பிள்ளைக் கனியமுதே

கொஞ்சுவதற்குத் தகுந்த குழந்தை எது? ஆண்குழந்தையா? பெண்குழந்தையா?
கைக்குழந்தையாக இருவரும் கொஞ்சுவதற்குச் சுகமானவர்கள் என்றாலும், ஆண்குழந்தைகள் வளரவளர விளையாடத் தெருவுக்கு ஓடும்.
ஆனால் பெண் குழந்தைகள்?
விளையாடச் சொப்பு வாங்கிக் குடுக்கலாம்
விதவிதமாக நிறம்நிறமாகப் பொட்டு வைத்துப் பார்க்கலாம்
மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா, கனகாம்பரம் என்று நாளுக்கொன்றாய் பூ வைத்துப் பார்க்கலாம்
பட்டுப் பாவாடையும் சட்டையும் கட்டி அழகு பார்க்கலாம்
கைக்கு வளையல், காலுக்குக் கொலுசு, இடுப்புக்கு மேகலை, நெஞ்சு வரை சங்கிலி, கழுத்துக்குப் பதக்கம், காதுக்குத் தோடு, நெற்றிக்குச் சுட்டி என்று நகைகளைப் பூட்டி ரசிக்கலாம்
நீண்ட கூந்தலுக்குச் சிக்கெடுத்து சீர்படுத்தி தைலம் தேய்த்து குஞ்சலம் வைத்துப் பின்னலாம்.
இதையெல்லாம் செய்ய வசதியில்லாவிட்டாலும் காட்டுத் தாழம்பூவைப் பிரித்துக் கூந்தலில் சேர்த்துக் கட்டி அழகு பார்க்கலாம்
குளிர்ந்த மையை கண்களில் தீட்டி மானோ மீனோ என்று சந்தேகப்படலாம்
அந்த மையையே விரலோரத்தில் வழித்து கண்ணத்தில் லேசாக இழுகி திருஷ்டிப் பொட்டு வைக்கலாம்
இப்படிப் பெண்குழந்தைகளைக் கொஞ்சுவதற்கும் சீராட்டுவதற்கும் ஆயிரம் வழிகள். பையன்கள் ஒரு வயதுக்கு மேல் தலையைச் சீவக்கூட விட மாட்டார்கள்.
இத்தனைக்கும் மேலாக தந்தைக்கு நெருக்கம் பெண்பிள்ளைகளே.
பாரதியும் பெண்ணைப் பெற்றவனே.  அதனால்தான் ”கண்ணன் என் குழந்தை” என்று எழுதாமல் ”கண்ணம்மா என் குழந்தை” என்று கவிதை எழுதினானோ!
சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே – உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !
பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே – என் முன்னே
ஆடி வருந் தேனே !
ஓடி வருகையிலே – கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !
உச்சி தனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !
கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !
சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !
”ஒரு குழந்தையைக் கொஞ்சுற சிச்சுவேஷன். இதுக்கு ஒரு பாட்டு வேணும்” என்று இயக்குனர்கள் சொல்லி நிறைய வாட்டி கேட்டிருப்பார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.
“ஒரு குழந்தையைக் கொஞ்சுற சிச்சுவேஷன். அதுக்கு இதுதான் பாட்டு. இதுக்கு மெட்டமைக்கனும்” என்று மெல்லிசை மன்னர் கேட்டது இந்தப் பாடலுக்காகத்தான் இருக்கும்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படங்களுக்கு 1980களில் இசையமைத்தவர் மெல்லிசை மன்னர். அந்தக் கூட்டணியால் நமக்குக் கிடைத்த அருமையான பாடல்தான் “சின்னஞ் சிறு கிளியே” என்ற பாரதியார் பாடல். இடம் பெற்ற படம் “நீதிக்குத் தண்டனை”.
ஒருமுறை நண்பர்களோடு தஞ்சாவூர் சென்றிருந்தேன். பெரிய கோயிலில் மாலை நேரத்தில் ஒரு இசைக்கச்சேரி. அதில் இந்தச் சின்னஞ்சிறு கிளியே பாடலைப் பாடினார்கள். பாடகர் பாடிய வேகத்திலும் மத்தளத்தைக் கொட்டு கொட்டுடென்று கொட்டிய வேகத்திலும் ஒரு குழந்தை எழுந்து ஆடத் தொடங்கிவிட்டது. ஆட வேண்டிய பாட்டா இது?
அப்படியெல்லாம் இல்லாமல் பாடலின் தன்மைக்கேற்ப அற்புதமாக இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.
இந்தப் பாடலின் வழியாக ஒரு புது பாடகியும் தமிழ்த் திரையிசைக்குக் கிடைத்தார். அவர்தான் சுவர்ணலதா. ”சரவணப் பொய்கையில் நீராடி” என்று சுசீலாம்மா பாடிய முருகன் பாடலைப் பாடிக் காட்டி மெல்லிசை மன்னரிடம் இந்த வாய்ப்பைப் பெற்றவர் சுவர்ணலதா. அவரோடு சேர்ந்து பாடியிருப்பவர் கே.ஜே.ஏசுதாஸ்.
இந்தப் பாடலை இந்தச் சுட்டியில் கேட்டு ரசிக்கலாம் -> http://www.youtube.com/watch?v=AaLYIYMyqSE
இந்தப் பாடலில் வரும் “உன் கண்ணில் நீர் வழிந்தால்” என்ற வரிகளைத் தொடக்க வரிகளாக எடுத்துக் கொண்டு கவியரசர் கண்ணதாசன் வியட்நாம் வீடு திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதினார்.
உன்கண்ணில் நீர்வழிந்தால் – எந்நெஞ்சில்
உதிரம் கொட்டுதடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? – கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?
இன்னொரு கலைஞனை ஈர்த்து சிந்தனையைத் தூண்டிவிடுவதுதான் படைப்பு. மற்றதெல்லாம் எழுத்துப்புடைப்பு. பாரதியின் எழுத்துகள் பாரதிதாசன் கண்ணதாசன் போன்ற பெருங்கவிகளை மட்டுமல்ல பலரை ஈர்த்துச் சிந்தனையைத் தூண்டியிருக்கிறது என்பதே உண்மை.
பாரதியின் பிறந்தநாளான இன்று இந்தப் பாடலைப் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.
அன்புடன்,
ஜிரா
010/365