மீனாக் கண்ணு!
- படம்: பூந்தோட்டக் காவல்காரன்
- பாடல்: சிந்திய வெண்மணி
- எழுதியவர்: கங்கை அமரன்
- இசை: இளையராஜா
- பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா
- Link: http://www.youtube.com/watch?v=e_fCjI0YTX0
சேலாடும் கண்ணில், பாலூறும் நேரம்,
செவ்வானம் எங்கும், பொன் தூவும் கோலம்!
’சேல்’ என்ற வார்த்தையைப் பழைய (அதாவது, கருப்பு வெள்ளைப்) பாடல்களில் நிறைய கேட்கலாம். தமிழ் மொழி கொஞ்சம் நவீன வடிவத்தைப் பெற்றபிறகு, பேச்சுவழக்கில் இல்லாத காரணத்தாலோ என்னவோ, திரைக் கவிஞர்கள் இந்த வார்த்தையை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார்கள்.
அபூர்வமாக, கங்கை அமரன் இதைப் பயன்படுத்தியிருக்கிறார், மிக அழகான உவமையாக!
‘சேல்’ என்றால் கெண்டை மீன். அந்த மீனைப்போன்ற பெரிய, அகன்று விரிந்த கண்களைக் கொண்ட பெண்ணைச் ‘சேல்விழியாள்’ என்று சொல்வார்கள்.
உதாரணமாக, திருப்புகழ் பாடல் ஒன்றில் அருணகிரிநாதர் வள்ளியை இப்படி வர்ணிக்கிறார்: கொஞ்சு வார்த்தை கிளி, தண் கண் சேல், குன்ற வேட்டிச்சி!
அதாவது, கிளிபோல் கொஞ்சுகிற வார்த்தைகளையும், தண்ணீரில் எந்நேரமும் மிதப்பதால் குளிர்ந்திருக்கும் கெண்டை மீனைப்போன்ற கண்களையும் கொண்ட, குன்றில் வாழ்கிற வேடுவப் பெண்!
கங்கை அமரனின் சொல்லாட்சி ஒருபுறமிருக்க, இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரி, ‘பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்’. கர்ப்பம் தாங்குதலை இதைவிட எளிமையாகவும் சுருக்கமாகவும் உயர்வாகவும் சொல்லிவிடமுடியுமா என்ன!
***
என். சொக்கன் …
26 06 2013
207/365
amas32 8:55 pm on June 26, 2013 Permalink |
//‘பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்’. கர்ப்பம் தாங்குதலை இதைவிடச் சுருக்கமாகவும் உயர்வாகவும் சொல்லிவிடமுடியுமா என்ன!// எடுத்துக் காண்பித்ததற்கு நன்றி 🙂
//சேலாடும் கண்ணில், பாலூறும் நேரம்,// சேலின் அர்த்தம் புரிந்தது ஆனால் இந்த வரியின் பொருள் புரியவில்லை. கண் கிறங்குகிறது என்ற பொருளோ?
amas32
என். சொக்கன் 9:54 pm on June 26, 2013 Permalink |
//கண்ணில் பாலூறும்// விழிகளில் தாய்மை உணர்வு ததும்பும் என்று சொல்வதாக நான் புரிந்துகொள்கிறேன், அர்த்தம் அதுதானா என்று தெரியவில்லை
rajnirams 7:51 pm on June 27, 2013 Permalink |
sale, சேலை என்று அறிந்திருந்த எனக்கு “சேல்” வார்த்தையின் “மீனி”ங்கை சொன்னதற்கு நன்றி. இவ்வளவு நாள் “வாலி”எழுதியது என்றே நினைத்திருந்தேன்.அந்த படத்தின் எல்லா பாடல்களும் கங்கை அமரன் என்று இப்போது தான் தெரிந்தது. அற்புதமான வரிகள் கொண்ட பாடல். நன்றி.