள் எனக் கலவையான ரசனை கொண்டவர். இவரது சமீபத்திய நூலான ‘ஜாலியா தமிழ் இலக்கணம்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் செம ஹிட்!

இலவசக் கொத்தனாரின் வலைப்பதிவு: http://elavasam.blogspot.in/