ஒரு துளி தேன்!
ஒரு மிகப்பிரபலாமான கதை. கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
ஒருவன் காட்டு வழியே சென்றான். திடீரென்று பெண் சிங்கமொன்று துரத்தியது. தப்பிக்க ஓடினான். ஆலமரம் ஒன்று வழியில் வந்தது. அதன் விழுதைப் பிடித்து ஏறினான். பாதி விழுது ஏறும் போதுதான் மரத்திலிருந்த மலைப்பாம்பைக் கவனித்தான். மேலே போனால் பாம்பு. கீழே இறங்கிலாம் பெண் சிங்கம்.
தப்பிக்க வழியில்லாமல் அந்த விழுதில் தொங்கினான். அப்போது ஆலமரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டியது. அந்தத் துளி நாக்கில் விழுந்ததும் அவன் அதை ரசித்து ருசித்தான்.
அந்த மனிதனின் நிலமைக்குப் பெயர்தான் வாழ்க்கை. பிறப்பும் எளிதில்லை. வாழ்வும் எளிதில்லை.
ஆனால் அந்த ஒரு துளி தேனைச் சுவைக்கும் போது மலைப்பாம்பையும் பெண்சிங்கத்தையும் அவன் மறந்தது போல சிற்சில இன்பங்களில் வாழ்வியல் துன்பங்களை நாம் மறந்திருக்கிறோம்.
இந்த உண்மை நமக்குப் புரிந்தால் நாம் அமைதியாவோம். முடிந்தவரை நல்லவராவோம்.
புரியாதவர்கள் ஆடித் தீர்த்து விடுவார்கள். எதெற்கெடுத்தாலும் பிரச்சனை. எல்லாவற்றிலும் தவறு. அடுத்தவருக்கு முடிந்த வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுத்தல். கொள்ளையடித்தல். கொலை செய்தல். அரசியல் பிழைத்தல். வஞ்சகம் செய்தல். இன்னா செய்தல். நாவினால் சுடுதல். அமைதியைக் குலைத்தல். நீர்நிலைகளைக் கெடுத்தல். இயற்கையை அழித்தல். குழந்தைகளைத் துன்புறுத்துதல். இன்னும் எத்தனையெத்தனையோ தவறுகள்.
ஆடித் தீர்த்துவிடுகிறது மக்கள் கூட்டம். ஆனால் எதுவும் தொடர்வதில்லை. ஒரு நாளில்.. ஒரு நிமிடத்தில்… அல்ல அல்ல. ஒரு நொடியில் அந்த ஆட்டம் அமைதியாகி விடுகிறது.
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்று எழுதினார் உவமைக் கவிஞர் சுரதா. அத்தனை ஆட்டங்களும் அடங்குவதற்குத் தேவை ஒரேயொரு நொடிதான் என்பது மனிதனின் மிகப்பெரிய பலவீனம்.
அந்த பலவீனத்தினால் உண்டாவது அச்சம். இறப்பின் மீதான அச்சம். அந்த அச்சம் ஏழைகளுக்கு மட்டும் வருவதல்ல. வேறுபாடே இல்லாமல் அரசன் முதல் ஆண்டி வரைக்கும் வியாபாரி முதல் விவசாயி வரைக்கும் வருவதுதான்.
யோகிக்கும் உண்டு அந்த அச்சம். அச்சத்தைப் போக்கவும் மறைக்கவும் அவன் செய்வதுதான் யோகம். அதையே போகி வேறுவிதமாகச் செய்கிறான். போகத்தில் தன்னை மறைத்து இறப்பின் அச்சத்தைத் தள்ளிப் போடுகிறான்.
அந்த அச்சம் இறப்பின் மீது மட்டுமல்ல… அது தொடர்பான அனைத்தின் மீதும் உண்டாகிறது.
உலகத்திலேயே மிக மிக அமைதியான இடம் ஒன்று உண்டு. அங்கு சண்டை இல்லை. சச்சரவு இல்லை. மேலோர் இல்லை. கீழோர் இல்லை. செல்வந்தன் இல்லை. ஏழை இல்லை. எந்தப் பிரச்சனையுமே இல்லாத அமைதியான இடம் அது.
ஆம். இடு/சுடுகாடுதான் அது. அங்கு யாரையாவது தனியாகப் போகச் சொல்லுங்கள். போகவே மாட்டார்கள். அந்த இடத்தைப் பற்றி கவிஞர் மருதகாசி அழகாக எழுதினார் ரம்பையின் காதலுக்காக படத்தில். பாடலுக்கு இசையமைத்தவர் டி.ஆர்.பாப்பா.
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
அமைதியே இல்லாமல் ஓயாமல் சிந்தித்துச் சிந்தித்துக் குழப்பிக் கொண்ட எத்தனையோ உள்ளங்கள் அமைதியானது அங்குதான்.
ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
மனித வாழ்வில் இல்லாத அமைதியும் ஒற்றுமையும் பாகுபாடின்மையும் நிலவுவது அந்த ஒரு இடத்தில்தான்.
சரி. இந்தப் பதிவைப் படிக்கும் போதே மனம் இவ்வளவு அமைதியாகிறதே… ஒரு மெல்லிய சோகம் மனதில் படிகிறதே. அப்படியிருக்க இந்த அச்சத்தை எப்படி வெல்வது? வெற்றி கொள்வது?
புத்தபிக்குகள் எப்போதும் சோகமாக இருப்பார்களாம். ஏன்? பின்னால் நிகழப் போவதுக்கு முன்னாலேயே சோகம் அனுபவிப்பார்கள். துறவிகள் அனைத்தையும் துறந்து தவம் செய்யப் போய்விடுவார்கள்.
நாமும் அப்படிச் சோகமாக இருக்கத்தான் வேண்டுமா? துறவு கொள்ளத்தான் வேண்டுமா? வேறுவழியே கிடையாதா? ஆண்டவனுடைய திருவடியைப் பற்ற வேண்டும் என்று எல்லா மதங்களும் சொல்கின்றன.
காலக்கணக்கை முடிப்பதற்கு காலன் வந்தால் தானே அச்சம் வரும். ஆண்டவனே வந்தால்?
எத்தனையோ யோகிகளும் சித்தர்களும் முனிவர்களும் காணக்கிடைக்காத அந்த அருட்பெருஞ்சோதியே வந்தால்?
அப்படி ஒரு வழியைத்தான் அருணகிரியும் சொல்லிக் கொடுக்கிறார்.
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காலன் எனை அணுகாமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே
அன்புடன்,
ஜிரா
302/365
rajinirams 2:55 pm on September 29, 2013 Permalink |
வாழ்வியல் தத்துவத்தை எளிமையாகவும் அழகாகவும் எடுத்து “காட்டு”ம் அருமையான பதிவு. “சமரசம் உலாவும் இடமே”-மருதகாசியின் என்ன அறுபுதமான வரிகள்.முகராசி படத்தில் இடம்பெறும் கவியரசரின் வரிகளும் அருமையாக இருக்கும்-பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்,அந்த பட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான்,அதில் எட்டடுக்கு மாடி வைத்து கட்டிடத்தை எட்டடி நின்று படுத்தான்,மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்-உண்டாக்கி வெச்சவங்க ரெண்டு பேரு-இங்கே கொண்டு வந்து போட்டவங்க நாலு பேரு. கவிஞர் வைரமுத்துவின் “கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே-இந்த வாழ்க்கை வாழ தான்,கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல”வரிகளும் சிந்தனையை தூண்டுபவை.”இறைவனின் திருவடியை பற்றுவதே சரி”என்ற அருணகிரியாரின் பாடலை சொன்னது முத்தாய்ப்பு.
Uma Chelvan 5:06 pm on September 29, 2013 Permalink |
ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு…………..எனக்கு மிகவும் பிடித்த பாடல் “பட்தீப்” ராகத்தில் !! மரணம் என்பது எல்லோருக்கும் பொது!! ஆனால் “எங்கே” ” எப்படி” என்பதுதான் பெரிய கேள்விகுறி? அதில் தான் இறைவனும் இருக்கிறான்!!!!! .
amas32 4:00 pm on October 1, 2013 Permalink |
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்ற பாட்டும் வாழ்வு முடிந்ததும் எல்லோருக்கும் ஒரே நிலை தான் என்று சொல்ல வருகிறது. அதற்காக முதலில் இருந்தே வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்க முடியாது. தலை கால் புரியாமல் ஆடாமல், நல்ல எண்ணங்களையும் செயல்களையும் செய்து வந்தால் முடிவும் அமைதியானதாக இருக்கும்.
amas32