கன்னத்தில் முத்தமிட்டால்

கொஞ்ச வேண்டும் என்ற சூழல் வந்தால் கன்னத்தைத் தொடாத கவிஞன் இல்லை.

கண்ணம்மா என் குழந்தை என்று எழுதிய பாரதியும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிடுவது கள்வெறி கொடுக்கும் மயக்கத்தைக் கொடுப்பதைக் குறிப்பிடுகிறான்.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
படம் – நீதிக்கு தண்டனை
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

பாரதி இப்படிச் சொல்லியிருக்க, கண்ணாதாசனா கன்னதாசனா என்று ஐயத்தை உண்டாக்கும் வகையில் பாடல்களை எழுதியிருக்கிறார். கன்னம் என்பதே தித்திப்பது என்பது அவர் கருத்து.

முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
படம் – நெஞ்சிருக்கும் வரை
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

பார்க்கப் பார்க்க மின்னும் கன்னம் பருவப் பெண்ணின் கன்னம் என்பதை ரசித்தவர்தானே கண்ணதாசன். அதுதான் இந்தப் பாடலில் இப்படி வெளிப்படுகிறது.

பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
படம் – பாசம்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

தித்திக்கும் கண்ணம் என்று சொல்லியாகி விட்டது. ஆனால் கன்னம் ஒரு கிண்ணம் என்றும் அந்தக் கிண்ணத்திலே கறந்த பாலின் சுவையிருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை

கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
படம் – புதிய பூமி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

தங்கமானது கன்னம் என்றால் காதல் விளையாட்டில் அதில் சேதாரம் இருக்கும் என்பது தெரிந்தவரும் அவர்தான். அதனால்தான் கன்னத்தில் என்னடி காயம் என்று குறும்போடு கேட்கிறார்.

கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
படம் – தனிப்பிறவி
இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடிக்கும் நாடகம் என்ன
படம் – சிஐடி சங்கர்
இசை – வேதா

நாணத்தில் மின்னும் கன்னம் காதல் சோகத்திலும் கண்ணீர் சேர்ந்து மின்னும் என்றும் தெரிந்து வைத்திருக்கிறார் கண்ணதாசன்.

நினைவாலே சிலை செய்து
உனக்கான வைத்தேன்.. திருக்கோயிலே ஓடி வா
..
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்
படம் – அந்தமான் காதலி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

கவியரசர் மட்டுந்தானா இப்படி? அடுத்து வந்த வாலியின் கை வண்ணத்து கன்னத்து அட்டகாசங்களைப் பார்ப்போம்.

கன்னத்தை அத்திப்பழம் என்று உவமிக்கும் வாலி.. அந்தப் பழத்தைக் கிள்ளி விடவா என்று கேட்கிறார். மெல்லிய நண்டின் கால் பட்டாலே சிதைந்து போகும் மென்மையான பழம் அத்தி என்று அகநானூறு சொல்கிறது. கன்னத்தை அப்படியொரு பழத்துக்கு ஒப்பிடுவதும் அழகுதான்.

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சிமகள் வாய்திறந்து சொன்ன மொழியோ

அத்திப்பழக் கன்னத்திலே கிள்ளி விடவா
படம் – தெய்வத்தாய்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

அத்திப் பழம் என்று உவமித்த அதே வாலி கன்னத்தை மாம்பழம் என்றும் சொல்லத் தவறவில்லை. மரத்தில் பழுக்கும் அந்த மாம்பழங்களை விட காதலியின் கன்ன மாம்பழங்களைத்தான் காதலன் விரும்புவானாம்.

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை
இந்தக் கன்னம் வேண்டும் என்றான்
படம் – எங்க வீட்டுப் பிள்ளை
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

பழம் என்று சொன்னால் அணில் கடித்து விடுமோ என்று நினைத்தாரோ என்னவோ… தாமரைப் பூவைப் போன்ற கன்னங்கள் என்றும் வர்ணித்து விட்டார். அந்தத் தாமரைக் கன்னம் என்னும் கிண்ணத்தில்தானே தேன் இருக்கிறது.

தாமரைக் கன்னங்கள்
தேன்மலர்க் கிண்ணங்கள்
படம் – எதிர் நீச்சல்
இசை – வி.குமார்

கண்ணதாசன் கன்னத்தில் என்னடி காயம் என்று கேட்டால்… வாலியோ கன்னத்து முத்தங்களால் கன்னிப் போகும் கன்னங்களே அத்தானின் அன்புக்கு அடையாளச் சின்னங்கள் என்று அடித்துச் சொல்கிறார்.

அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
அழகான கன்னத்தில் அடையாளச் சின்னங்கள்
படம் – உயர்ந்த மனிதன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

நறுந்தேனை கிண்ணத்தில் வடித்து எடுத்து வருகிறாள் ஒருத்தி. அதெல்லாம் எதற்கு? உன் கன்னத்தில் தேன் குடித்தால் ஆயிரம் கற்பனை ஓடி வராதா என்று ஏங்குகிறது கவிஞனின் உள்ளம்.

கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை ஓடி வரும்
படம் – இளமை ஊஞ்சலாடுகிறது
இசை – இசைஞானி இளையராஜா

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
படம் – பத்ரகாளி
இசை – இசைஞானி இளையராஜா

கன்னத்தை பழமென்றும் பூவென்றும் வர்ணிக்க கண்ணதாசனாலும் வாலியாலும் மட்டுந்தான் முடியுமா? இதோ இருக்கிறார் வைரமுத்து.

தொட்டுரச தொட்டுரச மணக்கும் சந்தனம். அப்படியான சந்தனக் கிண்ணமடி உன் கன்னம். அதைத் தொட்டுரசி தொட்டுரசி மணக்குதடி என் கைகள் என்று கவிதையை அடுக்குகிறார்.

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
படம் – சிவப்புமல்லி
இசை – சங்கர் கணேஷ்

தொட்டுப் பார்த்தால் பளபளப்போடு வழவழக்கும் பட்டை கன்னத்திற்கு ஒப்பிடாமல் போவாரோ கவிஞர்.

பட்டுக் கன்னம்
தொட்டுக் கொள்ள
ஒட்டிக் கொள்ளும்
படம் – காக்கிச்சட்டை
இசை – இசைஞானி இளையராஜா

கண்ணுக்கு மையழகு.. என்று சொல்லும் போது கன்னத்தில் குழியழகு என்று எழுதிய வைரமுத்து ஒரு கிராமத்துக் காதலைச் சொல்லும் போது கன்னத்தில் கன்னம் வைத்த காதலனைப் பற்றியும் சொல்கிறார்.

காக்கிச்சட்ட போட்ட மச்சான்
கன்னத்திலே கன்னம் வெச்சான்
படம் – சங்கர் குரு
இசை – சந்திரபோஸ்

தன்னுடைய குழந்தை கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில்ஜில்ஜில்ஜில் என்று எழுதியதும் இதே வைரமுத்துதான். ஆனாலும் காதல் குறும்பில் கன்னத்தில் முத்தமிட வரும் காதலனின் கன்னத்தில் தேளைப் போலக் கொட்டுவேன் என்றா எழுதுவது! உயிர் போக்கும் வலி அல்லவா அது!

நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்
நெய்விளக்க ஏந்திக்கிட்டேன்
உன்னோட கன்னத்திலே முத்தம் குடுக்க
..
கன்னத்திலே தேளப் போலே கொட்டி விடுவேன்
படம் – ஸ்டார்
இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

அன்புடன்,
ஜிரா

041/365