குற்றால நிலவு

  • படம்: உலகம் சுற்றும் வாலிபன்
  • பாடல்: நிலவு ஒரு பெண்ணாகி
  • எழுதியவர்: வாலி
  • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=drcBFuf2y8U

புருவம் ஒரு வில்லாக, பார்வை ஒரு கணையாக,

பருவம் ஒரு தளமாக, போர் தொடுக்கப் பிறந்தவளோ!

குறுநகையின் வண்ணத்தில், குழி விழுந்த கன்னத்தில்,

தேன் சுவையைத்தான் குழைத்து, கொடுத்ததெல்லாம் இவள்தானோ!

பெண்களின் வளைந்த புருவத்தை வில்லுக்கு ஒப்பிடுவது பழைய மரபு. அந்த வில்லில் எய்யப்படுகிற அம்பாக அவர்களுடைய விழிகளை வர்ணித்து, அதன்மூலம் ஆண்கள்மீது பெண்கள் போர் தொடுப்பதாகக் கற்பனை செய்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. செய்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.

உலகம் சுற்றும் வாலிபன், குற்றாலத்துக்கு வரமாட்டானா என்ன? திரிகூட ராசப்பக் கவிராயரின் அந்தக் கற்பனையை மிக அழகான இந்த வர்ணனைப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் வாலி.

பால் ஏறும் விடையில் வரும் திரிகூடப்பெருமானார் பவனி காணக்

கால் ஏறும் காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் கன்னிமார்கள்

சேல் ஏறும் கலக விழிக் கணை தீட்டிப், புருவ நெடும் சிலைகள் கோட்டி,

மால் ஏறப் பொருதும் என்று மணிச் சிலம்பு முரசு அறைய வருகின்றாரே!

’பால் ஏறும் விடை’ என்றால், பால் போன்ற வெள்ளை வண்ணத்தைக் கொண்ட எருது, அதன்மீது ஏறிப் பவனி வருகிறார் திரிகூடப் பெருமான், அதாவது, சிவன்.

அவருடைய பவனியை வேடிக்கை பார்க்கப் பல பெண்கள் வருகிறார்கள். அவர்களெல்லாம் யார் தெரியுமா?

’கால் ஏறும் காமன்’, அதாவது காற்றில் பறந்து வரும் மன்மதன், அவனுடைய படையில் உள்ள வீராங்கனைகள்தான் இந்தப் பெண்கள்.

வெறும் வீராங்கனைகள்மட்டும் போதுமா? சண்டை போட ஆயுதம் வேண்டாமா?

ஆயுதம் இல்லாமலா? மீன் போன்ற அவர்களுடைய விழிகள்தான் அம்புகள், அவற்றால் ஒரு பார்வை பார்த்தால் போதும், உலகம் கலகமாகிவிடும்!

அப்படிப்பட்ட அம்பை நன்கு தீட்டி, புருவம் என்கிற நீண்ட வில்களில் பொருத்தி எய்யத் தயாராகிறார்கள் அந்தப் பெண்கள். அந்த அம்பால் தாக்கப்பட்ட ஆண்கள், உடனே மயங்கி விழவேண்டியதுதான்.

வீராங்கனைகள் ரெடி, ஆயுதமும் ரெடி, போர் அறிவிக்க முரசு வேண்டாமா?

அதுவும் உண்டு. அவர்களுடைய கால்களில் உள்ள மணிச் சிலம்புகளின் சத்தம்தான், மன்மத யுத்தம் தொடங்கப்போவதற்கான அறிவிப்பு.

இனி, ஆண்கள் கதி என்னாகும்?

***

என். சொக்கன் …

09 03 2013

098/365